search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி: நேர்த்தியாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது- சித்தார்த்
    X

    சித்தார்த் 

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றி: நேர்த்தியாக பந்து வீசியது மகிழ்ச்சி அளிக்கிறது- சித்தார்த்

    • எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.
    • எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன்.

    சேலம்:

    டி.என்.பி.எல். போட்டியில் சேலம் ஸ்பார்டன்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4-வது வெற்றியை பெற்றது.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்னே எடுக்க முடிந்தது.

    கோபிநாத் அதிகபட்சமாக 42 ரன் (4 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்தார். மணிமாறன் சித்தார்த் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார். சோனு யாதவ், அலெக்சாண்டர் , அருண்குமார் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    பின்னர் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் கவுசிக் காந்தி 45 பந்தில் 46 ரன்னும் ( 3 பவுண்டரி , 2 சிக்சர் ), ஜெகதீசன் 33 பந்தில் 39 ரன்னும் (5 பவுண்டரி ) , சோனு யாதவ் 7 பந்தில் 26 ரன்னும் ( 1 பவுண்டரி , 3 சிக்சர்) எடுத்தனர். முருகன் அஸ்வின் , பெராரியோ , ரவி கார்த்திகேயன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ச்சியாக 4-வது வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் (நெல்லை, மதுரை ) தோற்று இருந்தது. அதன் பின்னர் திருச்சி வாரியர்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்சை அடுத்தடுத்து வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது. மதுரை பாந்தர்ஸ் இதே நிலையில் இருந்தாலும் நிகர ரன்ரேட்டில் முன்னிலையில் உள்ளது.

    இந்த வெற்றி குறித்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கவுசிக் காந்தி கூறும்போது, "வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி (அவுட் பீல்டு) சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் திரண்டு உற்சாகப் படுத்தினர்" என்றார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சாளர் மணிமாறன் சித்தார்த் கூறியதாவது:-

    நேர்த்தியாக சரியான திசையை நோக்கி வீச வேண்டும் என்று விரும்பினேன். அதை சரியாக செயல்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் சற்று வேகமான பந்து வீச்சை எதிர்பார்த்தனர்.

    எனது பந்து வீச்சின் தன்மையை மாற்றி வீசினேன். அது விக்கெட் கைப்பற்ற உதவியாக இருந்தது.

    எங்கள் அணியில் பல மேட்ச் வின்னர்கள் இருப்பதால் இது போன்ற வெற்றி சாத்தியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சேலம் அணி தொடர்ந்து 5-வது தோல்வியை தழுவி 'பிளேஆப்' சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் முருகன் கூறும்போது, "நாங்கள் கடுமையாக முயற்சி செய்தாலும் வெற்றிக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியமாகும். அதற்கு என்ன செய்வது என்பது பற்றி அணியினரிடமும், நிர்வாகத்திடமும் விவாதிக்க முயற்சிப்பேன்" என்றார்.

    இன்று நடைபெறும் 23-வது 'லீக்' ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. மதுரை அணி 5-வது வெற்றி ஆர்வத்திலும், திருப்பூர் அணி 3-வது வெற்றி ஆர்வத்திலும் உள்ளன.

    Next Story
    ×