search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    16 வருடங்களுக்கு பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்- வரலாறு படைத்த பிலிப்ஸ்
    X

    16 வருடங்களுக்கு பிறகு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்- வரலாறு படைத்த பிலிப்ஸ்

    • நியூசிலாந்து அணிக்காக கிளென் பிலீப்ஸ் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
    • முதல் இன்னிங்சில் பிலிப்ஸ் 71 ரன்கள் எடுத்தார்.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்களைச் சேர்த்தது.

    அதன்பின் 204 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய கிளென் பிலீப்ஸின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் கிளென் பிலீப்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இதையடுத்து இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 196 ரன்களில் ஆல் அவுட் ஆகி 172 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் இப்போட்டியில் நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸ் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதன்படி, இப்போட்டியின் முதல் இன்னிங்சின் பேட்டிங்கில் 71 ரன்களையும், பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டியில் 70+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை கிளென் பிலீப்ஸ் படைத்துள்ளார்.

    அதேபோல் நியூசிலாந்து மண்ணில் கடந்த 2008-ம் ஆண்டிற்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் கிளென் பிலீப்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்காக இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கிளென் பிலீப்ஸ் 2 அரைசதங்களுடன் 276 ரன்களையும், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×