search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஜூனியர் வீரர்கள் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள்- பயிற்சியாளர் நம்பிக்கை
    X

    ஜூனியர் வீரர்கள் விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள்- பயிற்சியாளர் நம்பிக்கை

    • இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர்.
    • ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள்.

    பெனோனி:

    தென்ஆப்பிரிக்காவில் நடந்த ஜூனியர் உலக் கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இறுதி சுற்றுக்கு முன்பு வரை எல்லா ஆட்டங்களிலும் பிரமாதமாக விளையாடி வெற்றிகளை குவித்த இந்தியா கிளைமாக்சில் கோட்டை விட்டு விட்டது. என்றாலும் கேப்டன் உதய் சாஹரன் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 397 ரன்), முஷீர் கான் (2 சதம் உள்பட 360 ரன்) சச்சின் தாஸ் (303 ரன்), சுழற்பந்து வீச்சாளர் சாமி பாண்டே (18 விக்கெட்) உள்ளிட்டோரின் செயல்பாடு பாராட்டும்படி இருந்தது.

    இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய ஜூனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் அளித்த பேட்டியில், 'இறுதி ஆட்டத்தில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதை எதிர்நோக்கி இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. ஆஸ்திரேலியா பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அசத்தியதால் வெற்றியாளராக இருக்கிறது. டாஸ் ஒரு பிரச்சினை இல்லை. ஏனெனில் ஆடுகளத்தன்மை நன்றாகவே இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் இன்னும் அதிகமாக போராடி இருக்கலாம்' என்றார்.

    மேலும் கனித்கர் கூறுகையில், 'கிரிக்கெட்டில் இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சில இந்திய வீரர்கள் தனித்துவமான திறமையை வெளிக்காட்டி கவனத்தை ஈர்த்தனர். கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய முதிர்ச்சியமான ஆட்டம், இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும். ஒவ்வொரு ஜூனியர் உலகக் கோப்பை போட்டி முடிவிலும் சில வீரர்கள் ஐ.பி.எல். அல்லது இந்திய அணிக்குள் நுழைவார்கள். நிச்சயம் இரு வீரருக்காவது இந்திய சீனியர் அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் தாயகம் திரும்பியதும் அதற்குரிய மிகச்சிறந்த போட்டி காத்திருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? எப்படி தொடர்ந்து முன்னெடுத்து செல்வது?, உயரிய கிரிக்கெட் போட்டிக்கு தங்களை எப்படி தயார்படுத்துவது? என்பதை இந்த தொடரில் இருந்து கற்றுள்ளனர்' என்றார்.

    விராட் கோலி, யுவராஜ்சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி தான் இந்திய அணிக்குள் கால்பதித்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.

    Next Story
    ×