search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    சொந்த மண்ணில் சொதப்பிய நியூசிலாந்து.. வரலாற்று வெற்றி பெற்ற வங்காளதேசம்
    X

    சொந்த மண்ணில் சொதப்பிய நியூசிலாந்து.. வரலாற்று வெற்றி பெற்ற வங்காளதேசம்

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 98 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இதனை தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா 8, ஹென்றி நிக்கோலஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்த சிறிது நேரத்தில் வில் எங் 24 ரன்களிலும் கேப்டன் டாம் லாதம் 21 ரன்களிலும் சோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்த வந்த வீரர்கள் டாம் பிளண்டல் 4, மால் சேப்மென் 2, ஜோஷ் கிளார்க்சன் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 31.4 ஓவரில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்காளதேசம் தரப்பில் சோரிபுல் இஸ்லாம் 3, டன்சிம் ஹசன் 3, சௌம்மியா சர்கார் 3 விக்கெட்களை எடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து 99 என்ற சுலபமான இலக்கை துரத்திய வங்கதேசத்திற்கு அனாமல் ஹைக் 37 (33) கேப்டன் நஜ்முல் சாண்டோ 51* (42) ரன்கள் எடுத்து 15.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று வங்கதேசம் புதிய வரலாறு படைத்தது. குறிப்பாக 2007 முதல் நியூசிலாந்து மண்ணில் இதற்கு முன் விளையாடிய 18 போட்டிகளிலும் தோல்விகளை சந்தித்தது. ஆனால் தற்போது அந்த மோசமான வரலாற்றை வங்காளதேசம் மாற்றியுள்ளது.

    நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது.

    Next Story
    ×