search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மாடத்தி படத்தின் போஸ்டர்
    X
    மாடத்தி படத்தின் போஸ்டர்

    மாடத்தி

    லீனா மணிமேகலை இயக்கத்தில் அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் நடிப்பில் உருவாகி இருக்கும் மாடத்தி படத்தின் முன்னோட்டம்.
    இயக்குனர் லீனா மணிமேகலை தன் கருவாச்சி பிலிம்ஸ் பேனரில் எழுதி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் மாடத்தி. "ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்" என்ற மேற்கோளுடன் வரும் இப்படம் தமிழ்நாட்டின் தென்கோடியில், 'காணத்தகாதோர்' என்று அடையாளப்படுத்தப்படும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப் பேசுகிறது. 

    தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய் துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமான அடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்று மற்றவர்களால் கருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவல நிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதி அடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்து அவதானிக்கும் ஒரு  'அ'தேவதைக் கதை மாடத்தி.       

    மாடத்தி படக்குழு
    மாடத்தி படக்குழு

    மாடத்தி படத்தின் திரைக்கதையை லீனா மணிமேகலையுடன் இனைந்து ரஃபிக் இஸ்மாயில் மற்றும் யவனிகா ஸ்ரீராம் எழுதியுள்ளனர். ஜெஃப் டோலென், அபிநந்தன் ராமானுஜம் மற்றும் கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கூட்டுநிதியில் தொடங்கப்பட்ட இப்படத்தை பின்னர் பாவனா கோபராஜு, பியூஷ் சிங் மற்றும்  அபிநந்தன் ராமானுஜம் இணைந்து தயாரித்துள்ளனர்.  

    அஜ்மினா காசிம், பேட்ரிக் ராஜ், செம்மலர் அன்னம் மற்றும் அருள் குமார் முக்கிய கதாப்பாத்திரங்களுக்கு உயிரூட்ட மற்ற கதாபாத்திரங்களாக அச்சமூக  மக்களே பங்கேற்றுள்ளனர். தங்கராஜ் படத்தொகுப்பு செய்ய தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். மோகன மகேந்திரன் கலை இயக்கம் செய்ய, இப்படத்திற்கான இசையை கார்த்திக் ராஜா அமைத்துள்ளார். பவிசங்கர் விளம்பர வடிவமைப்பு செய்துள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்ற இப்படம் வருகிற ஜூன் 24-ந் தேதி நீஸ்ட்ரீம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 
    Next Story
    ×