என் மலர்tooltip icon

    சினிமா

    பாவனா கடத்தலில் சதி: கேரள எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
    X

    பாவனா கடத்தலில் சதி: கேரள எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

    நடிகை பாவனா கடத்தலில் சதி நடந்துள்ளதாக கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றம் சாட்டி இருக்கிறார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மலையாளம், தமிழ் உள்ளிட்ட திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் பாவனாவை, மர்ம நபர்கள் சிலர் கடந்த 17-ந்தேதி கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த கொடூர சம்பவத்தை தங்கள் செல்போனிலும் பதிவு செய்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான ‘பல்சர் சுனி’ என்ற சுனில்குமார், அவரது கூட்டாளியான விஜீஷ் ஆகியோரை மார்ச் 5-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க ஆலுவா கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுப்பிரிவு போலீசார், அவர்கள் மறைந்து இருந்த கோயம்புத்தூருக்கு அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

    மேலும் சம்பவத்தை பதிவு செய்த செல்போன்கள், ‘சிம்’ கார்டுகள் உள்ளிட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இந்த கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை சம்பவத்தின் பின்னணியில் ஏதாவது சதி அடங்கியுள்ளதா? என்றும் விசாரிக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.



    இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் உள்ளிட்ட மேலும் 4 கைதிகளை அடையாளம் காண ஆலுவா சிறையில் நேற்று முன்தினம் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    இதற்கிடையே பாவனா கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த சதியும் இல்லை என கூறினார்.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ரமேஷ் சென்னிதலா, பாவனா கடத்தலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ளார்.

    கேரளாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்துள்ளதை கண்டித்து திரிக்ககரா பகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.தோமஸ் 24 மணி நேர உண்ணாவிரதத்தை நடத்தினார். இதில் கலந்துகொண்ட ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ‘இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த சதியும் இல்லை என மாநில உள்துறையை கவனிக்கும் முதல்-மந்திரி கூறியுள்ளார். இந்த விசாரணையை முதல்-மந்திரி நாசப்படுத்த முயல்கிறார் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் எதுவும் தேவையில்லை’ என்று தெரிவித்தார்.
    Next Story
    ×