என் மலர்tooltip icon

    தரவரிசை

    கீதன், ஈஷா நடிப்பில் இளையராஜா இசையில் வெளிவந்திருக்கும் படம் ‘ஓய்’. இப்படத்தை பிரான்சிஸ் மார்கஸ் இயக்கியுள்ளார். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    ஜெயிலில் கைதியாக இருக்கும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். பஸ்சில் ஊருக்கு செல்லும்போது நாயகன் கீதனும் அதே பஸ்சில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பயணம் செய்கிறார். பஸ் ஒரு நிறுத்தத்தில் நிற்கும்போது, கீழே இறங்கும் கீதனின் செயினை அவனுக்குத் தெரியாமலேயே திருடன் ஒருவன் திருடிச் செல்கிறான்.

    இதை அறிந்த நாயகி ஈஷா, பஸ்சிலிருந்து இறங்கி அந்த திருடனைத் துரத்திப் பிடித்து செயினோடு திரும்பி வருகிறார். அப்போது, அவர் செல்லவேண்டிய பஸ் சென்று விடுகிறது. அதில், அவர் கொண்டு வந்த உடமைகளும் சென்றுவிடுகிறது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் அவருக்கு, கீதன் தான் ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையாரின் மகன் என்று பஸ்சில் மற்றொருவருடன் பேசியது நினைவுக்கு வருகிறது.

    தனது பையை கீதன் எடுத்து சென்றிருக்கலாம் என்று நினைத்த ஈஷா, கீதன் சொன்ன கிராமத்திற்குச் சென்று செயினை கொடுத்துவிட்டு, தனது பையை வாங்கிக் கொண்டு வரலாம் என்று புறப்படுகிறார். கிராமத்தில் அவன் சொன்ன வீட்டுக்கு சென்று செயினை பற்றிச் சொன்னதும், வீட்டில் உள்ள அனைவரும் அவளை கீதனின் காதலி என்று நினைத்துக் கொண்டு அன்போடு உபசரிக்கிறார்கள். உண்மையை சொல்ல எவ்வளவுதான் முயன்றாலும் யாரும் இவருடைய பேச்சை கேட்பதாயில்லை. அவரும் தனது அக்கா ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் வேறு வழியின்றி அங்கேயே தங்குகிறாள்.

    மறுமுனையில், கீதன், ஈஷா விட்டுச் சென்ற பையை எடுத்துக் கொண்டு தனது காதலியை பார்க்க சென்னைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்புகிறார். வந்த இடத்தில் ஈஷாவை தன்னுடைய காதலி என்று தன்னுடைய குடும்பமே நினைத்துக் கொண்டிருப்பதை கண்டதும் அதிர்ச்சியடைகிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க கீதனின் குடும்பம் முடிவு செய்கிறது.

    இந்த குழப்பத்திற்கு மத்தியில் கீதன் ஈஷாவை கரம்பிடித்தாரா? அல்லது தனது காதலியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

    நாயகன் கீதனுக்கு இதுதான் முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், ரொமான்ஸ், கோபம், வெகுளித்தனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் பெரிய நடிகர்களுக்கு சவால் விடுகிற அளவுக்கு நடித்திருக்கிறார். ஈஷாவும் தன் பங்குக்கு நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம்.

    நாயகனின் மாமாவாக வரும் அர்ஜுனன் படத்தில் காமெடி கதாபாத்திரத்தை சுமந்து சென்றிருக்கிறார். இதுவரை மாடர்ன் பையனாக பார்த்த இவரை, இந்த முறுக்கு மீசை, வேஷ்டி சட்டை சகிதமாக பார்க்கும்போது கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார். இவரும், நாயகனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் இணைந்து செய்யும் காமெடிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

    கிராமத்து பின்னணியில் ஒரு அழகான காதல் மற்றும் செண்டிமென்ட் கலந்த ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் மார்கஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிராமத்து படத்தை ரசிக்கும்படி கொடுத்தற்கு அவருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அதேபோல், நிறைய பேர் புதுமுகங்களாக தெரிந்தாலும், அவர்களை அழகாக வேலை வாங்கியிருக்கிறார். ஆனால், ஒரேயொரு இடத்தில் மட்டும்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. ஈஷா எதற்காக ஜெயிலுக்கு போனார் என்பதை கடைசி வரை சொல்லாமல் சென்றதுதான்.

    படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பாடலும். கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு இசையமைப்பது இளையராஜாவுக்கு கைவந்த கலை. அதை இந்தப் படத்திலும் சிறப்பாக செய்திருக்கிறார். மேலும், யுகாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஓய்’ ஒய்யார நடை.
    அறிமுக நடிகர்கள் தமிழ், நட்சத்திரா, ராம்தேவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கிடா பூசாரி மகுடி’ படத்தின் விமர்சனம் குறித்து இங்கே பார்ப்போம்.
    நாயகன் தமிழ் கிராமத்தில் ஐயனார் சாமிக்கு கிடா வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் சிறுவயதில் இருக்கும் போதே, இவரது அக்காவிற்கு திருமணம் நடந்து விடுகிறது. ஐந்து வருடமாக குழந்தை பிறக்காமல் இருந்த அக்காவிற்கு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு மலர் (நட்சத்திரா) என்று பெயர் வைத்து தன்னுடைய உயிராய் நினைத்து வளர்த்து வருகிறார் தமிழ்.

    சிறு வயதில் இருந்தே நட்சத்திராவை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையுடனே தமிழ் வளர்ந்திருக்கிறார். ஆனால் நட்சத்திராவோ சென்னையில் இருந்து வந்த ராம்தேவ் என்பவரை காதலிக்கிறார். ராம்தேவ்வும் நட்சத்திராவின் காதலை ஏற்று, ஆங்காங்கே பார்த்து பேசி வருகிறார்கள்.

    இவர்கள் காதலிப்பது ஊர் மக்கள் மூலமாக தமிழ் காதுக்கு செல்கிறது. கோபமடைந்த தமிழ், நேராக வீட்டுக்கு சென்று நட்சத்திராவிற்கு தாலி கட்டி திருமணம் செய்துக் கொள்கிறார். முதலில் தமிழை கணவனாக ஏற்க மறுக்கும் நட்சத்திரா, பின்பு அவரின் அன்பை உணர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டு இருவரும் சந்தோஷமாய் வாழ்கிறார்கள்.

    இந்நிலையில், காதல் தோல்வியால் சென்னைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வருகிறார் ராம்தேவ். இவரை பார்த்தவுடனே தமிழ்-நட்சத்திரா குடும்பத்தில் பிரச்சனை வருகிறது. இந்த பிரச்சனைகள் தீர்ந்ததா? இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக தமிழ் நடித்து இவரே படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார். முதல் பாதியில் நட்சத்திரா மீது பாசமுள்ள மாமாவாகவும், இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

    நாயகியான நட்சத்திராவிற்கு இதுதான் முதல் படம். இவர் காதலியாகவும், மனைவியாகவும், அம்மாவாகவும் என தன்னுடைய நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். படத்திற்காக மொட்டை அடித்து, கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

    இரண்டாவது நாயகனாக வரும் ராம்தேவ் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிங்கம்புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், செவ்வாழை ராசு, சுப்புராஜ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

    ‘என் ராசாவின் மனசிலே’, ராஜ் கிரண் படம் பாணியில் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெயக்குமார். குறைந்த பட்ஜெட்டில் கிராமத்து பின்னணியில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சற்று நெருடலை தருகிறது. இதை தவிர்த்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    படத்திற்கு பெரிய பலம் இளையராஜாவின் இசை. இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. பின்னணியை இசையையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். ரவி சீனிவாசின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கிடா பூசாரி மகுடி’ இனிமை.
    நாகா வெங்கடேஷ் இயக்கத்தில் நகுல், நிகிஷா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், ராதாரவி, நிழல்கள் ரவி, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘நாரதன்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    கோயம்புத்தூரில் இருந்து சென்னையில் இருக்கும் தாய்மாமா ராதாரவி வீட்டிற்கு வருகிறார் நாயகன் நகுல். வரும் வழியில் நாயகி நிகிஷாவை பார்க்கிறார். நிகிஷாவை ஒரு கும்பல் துரத்துகிறது என்பதை அறிந்த நகுல், அவர்களிடம் இருந்து நிகிஷாவை காப்பாற்றி தன்னுடனே சென்னைக்கு ரெயிலில் அழைத்து வருகிறார்.

    சென்னை வந்து இறங்கும்போது நிகிஷா காணாமல் போகிறார். அதிர்ந்துபோன நகுல், பின்னர் தாய்மாமா ராதாரவி வீட்டிற்கு செல்கிறார். இவருக்கும் ராதாரவியின் மகளான ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கும் திருமணம் செய்ய நினைக்கிறார் ராதாரவி.

    விசா விஷயமாக பாண்டிச்சேரிக்கு செல்லும் நகுல், வழியில் நிகிஷாவை ஒரு கும்பல் துரத்துவதை பார்க்கிறார். பின்னர் மீண்டும் கும்பலிடம் காப்பாற்றுகிறார் நகுல்.

    ஒரு பெண்ணுடன் ஓடுவதை அறிந்த ராதாரவி, தன்னுடைய ஆட்களான எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி ஆகியோரை வைத்து விசாரிக்க சொல்லுகிறார். இந்நிலையில், ராதாரவி சினிமா எடுக்க வேண்டும் என்ற ஆசையில் பெரிய இயக்குனரான பிரேம்ஜியை அழைத்து கதை சொல்ல சொல்கிறார். பிரேம்ஜி சொல்லும் கதை ராதாரவியின் நிஜ வாழ்க்கை கதையை அப்படியே விவரிக்கிறது. இவர் மூலம் மேலும் பல தகவல்களை தெரிந்து வருகிறார்.

    மேலும் நிகிஷா ஒரு கொலையாளி என்பதும், பழைய நினைவுகளை அவர் மறந்து விட்டதாகவும் ராதாரவிக்கும் நகுலுக்கும் தெரிய வருகிறது.

    இறுதியில், நிகிஷா கொலையாளியாவதற்கு காரணம் என்ன? நகுல் நிகிஷாவை காப்பாற்றி ஒன்று சேர்ந்தாரா? அல்லது தன்னுடைய தாய் மாமா ராதாரவி மகள் ஸ்ருதி ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகனாக நடித்திருக்கும் நகுல் வழக்கம்போல் துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ரெயிலில் பார்த்த பெண்ணுக்காக இவ்வளவு தூரம் ஓடுவது கொஞ்சம் ஓவராக இருக்கிறது.

    நாயகியாக நடித்திருக்கும் நிகிஷாவின் கதாபாத்திரம் சிறப்பாக உள்ளது. மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஸ்ருதி ராமகிருஷ்ணனுக்கு பெரியதாக வேலை இல்லை. தாய் மாமாவாக நடித்திருக்கும் ராதாரவி சிறப்பாக நடித்திருக்கிறார். பெரிய இயக்குனராக பிரேம்ஜி நடித்திருக்கிறார். இவரை காமெடிக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவருடைய காமெடி படத்தில் எடுபடவில்லை.

    படத்தில் இவர்களை தவிர, நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, பஞ்சு சுப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், பாண்டு, மயில்சாமி, கும்கி அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார். இவர்கள் அனைவரையும் வைத்து சுவாரஸ்யம் இல்லாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் நாகா வெங்கடேஷ். திறமை வாய்ந்த நடிகர்களை வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார்.

    மணி சர்மாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். சஞ்சய் லோக்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல்.

    மொத்தத்தில் ‘நாரதன்’ கலகம் இல்லை.
    2 பாகங்களாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த குங்பூ பாண்டா திரைப்படம் தற்போது 3வது பாகமாக வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    ஊகுவே (ஆமை) மாஸ்டரால் 500 வருடங்களுக்கு முன்பு ஆவிகள் உலகத்துக்கு அனுப்பப்பட்ட கை (எருது), ஆவிகள் உலகத்தில் இருந்து பல்வேறு சக்தி வாய்ந்த மாஸ்டர்களை தன்வசப்படுத்தி, மிகப்பெரிய சக்தியுடன் மனித உலகத்தை கைப்பற்ற வருகிறான். இதையறிந்த டிராகன் வாரியர்-ஆன பூ (பாண்டா) மற்றும் அவனது குழுவினர் கையை எப்படியாவது அழிக்க முடிவெடுக்கின்றனர். அப்போது, ஊகுவே மாஸ்டரால் எழுதப்பட்ட ஓலைச்சுவடி ஒன்றை தேடிப்பிடித்து, அதில் கையை எப்படி ஆவிகள் உலகத்துக்கு ஊகுவே அனுப்பினார் என்பது பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்கின்றனர்.

    மேலும், கையை அழிப்பதற்குண்டான அதிசய சக்தி பாண்டாக்கள் வசிக்கும் ஒரு ரகசிய கிராமத்தில் இருப்பதையும் அறிந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும்விதமாக சிறுவயதில் காணாமல் போன பூ-வை தேடி வந்த அவரது அப்பா, அந்த ரகசிய பாண்டா கிராமத்திற்கு பூ-வை மட்டும் அழைத்துச் செல்கிறார்.

    இறுதியில், பூ அந்த கிராமத்துக்கு சென்று அதிசய சக்தியை பெற்று, கையை எதிர்கொண்டு உலகத்தை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    குங்பூ பாண்டா வரிசையில் முன்பு வெளிவந்த இரண்டு பாகங்களைப்போலவே இந்த பாகத்தையும் ரொம்பவும் காமெடியாகவும் ஆக்ஷன் நிறைந்தும் சொல்லியிருக்கிறார்கள். பெரிய சக்தியில்லாத பூ-வை ஏன் டிராகன் வாரியராக ஊகுவே மாஸ்டர் ஆக்கினார் என்பதையும் இந்த பாகத்தில் கூறியிருக்கிறார்கள். கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகள் எல்லாம் படத்திற்கு பிரம்மாண்டம் கூட்டியிருக்கின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாக இந்த பாகமும் இருக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

    மொத்தத்தில் ‘குங்பூ பாண்டா 3’ - குதூகலம்.
    பாஸ்கர் இயக்கத்தில் வைபவ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஓவியா, வி.டி.வி.கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’. படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...


    சென்னையில் தனிமையில் வசித்து வரும் நாயகன் வைபவ் திருட்டுத் தொழில் செய்கிறார். இந்நிலையில், அனாதை குழந்தைகளுக்கு நிதி திரட்ட ஒவ்வொருவருக்கும் போன் போட்டு நிதி கேட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், ஒருநாள் வைபவ் நம்பருக்கு போன் செய்து நிதி கேட்கிறாள். அப்போது, வைபவ் தனக்கு வேலை இல்லை என்றும், மிகவும் கஷ்டப்படுவதாகவும் அவளிடம் கூறுகிறார்.

    இதை நம்பிய ஐஸ்வர்யா ராஜேஷ், அவர்மீது இரக்கப்பட்டு, தன்னுடைய அலுவலகத்திலேயே ஒரு வேலை வாங்கிக் கொடுக்கிறார். அவர்கள் தயார் செய்யும் பொருட்களை வீடு, வீடாக சென்று விற்பனை செய்வதே வைபவ்வின் வேலை. வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே கம்பெனி கொடுத்த அனைத்துப் பொருட்களையும் விற்றுவிட்டு, அந்த காசை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டுகிறார்.

    இதனால், வைபவ்வுக்கு சிபாரிசு செய்த ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பழி விழுகிறது. அவர் வைபவ் எடுத்துச்சென்ற பணத்தை கம்பெனியில் கட்டுவதற்காக தனது தங்கச் செயினை அடமானம் வைக்க செல்கிறார். அப்போது, அங்கு வைபவ்வை பார்த்ததும் அவர்மீது கோபம் கொள்கிறார். பின்னர் வைபவ் தன்னுடைய உண்மை நிலையை சொல்லி, அவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் கையாடல் செய்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறார். இந்த சந்திப்புப்புக்குப் பிறகு அவர்களுக்கிடையே உள்ள இடைவெளி குறைந்து, இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.

    இந்நிலையில், ஒருநாள் வைபவ் ரோட்டில் நடந்துகொண்டிருக்கும்போது, ஓவியா சாலையில் அடிபட்டு இறந்து போகிறாள். அவளது செல்போன் சாலையில் அனாதையாக கிடக்கவே, அதை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிடுகிறார் வைபவ். வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அந்த போனில் அழைப்பு வருகிறது. அதை எடுத்து பேசும் வைபவ் பேயிடம் மாட்டிக் கொள்கிறார். இறுதியில், செல்போன் மூலம் வந்த பேயிடம் இருந்து தப்பித்தாரா? அந்த பேய் மூலம் அவருக்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் வைபவ் குறும்புத்தனமான சேட்டைகளால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவர் பேயைப் பார்த்து பயப்படும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. முந்தைய படங்களை விட இப்படத்தில் மிகவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

    நாயகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஓவியா நடித்திருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழக்கமான கதாபாத்திரம் என்றாலும் அதை திறம்பட செய்திருக்கிறார். குறிப்பாக நடன காட்சியில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஓவியா பாதி நேரம் பேயாக வந்து பயமுறுத்தியிருக்கிறார்.

    படத்திற்கு பெரிய பலமாக வி.டி.வி.கணேஷ், சிங்கப்பூர் தீபன், யோகி பாபு ஆகியோரின் நடிப்பு அமைந்திருக்கிறது. இவர்கள் செய்யும் காமெடி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. யோகி பாபுவுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

    பேய் படங்கள் ரசிகர்களை ஆதிக்கம் செய்கிறது என்பதை அறிந்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர். படத்தில் பேயை விட காமெடியே அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். படத்தில் பேய் வருமா என்று எதிர்பார்த்து பயந்து இருந்தால், காமெடி வந்து சிரிப்பூட்டுகிறது. காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற சுந்தர்.சி இப்படத்தை தயாரித்திருப்பதால், அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார் பாஸ்கர்.

    சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இவர் இசையில் உருவான குத்துப் பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையையும் கலக்கியிருக்கிறார். பானு முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான அளவிற்கு உதவி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ பயப்படாமல் பார்க்கலாம்.
    கலையரசன், ரமேஷ், காளிவெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன், மாயா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘டார்லிங் 2’. இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    கலையரசன், ரமேஷ், காளி வெங்கட், மெட்ராஸ் ஜானி, அர்ஜுனன் இவர்கள் ஐந்து பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் கலையரசனுக்கு திருமணம் நிச்சயக்கப்படுகிறது. எனவே, பேச்சுலர் பார்ட்டிக்காக நண்பர்களை அழைத்துக் கொண்டு வால்பாறைக்கு ஜாலி டூர் செல்கிறார் கலையரசன்.

    வால்பாறையில் தனி பங்களா எடுத்து நண்பர்கள் அனைவரும் ஜாலியாக பொழுதைக் கழித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே ஊரில் வசிக்கும் நாயகி மாயா, உணவு தயாரித்து பரிமாறி வருகிறார். இந்நிலையில், இவர்கள் தங்கியிருக்கும் பங்களாவில் ஒரு அமானுஷ்ய சக்தி உலாவுவது நண்பர்களுக்கு தெரிய வருகிறது.

    ஒருகட்டத்தில் அந்த அமானுஷ்ய சக்தி, கலையரசனின் உடம்பிற்குள் புகுந்துவிடுகிறது. கலையரசனை கொல்வதற்காக அவரது உடம்பில் புகுந்துள்ளதாகவும் அந்த ஆவி கூறுகிறது. கலையரசனை அந்த ஆவி கொல்லத் துடிக்க காரணம் என்ன? கலையரசனுக்கும் அந்த ஆவிக்கும் என்ன தொடர்பு என்பதை படத்தில் திரில்லோடு சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

    இப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள்தான். ஆனால், யாருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான வலுவான கதாபாத்திரம் இல்லை. ஆகையால், யாருடைய நடிப்பையும் குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. படத்தில் நாயகனாக முன்னிறுத்தியிருக்கும் கலையரசன் ஹீரோவாக நடித்து வெளிவரும் முதல் படம். இவருடைய நடிப்பின்மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

    மற்றபடி நண்பர்களாக வரும் அனைவரும் ஓரளவுக்கு நடிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். நாயகி மாயா, பல் மருத்துவராக இருந்து நாயகியாக அவதாரம் எடுத்திருக்கிறார். பார்க்க அழகாக இருந்தாலும், முதல் படம் என்பதால் இவரிடம் நடிப்பை அதிகம் எதிர்பார்க்கமுடியவில்லை. இருந்தாலும், நடிப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்.

    திகில் படங்கள் என்றாலே, அதில் கொஞ்சம் காமெடியும் கலந்திருக்கும். ஆனால், இப்படத்தில் திகிலும் இல்லை, காமெடியும் இல்லை. தலைப்பை நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகர். திகில் படம் என்று சொல்லிவிட்டு, பெரும்பாலும் நட்பு, காதல் இதிலேயே சுற்றி சுற்றி வந்திருக்கிறார். அதனால் திகில் படமாக இதை ரசிக்கமுடியவில்லை.

    ரதான் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலம் கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டார்லிங்-2’ ரசிக்க முடியவில்லை.
    இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ என்ற படத்தின் ரீமேக்காக ‘உயிரே உயிரே’ படம் வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சித்தும் நாயகியாக ஹன்சிகாவும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பிரபல நடிகை ஜெயபிரதா தயாரித்திருக்கிறார். ராஜசேகர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்...
    நாயகன் சித்து மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அதே விமானத்தில் ஹன்சிகாவும் பயணிக்கிறார். இவரை பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் சித்து. விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.

    சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக கோவாவில் தரையிறங்குகிறது. கோவாவில் சித்துவின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு ஹன்சிகாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் ஹன்சிகாவை என்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

    அன்று இரவு தனியாக பீச்சில் இருக்கும் ஹன்சிகாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து ஹன்சிகாவை காப்பாற்றுகிறார் சித்து. இதிலிருந்து ஹன்சிகாவிற்கு சித்து மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலை சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.

    ஒரு வழியாக சென்னைக்கு வரும் இவர்கள், அங்கு ஹன்சிகாவிடம் தன் காதலை சொல்ல சித்து முயற்சி செய்கிறார். அப்போது, ஹன்சிகாவை அழைத்து செல்ல வரும் ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். ஹன்சிகாவின் அண்ணன் அஜய்யை மூன்று வருடங்களுக்கு முன்பு, சித்துவின் அக்காவான சாயாசிங்கை, காதல் என்ற பெயரில் துன்புறுத்தியதற்காக அவரை அடித்திருக்கிறார். இதனால் அஜய்க்கும் சித்துவுக்கும் முன்பே பகை இருந்து வருகிறது.

    ஒருகட்டத்தில் ஹன்சிகாவுக்கு சித்துவின் மீது காதல் ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும், இந்த காதலுக்கு அவரது அண்ணன் அஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில், அஜய்யை எதிர்த்து ஹன்சிகாவை சித்து எப்படி கரம்பிடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக பிரபல நடிகை ஜெயபிரதாவின் மகன் சித்து நடித்திருக்கிறார். இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சி, நடனம் என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

    நாயகியான ஹன்சிகா, தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படம் முழுக்க துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

    ஹன்சிகாவிற்கு அண்ணனாக நடித்திருக்கும் அஜய், வில்லன் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருடைய நடிப்பு படத்திற்கு பலம். மற்ற கதாபாத்திரங்களான நரேன், ஜெகன், ரோகினி ஆகியோர் சிறிதளவே வந்தாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

    இந்தி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ‘இஷ்க்’ என்ற படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜசேகர். பெரிய நடிகர்கள் படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களையும் கொண்டு தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல்பாதியில் நீளும் காட்சிகளால் ரசிகர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில் இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.

    அனுப் ரூபனின் இசையில் அழகே அழகே... என்ற மெலொடி பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்ணை கவர்ந்தாலும், கோவா, ஆலப்புழா போன்ற லொக்கேஷன்களை ரொம்ப சாதாரணமாகவே காட்டியுள்ளார்.

    மொத்தத்தில் ‘உயிரே உயிரே’ சிறப்பு.
    ×