என் மலர்
சினிமா

படப்பிடிப்பில் ஓவராக அக்கறை காட்டிய நாயகன், கடுப்பான நாயகி
படப்பிடிப்பின் முதல் நாளே அதிக அக்கறை எடுத்துக் கொண்ட நாயகன் மீது கோபப்பட்ட நாயகி படத்தில் இருந்து விலகுவதாக கூறியிருக்கிறாராம். அவரை படக்குழுவினர் சமாதானம் செய்துள்ளார்களாம்.
‘ஹாலிவுட்’ நகைச்சுவை நடிகரின் பெயரில், சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த நடன புயலே, இந்த பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக டார்லிங்கான நடிகை நடிக்கிறாராம்.
இந்த படத்தின் முதல்நாள் எடுத்த பாடல் காட்சியின் போதே நாயகனுக்கும், நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாம். “இப்படி செய்... அப்படி செய்...” என்று நாயகன், அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தன் ‘ஐடியா’க்களை திணித்தது, நாயகிக்கு பிடிக்கவில்லையாம்.
“மாஸ்டர் இவரா, அவரா?” என்று நாயகி முணுமுணுத்தாராம். நாயகனின் மிகையான அறிவுரைகள், ஒரு கட்டத்தில் நாயகியை கோபம் கொள்ள செய்ததால், நடன அமைப்பாளர் சொல்லிக் கொடுத்தபடி ஆடுவதா, கதாநாயகன் சொல்வது போல் ஆடுவதா? ஒரு முடிவுக்கு வாங்க” என்று கூறியபடி நாயகி, நாற்காலியில் போய் ஹாயாக உட்கார்ந்துவிட்டாராம்.

படக்குழுவினரும் நாயகியை சமாதானம் செய்ய “டைரக்டர் சொல்லிக் கொடுத்தபடிதான் நடிப்பேன்... நடன அமைப்பாளர் சொல்லிக் கொடுத்தபடிதான் ஆடுவேன்... இதற்கு சம்மதித்தால் தொடர்ந்து நடிக்கிறேன். இல்லையென்றால், படத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்” என்று நாயகி கண்டிசன் போட்டாராம்.
அதற்கு படக்குழுவினர் சம்மதம் தெரிவித்து சமாதனம் செய்ததால் நாயகி படப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து ஆடினாராம். நடன புயலுக்கும், டார்லிங்கான நடிகைக்கும் நடந்த இந்த சண்டைதான் கோடம்பாக்கத்தில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
Next Story






