என் மலர்
சினிமா செய்திகள்

மகளுடன் கமல்ஹாசனை சந்தித்த ஊர்வசி
- 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த ‘பஞ்சதந்திரம்’ படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.
- கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை.
'முந்தானை முடிச்சு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஊர்வசி. கமல்ஹாசனுடன் பல படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் ஊர்வசி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஊர்வசி மகள் தேஜலட்சுமியும் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் 'சுந்தரியாயவள் ஸ்டெல்லா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தேஜாலட்சுமி 'பாப்லோ பார்ட்டி' என்ற படத்தில் தாய் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஊர்வசியும், மகள் தேஜலட்சுமியும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் தேஜலட்சுமி பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், 2001-ம் ஆண்டு நான் குழந்தையாக இருக்கும் போது அம்மா நடித்த 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன்.
அங்கு நான் கோபமாக இருக்கும்போது கமல் சார் என்னை தூக்கி சென்று எனக்கு பிடித்த உணவை ஊட்டி விடுவார். அதனால் நான் அழ மாட்டேன். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம்.
கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் அருகில் இருந்தும் என்னால் அவருக்கு ஹாய் கூட சொல்ல முடியவில்லை. இதனால் நான் அழுது விட்டேன். இதையடுத்து என் அம்மா பரவாயில்லை 'மோலே' நாம் ஒரு நாள் அவரை அலுவலகத்தில் போய் பார்ப்போம் என்று கூறினார். அந்த ஒருநாள் மிக விரைவில் வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நாள் வந்தது. அவரை 10 நிமிடங்கள்தான் சந்தித்தேன். ஆனால் 10 வருடங்களை போல் உணர்ந்தேன் என்று பதிவிட்டுள்ளார்.






