என் மலர்
சினிமா செய்திகள்
பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு
- நடிகை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு கேரளாவில் நடந்து வருகிறது.
- இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மலையாள முன்னணி நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார்.
தற்போது திலீப் ஜாமீனில் வந்துள்ள நிலையில் விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு பின்னர் திலீப்பும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்த விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ம் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.