search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    லைகா பட நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
    X

    லைகா

    லைகா பட நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

    • கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
    • லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு சுபாஷ்கரன் அல்லிராஜா சென்னையில் லைகா பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். முதலில் அவர் நடிகர் விஜய் நடித்த "கத்தி" படத்தை தயாரித்தார். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். எந்திரன், கோலமாவு கோகிலா, 2.0, தர்பார் படங்கள் தயாரிப்பு மூலம் லைகா நிறுவனம் மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது.

    கடந்த ஆண்டு வெளியான "பொன்னியின் செல்வன்" படத்தையும் லைகா நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தையும் இந்த நிறுவனமே தயாரித்து வெளியிட்டது. பொன்னியின் செல்வன் படம் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை லைகா நிறுவனம் பெற்றுள்ளது.

    இதையடுத்து சினிமா படங்கள் தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்று முதலீடு செய்து இருப்பதாக கூறப்பட்டது. அந்த பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.

    லைகா பட நிறுவன அலுவலகங்களில் நேற்று (செவ்வாய்க் கிழமை) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது. அடுத்து கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தை தயாரித்து வருகிறது. இது தொடர்பாக முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டதால் அதிரடி சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சோதனை நடை பெற்ற 8 இடங்களில் இருந்த லைகா பட நிறுவன ஊழியர்களிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், இந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×