search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விஜயகாந்த் சாரை போன்று நானும் பின்பற்றினேன் - சசிகுமார் நெகிழ்ச்சி
    X

    சசிகுமார்

    விஜயகாந்த் சாரை போன்று நானும் பின்பற்றினேன் - சசிகுமார் நெகிழ்ச்சி

    • அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
    • நேற்று நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.

    அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கியிருக்கும் காரி படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகிநீடு, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    காரி படக்குழு

    இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் சசிகுமார் பேசியதாவது, "இது எனக்கான கதை.. என் மண்ணின் கதை.. ஒரேமாதிரி கதையில் நடிக்கிறீர்களே, அதுவும் கிராமத்து படமாக நடிக்கிறீர்களே என்றால், நான் கிராமத்து படம் தான் பண்ணுவேன்.. அவர்களுக்கு நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்..? என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டு பற்றி படம் பண்ண முயற்சித்தேன் அது முடியவில்லை. லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது. தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு பரிசாக கார் கொடுக்காமல், கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும்.

    காரி படக்குழு

    படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாக, பக்கபலமாக இருந்தனர். அவற்றையும் மீறி ஒரு சில சமயங்களில் ஜல்லிக்கட்டு காளை மோதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தேன். இதில் நடித்ததற்காக அவர்கள் கேட்ட ஒரே பரிசு இந்த படம் வெளியாகும்போது முதல்நாள் மதுரையில் அவர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என்பது தான். ரிலீஸ் நாளன்று அவர்களது ஆசையை நிறைவேற்ற போகிறேன்.

    ஜல்லிக்கட்டு மீது தடைகேட்டு யார் எத்தனை வழக்கு போட்டாலும் யாராலும் ஜல்லிக்கட்டு விளையாட்டை அழிக்க முடியாது. ஜல்லிக்கட்டு மாடுகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. எதிர்ப்பவர்கள்தான் அதன்மூலம் மாடுகளை அழிக்க நினைக்கிறார்கள். இந்த படத்தில் பதினெட்டு வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கிறோம். என்னுடைய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். முன்பெல்லாம் விஜயகாந்த் சார் படப்பிடிப்பிலும் அவரது அலுவலகத்திலும் பாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படும்.

    சசிகுமார்

    அதை கேள்விப்பட்டு நான் என்னுடைய தயாரிப்பில் படங்கள் தயாரித்தபோது அதேபோல பின்பற்றினேன். நீண்டநாளைக்கு பிறகு தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் படப்பிடிப்பில் அதேபோன்று எல்லோருக்கும் சரிசமமான சிறப்பான சாப்பாடு வழங்கப்பட்டதை பார்த்தேன். ஒரு படத்தில் நடித்தபோது சாப்பாடு சரியில்லை என்று அதன் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக்கொண்டு அதற்கு பதிலாக நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை.. என்னுடைய சம்பளத்தையும் கொடுக்கவில்லை.

    இது மக்களுக்காக எடுத்த படம். ஜல்லிக்கட்டு பற்றிய படம். அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும். அடுத்த வருடம் நான் மீண்டும் எனது டைரக்ஷனில் படம் இயக்குகிறேன். அதற்கான அறிவிப்பை இந்த படத்தின் வெற்றி விழாவில் அறிவிக்கிறேன்" என்று கூறினார்.

    Next Story
    ×