search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கேரளாவில் தொடரும் பாலியல் புகார்: மேலும் ஒரு டைரக்டர்-தயாரிப்பாளர் மீது நடிகை குற்றச்சாட்டு
    X

    கேரளாவில் தொடரும் பாலியல் புகார்: மேலும் ஒரு டைரக்டர்-தயாரிப்பாளர் மீது நடிகை குற்றச்சாட்டு

    • சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
    • தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதை யடுத்து, மலையாள திரையுலகில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல நடிகைகள் கூறி வருகின்றனர்.

    அவர்கள் பல பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோரின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அந்த குழு நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மேலும் சிலர் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் கூறப்பட்டு வருவது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    35-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சார்மிளா, தாயாரிப்பாளர் மோகனன், இயக்குனர் ஹரிகரன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

    1997-ம் ஆண்டு அர்ஜூனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் என்ற படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் எம்.பி.மோகனன், தயாரிப்பு மேலாளர் சண்முகன் மற்றும் அவர்களது நண்பர்கள் என்னை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் ஓட்டல் அறையை விட்டு வெளியே வந்து நான் தப்பி விட்டேன்.

    அவர்கள், ஓட்டலில் இருந்த ஆண் உதவியாளர் ஒருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். இதனால் நான் பயந்துபோன நிலையில், குடும்ப உறுப்பினர்களின் சரியான நேர தலையீடு காரணமாக பயம் தவிர்க்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்

    இதேபோல பிரபல டைரக்டர் ஹரிகரனை நானும் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவுடன் சந்தித்த போது, அட்ஜஸ்ட் பண்ண தயாரா? என்று கேட்டார். நான் வேண்டாம் என்று சொன்னதால் தனது பரிணயம் படத்தில் இருந்து எங்களை துண்டித்து விட்டார்.

    அட்ஜஸ்ட் செய்ய தயாராக இல்லாததால் நான் பல படங்களை இழந்துள்ளேன். 4 மொழிப் படங்களில் நான் நடித்திருந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் முக்கியமாக மலையாளத்துறையில் உள்ளன. இதுபற்றி புகார் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


    பிரபல பின்னணி குரல் கலைஞர் பாக்கியலட்சுமியும் தன்னிடம் சிலர் தவறாக நடக்க முயன்றதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மலையாள சினிமாவில் நடிகர்களின் மாபியா என்பது மிகவும் வலுவானது.

    அவர்களின் கட்டுப்பாட்டில் தான் மலையாள திரை உலகம் உள்ளது. அவர்களால் நான் சில காலம் புறக்கணிக்கப்பட்டேன். என்னிடம் தவறாக நடக்க முயன்ற இயக்குநரை நான் கன்னத்தில் அறைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×