என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அர்ஜுன் தாஸ் - காளி வெங்கட் நடித்த BOMB படத்தின் விமர்சனம்
    X

    அர்ஜுன் தாஸ் - காளி வெங்கட் நடித்த BOMB படத்தின் விமர்சனம்

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது.

    கதைக்களம்

    நாயகன் அர்ஜுன் தாஸ் வாழ்ந்து வரும் கிராமம், இரண்டாக பிரிந்து இருக்கிறது. பல ஆண்டுகளாக இரு கிராமத்தினரும் அடிதடி, வெட்டுக்குத்து என விரோத மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். இரண்டு கிராமத்தையும் ஒன்று சேர்க்க அர்ஜுன் தாசும், காளி வெங்கட்டும் முயற்சி செய்கிறார்கள்.

    ஒருகட்டத்தில் காளி வெங்கட் திடீரென உயிரிழந்து போகிறார். ஆனால், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட்டுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறார். மேலும், அர்ஜுன் தாசை தவிர வேறு யாராலும் காளி வெங்கட்டின் உடலை தூக்க முடியாமல் போகிறது.

    காளி வெங்கட்டின் உடலில் சாமி இறங்கியிருப்பதாக ஊர் பூசாரி குறியாடி சொல்கிறார். அதன்பின் இரண்டு ஊர்மக்களும் காளி வெங்கட் உடலை ஊருக்கு நடுவே வைத்து தெய்வமாகவே வழிபடுகிறார்கள்.

    இறுதியில் காளி வெங்கட் உடலுக்கு என்ன ஆனது? ஊர் மக்கள் ஒன்று சேர்ந்தார்களா? அர்ஜுன் தாஸ் என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் அர்ஜுன் தாஸ், தன் வழக்கமான ஸ்டைலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்து இருக்கிறார். கத்தி பேசாமல் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக சாமி ஆடும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். நாற்காலியில் உட்கார்ந்தே சாதித்து இருக்கிறார் காளி வெங்கட். முதல் பாதியில் துணிச்சலான பேச்சாலும், இரண்டாம் பாதியில் பேசாமலும் நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் சிவாத்மிகா ராஜசேகர், பாசம், சென்டிமென்ட், அழுகை என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே., கிச்சா ரவி, பூவையார் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    இயக்கம்

    பிரிவினை உள்ள கிராமத்தை ஒன்று சேர்க்கும் கதையை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட். ஆன்மிகமும், அறிவியலும் கலந்து திரைக்கதை சொல்லி இருப்பது சிறப்பு. கதாபாத்திரங்களிடையை திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு, மூன்று இடங்களில் வாவ் சொல்ல வைத்திருக்கிறார். ஆனால், ஒரு சில இடங்களில் முகம் சுழிக்கும் காட்சிகளும், மெதுவாக செல்லும் திரைக்கதையும் பலவினமாக அமைந்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    இசை

    டி.இமான் இசை படத்துடன் ஒன்ற செய்கிறது.

    தயாரிப்பு

    ஜெம்பிரி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங் - 2.5/5

    Next Story
    ×