என் மலர்
சினிமா செய்திகள்

'கரூர் சம்பவம்' விஜயின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வடுவாக இருக்கும் - ரஞ்சித்
- அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது.
- அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் வேல்பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு விசுவ ஹிந்து பரிஷத் வடக்கு தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு வேல் பூஜையை தொடங்கி வைத்து வழிபாடு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு நலம்பெற வேண்டி அக்டோபர் 25, 26, 27 ஆகிய கந்தசஷ்டி திருவிழா நாட்களில் ஆயிரம் கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்படுகிறது. மேலும் வேல் பூஜை, கோ பூஜை போன்ற பூஜைகளும் நடைபெறுகிறது.
அதற்கு முன்னோட்டமாக இன்று ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் வேல் கொடுத்து, வேல் பூஜை செய்தேன்.
கரூர் சம்பவத்தால் விஜய் மிகவும் வேதனையில் இருப்பார் என்பது மட்டும் எனக்கு தெரியும்.
எந்த ஒரு தலைவரும் அவர்கள் கூட்டத்திற்கு வந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது.
41 பேர் இறந்தது விஜய்யின் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வாழ்க்கையில் ஒரு வடுவாக நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் என்பது என்னுடைய கருத்து.
அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது, எதிரியும் கிடையாது ஜனவரிக்குப் பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. அரசியல் என்பது காவல்துறை பிடிக்கும்போது யு-டர்ன் போட்டு திரும்பி செல்வது போன்றது.
கடவுள் முன் எல்லோரும் சமம், நாம் மனிதர்கள், அணுக்கள், துகள்கள் தான், எல்லோரும் சமத்துவமாக இருக்க வேண்டுமென்றால் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது சூப்பராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.






