என் மலர்
சினிமா செய்திகள்

கிணறு- திரைவிமர்சனம்
கனிஷ் குமார், மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் ஆகிய நான்கு சிறுவர்கள் நெருங்கிய நண்பர்களாக கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் கிணறு ஒன்றில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அந்த கிணற்றின் உரிமையாளர் வந்து நான்கு பேரையும் அடித்து விரட்டுகிறார். இதிலிருந்து நான்கு பேரும் நமக்கென்று சொந்தமாக கிணறு இருந்தால் யாரிடமும் அடி வாங்க தேவையில்லை என்று நினைக்கிறார்கள்.
தன் பாட்டியுடன் வாழ்ந்து வரும் கனிஷ் குமார், தங்களுக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்ட வேண்டும் என்று பாட்டியிடம் கேட்கிறார். ஆனால் பாட்டியோ தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி கிணறு வெட்ட மறுப்பு தெரிவிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளாத கனிஷ் குமார், எப்படியாவது கிணறு கட்ட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
இறுதியில் கணேஷ் குமார் நண்பர்களுடன் சேர்ந்து கிணறு கட்டினாரா? இல்லையா?என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஏற்றி நடித்திருக்கும் கனிஷ்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிணறு கட்ட வேண்டும் என்று முயற்சி செய்வது, தன் பாட்டியுடன் கோபம் கொள்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.
நண்பர்களான மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் ஆகியோருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கிறது. நான்கு சிறுவர்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களது டைமிங் காமெடி பல இடங்களில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
பாட்டியாக நடித்திருப்பவரின் நடிப்பு சிறப்பு. பேரன் மீது வைத்திருக்கும் பாசத்தால் நெகிழ வைத்திருக்கிறார். பஞ்சர் ஓட்டுபவராக வரும் விவேக் பிரசன்னா, நடிப்பால் கண் கலங்க வைத்திருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார்.
இயக்கம்
சொந்த இடத்தில் கிணறு தோண்டி குளிக்க நினைக்கும் நான்கு சிறுவர்களின் கதையை மையமாக வைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஹரி குமரன். சிறுவர்களிலேயே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். திரைக்கதையை போரடிக்காமல் நகர்த்தி இருப்பது சிறப்பு. நான்கு சிறுவர்களின் குடும்பத்தனத்தை எதார்த்தமாக படமாக்கியதற்கு வாழ்த்துக்கள். ஒரு சில தேவையில்லாத காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
இசை
புவனேஷ் செல்வனேசன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ஔிப்பதிவு
கௌதம் வெங்கடேசின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை ரசிக்க வைத்து இருக்கிறார்.






