என் மலர்
சினிமா செய்திகள்

ஆரியன்- திரை விமர்சனம்
நாயகி ஷ்ரத்தா ஶ்ரீநாத் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு நேர்காணலில் பிரபல நடிகர் ஒருவரை பேட்டி எடுக்கிறார்.
அப்போது பார்வையாளர்களில் ஒருவரான செல்வராகவன், பேட்டியின் போது நடிகரை அடித்துவிட்டு நேரலையில் பேசுகிறார். அப்போது அடுத்து வரும் ஐந்து நாட்களில் 5 கொலைகள் நடக்க இருக்கிறது என்று சொல்லிவிட்டு துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அதன்படி அடுத்த நாளில் ஒரு கொலை நடக்கிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் களம் இறங்குகிறார். இவர் விசாரித்து வரும் நிலையில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கிறது. இந்த கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சி செய்கிறார்.
இறுதியில் விஷ்ணு விஷாலின் முயற்சி என்ன ஆனது? செல்வராகவன் யார்? கொலைகள் எப்படி நடக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், நடிப்பில் முதிர்ச்சி பெற்று இருக்கிறார். போலீஸ் உடைய கச்சிதமாக பொருந்தியிருந்தாலும், தாடி மீசை இல்லாமல் நடித்திருப்பது பொருந்தாது போல் இருக்கிறது. ஆக்சன் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆரம்ப மிரட்டல் ஆகவும், இறுதியில் பரிதாபமான நடிப்பையும் கொடுத்து இருக்கிறார் செல்வராகவன். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
தொடர்ந்து நடக்கும் கொலைகள், அதன் பின்னணி என்ன என்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன். வழக்கமான கிரைம் திரில்லர் பாணியில் இல்லாமல் மாறுபட்டு இருப்பது சிறப்பு. இந்த நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் நிறைய பேர் நம் அருகில் இருக்கிறார்கள். அவர்களை நாம் கண்டு கொள்வதில்லை என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக செல்லும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். அதுபோல் லாஜிக் மீறல்கள் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.
இசை
ஜிப்ரானின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ஔிப்பதிவு
ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.






