என் மலர்
சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாம் - போஸ் வெங்கட்
- நடிகர்கள், நடிகைகள் மக்களின் சொத்து. அவர்களை இழிவாக பேசுவது உங்களுக்கு தான் இழப்பு.
- பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை.
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
அரசியல் என்பது மக்களுக்கான சேவை. மக்களுக்காக சேவை செய்ய எந்த துறையில் இருந்து வரவேண்டும் என்பது இல்லை. ஆனால் உண்மையான சேவை மனப்பான்மையுடன் வருகிறார்களா என்பது தான் கேள்வி.
நடிகர்கள் வரட்டும் அல்லது வேறு தொழிலை சேர்ந்தவர்கள் வரட்டும். அவர்களின் அரசியல் அனுபவம் என்ன? மக்களுடன் அவர்களுக்கு இருக்கக்கூடிய தொடர்பு என்ன? மக்களுடன் எப்படி நெருங்கி பழகினார்கள். பிரச்சனைகளை எப்படி அணுகினார்கள் என்பதின் வெளிப்பாடாக அரசியலுக்கு வருவதுதான் சரியாக இருக்கும். அது யாராக இருந்தாலும் சரி.
நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். உலகளாவிய அளவில் அவர்களின் முகம் மக்களுக்கு தெரிந்து இருக்குமே தவிர தகுதிகளாக என்ன இருக்கிறது என்று பார்க்கும்போது தகுதியற்றவர்கள் வருவதை வரவேற்க மாட்டோம். அது நடிகர்களாக இருக்கட்டும். யாராகவும் இருக்கட்டும்.
தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிட பணிகள் ஓரளவுக்கு முடிந்து விட்டது. அடுத்த ஆண்டில் ஒரு மிகப்பெரிய கட்டிட திறப்பு விழாவுக்கு தயாராக இருங்கள்.
நடிகர்கள், நடிகைகள் மக்களுக்கானவர்கள். கேள்வி கேட்பவர்கள் யாராக இருக்கட்டும். நடிகைகள் மீது ஒரு பார்வை வைக்கிறார்கள். நடிகர்கள், நடிகைகள் மக்களின் சொத்து. அவர்களை இழிவாக பேசுவது உங்களுக்கு தான் இழப்பு. நடிகர்கள், நடிகைகள் ஆடிப்பாடுவது உங்களின் சந்தோஷத்திற்காகத்தான். அவர்களை இழிவாக பேசுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டும் நடக்கவில்லை. உலகம் முழுவதும வெவ்வேறு தலைப்புகளில் நடந்து கொண்டிருக்கிறது.
அது கலாச்சார சீர்கேடாக போகும்போது தடை செய்வதில் தவறு இல்லை. நமக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது. டி.வி.க்கு சென்சார் இல்லை என்பதால் ஆடைக்குறைப்பு, கிஸ் போன்ற காட்சிகளை நாம் தவிர்ப்பது நல்லதுதான்.
அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று இல்லை. உலகத்தில் எந்த ஒரு நிகழ்வு மக்களுக்கு இடையூறு செய்கிறதோ, தொந்தரவு செய்கிறதோ, மக்களுக்கு தேவையில்லாததை தடை செய்வதில் தப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






