என் மலர்
சினிமா

ஆர்.கே.செல்வமணி
பெப்சிக்கு எவ்வளவு நிதி கிடைத்தது? - ஆர்.கே.செல்வமணி விளக்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கும் திரைப்பிரபலங்கள் அளித்த நிதி எவ்வளவு என்பது குறித்து அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- “கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி கஷ்டப்படும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ நிதி வழங்குமாறு திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்தோம். அதை ஏற்று நடிகர்கள் உள்ளிட்ட பலர் ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன.
பெப்சியில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உதவி வழங்க ரூ.3 கோடியே 75 லட்சம் தேவைப்படுகிறது. இதுவரை 15 ஆயிரம் பேருக்கு உதவி உள்ளோம். ஒரு நபருக்கு 25 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க 500 ரூபாயும் அளித்து வருகிறோம். மற்றவர்களுக்கும் இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நிதி வழங்குவதை வைத்து உதவிகள் செய்யப்படும்.

அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்னும் சில தினங்களில் உதவிகள் வழங்கி முடித்து விடுவோம். திரைப்பட துறையில் வேராக இருக்கும் பெப்சி தொழிலாளர்களுக்கு திரையுலகினர் அனைவரும் உதவ வேண்டும்”. கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களின் துயர் துடைக்க முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ‘பெப்சி’ சார்பில் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
Next Story






