என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.
    டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.

    பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும்.

    இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:-

    "எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை ஜெயலட்சுமி.

    நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8.

    நான் பிறப்பதற்கு முன்பே திருமணம் ஆன மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். 8 வயதில் திருமணம்; 9 வயதில் விதவை. பெயரோ மங்களம். என்ன வினோதம்.

    சின்னஞ்சிறு வயதில் என் சகோதரிக்கு ஏற்பட்ட அந்த இழப்பு இன்னமும் என் நெஞ்சை கனக்க வைக்கிறது.

    இதெல்லாம் புரிய எனக்கு 13 ஆண்டுகள் ஆயின. அவ்வளவு இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தாக்கம் முழுமையாக எனக்குத் தெரிந்தது.

    என்னுடைய இளைய சகோதரி ஜெயா, மும்பையில் தனது கணவர் சங்கருடன் வாழ்ந்து வந்தாள். அவளது கணவர் "எல்.ஐ.சி.''யில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வந்தார்.

    அப்போது எனக்கு 27 வயது இருக்கும். என் தங்கைக்கு 25 வயது இருக்கும். அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

    "என் கணவருக்கு உடல் நலம் இல்லை. ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதால், உதவிக்கு நீ இங்கு வந்து சில நாட்கள் தங்கவும்'' என்று, தங்கையிடம் இருந்து கடிதம் வந்தது. நானும் என் மனைவியும் புறப்பட்டுச் சென்றோம்.

    மும்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட என் மைத்துனருக்கு என்ன நோய் என்பதை, என் தங்கையிடம் சொல்லவே இல்லை. நான் டாக்டரைப் போய்ப் பார்த்தேன். அவர், "உங்கள் மைத்துனருக்கு கேன்சர். அவர் அதிக நாள் உயிரோடு இருக்கமாட்டார். இதை உங்கள் தங்கையிடம் சொல்லவில்லை. வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் என்பதால், உங்களிடம் மட்டும் சொல்லி இருக்கிறேன். நீங்கள் அவரை இங்கிருந்து அழைத்துச்சென்று விடுங்கள். அவருக்கு என்ன மருந்து தந்தாலும் பயன் இல்லை. வீண் செலவு செய்யவேண்டாம்'' என்றார்.

    டாக்டர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை. மனைவியிடம் சொல்லலாமா அல்லது தங்கையிடம் சொல்லி விடலாமா என்று தவித்தேன். ஏனென்றால் அப்போது எனக்கும் இள வயதுதானே.

    வீடு திரும்பும்போது, வழியில் ரெயில் நிலையத்தில் உட்கார்ந்து அழுதேன்.

    பிறகு என் தங்கையை சந்தித்தபோது, "டாக்டர் என்ன சொன்னார்... இன்னும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்று என்னிடம் கூறினாரே...!'' என்றாள்.

    என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தேன்.

    "அவர்தான் ஒரு வாரத்தில் வந்து விடுவாரே! நீ நாலைந்து நாள் லீவு போட்டு விட்டு இங்கேயே இரு'' என்றாள்.

    டாக்டர் சொன்னதை தங்கையிடம் சொல்லி, அவள் கணவரை ஆஸ்பத்திரியில் இருந்து அழைத்து வந்து விடலாம் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தபோது, அந்த சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியில் எனது தங்கையின் கணவர் இறந்து போனார். எனக்கு இது பேரிடிபோல் இருந்தது. இதற்குமுன் எத்தனையோ துயர நிகழ்ச்சிகள் என் வாழ்க்கையில் நடந்திருந்தாலும், இதுதான் பேரிடியாக வந்து இறங்கியது.

    இளம் வயதிலேயே விதவையான எனது தங்கையின் நிலையைக்கண்டு இடிந்து போய்விட்டேன்.

    அங்கேயே காரியங்கள் எல்லாம் முடிந்தன. சில நாள் கழித்து மூட்டை முடிச்சுகளுடன் சென்னைக்குப் புறப்பட்டோம்.

    நான்கு வயது, இரண்டு வயது என்று இரு பெண் குழந்தைகளோடு எனது வீட்டுக்கு வந்தாள் என் தங்கை.

    என் மனைவிக்கு பெரும் பொறுப்பாகி விட்டது. பள்ளிக்குச் செல்லும் இரண்டு குழந்தைகளையும் பராமரிப்பது எப்படி என்று முதலில் சங்கடம் ஏற்பட்டாலும், பின்னர் எனது சகோதரியை அவளது சகோதரியாகவும், அவள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொண்டாள்.

    ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னே, இனம் புரியாத சோகம் உள்ளது. அந்த சோகத்தின் தாக்கம் அவ்வப்போது வெளிப்படும்போதும் அது புதிய சிந்தனைகளை -சீர்திருத்தக் கருத்துக்களை அள்ளி வழங்குகிறது. எப்போதுமே அடிபட்டவனுக்குத்தானே அதிகம் வலிக்கும்.

    எனது படங்களில் வந்த சீர்திருத்தக் கருத்துக்களுக்குப் பின்னணி என்ன என்பது இப்போது புரிகிறதா?''

    இவ்வாறு பாலசந்தர் எழுதியுள்ளார்.

    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி" படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.
    பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி" படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

    1982-ல், "அக்னி சாட்சி'' என்ற படத்தை பாலசந்தர் தயாரித்தார். கதை -வசனம் -டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கவனித்தார். படம் சிறப்பாக அமைந்தும் சரியாக ஓடவில்லை.

    பின்னர் "அச்சமில்லை அச்சமில்லை'', "கல்யாண அகதிகள்'' ஆகிய படங்களை தயாரித்தார். அவள் ஒரு தொடர்கதை, இருகோடுகள் ஆகிய படங்களை கன்னடத்திலும், "வறுமையின் நிறம் சிவப்பு'', "அபூர்வ ராகங்கள்'' ஆகிய படங்களை இந்தியிலும் எடுத்தார்.

    1985-ல் அவர் கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்த "சிந்து பைரவி'' மகத்தான படமாக அமைந்தது.

    இதில் சிவகுமார், சுகாசினி, சுலக்ஷனா ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார்.

    கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாவற்றிலும் சிறந்த படமாக "சிந்து பைரவி'' அமைந்தது.

    இந்தப் படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

    (1) சிறந்த நடிகை -சுகாசினி.

    (2) சிறந்த இசை அமைப்பாளர் -இளையராஜா.

    (3) சிறந்த பின்னணி பாடகி -சித்ரா. (பாடறியேன்... படிப்பறியேன்...'' பாட்டுக்காக.)

    சிறந்த நடிகை விருது பெற்ற சுகாசினி இதற்கு முன் பல தமிழ்ப்படங்களில் நடித்திருந்தாலும், பாலசந்தரின் படத்தில் நடிப்பது அதுவே முதல் படம். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைக்கக்கூடிய அளவுக்கு நடிக்க வைத்த பெருமை, பாலசந்தரையே சாரும்.

    சிந்து பைரவியின் வெற்றி பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "சிந்து பைரவி படத்தை தொடக்கத்தில் பார்த்த யாருமே இது இவ்வளவு வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு பெரும் வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றால், படத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள், அந்த அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள்.

    விருது வாங்கும் அளவுக்கு இந்தப்படத்தை நான் கணிக்கவில்லை என்றாலும், "சிந்து'' என்ற கேரக்டரை நான் உருவாக்கியபோதே, இந்தப் பாத்திரம் ஏதோ பெரிதாக பண்ணப்போகிறது என்பது, என் உள்ளுணர்வுக்குத் தெரிந்தது.

    சில நேரங்களில் எனக்கு கேரக்டர்கள் ஒரு இன்ஸ்பிரேஷனைத் தரும். சில நேரங்களில் என் படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எதிர்பாராமல் இன்ஸ்பிரேஷன் தருவார்கள். அந்த வகையில் சிந்துவாக நடித்த சுகாசினி, அந்த இன்ஸ்பிரேஷனை ஓரளவு அதிகமாகவே தந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

    தன் அற்புதமான நடிப்புத் திறமையாலும், வெகுளித்தனமான சிரிப்பாலும், சிந்து கேரக்டருக்கு ஒரு முழுமையைத் தந்து, சிந்து கேரக்டரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி சாதனை புரிந்து விட்டார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது முற்றிலும் பொருத்தமானது.''

    இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

    நடிகை சுகாசினி கூறியதாவது:-

    "தேசிய விருதை நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறினால், என்னையே நான் ஏமாற்றிக் கொள்வது போல் ஆகிவிடும். இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு விருது நிச்சயமாய் கிடைக்கும் என்று என் உள் மனம் கூறிக்கொண்டே இருந்தது.

    நான் இந்த விருதைப் பெறுவதற்கு முக்கிய காரணம் பாலசந்தர்தான்.

    முதலில் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று பாலசந்தர் சொன்னபோது, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. ஒவ்வொரு காட்சியையும் அவரே நடித்துக்காட்டி விளக்கி விடுவார் என்று கேள்விப்பட்டிருந்ததால், நமக்கு அதிக சிரமம் இருக்காது என்று எண்ணி ஒப்புக்கொண்டேன்.

    அவர் படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து பெரிதுமë மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப்பெண்ணான நான், ஒரு தமிழ்ப்படத்தின் மூலம் இந்த பரிசைப் பெற்றது குறித்து பெருமைப்படுகிறேன்.''

    இவ்வாறு சுகாசினி கூறினார்.

    "சிந்து பைரவி'' கதாநாயகன் சிவகுமார் கூறியிருப்பதாவது:-

    "கிட்டத்தட்ட 200 படங்கள் செய்து விட்ட எனக்கு, அகில உலகிலும் கவுரவத்தைப் பெற்று தந்த படம் "சிந்து பைரவி.''

    இசையில் ஒருத்தி மயக்குகிறாள். இல்லறத்தில் ஒருத்தி மயக்குகிறாள். நடுவிலே, "ஜே.கே.பி.'' என்றொரு அற்புதமான பாத்திரத்தை எனக்குக் கொடுத்தார், பாலசந்தர்.

    இளையராஜா இசையும், ஜேசுதாஸ் அவர்களின் குரலும் "ஜே.கே.பி''யை முழுமையான கலைஞனாக மக்கள் முன் காட்ட பெரிதும் உதவின.

    பாலசந்தர் அவர்களின் படங்களில் நடிப்பது என்பது சுகானுபவம். காட்சிகளை அவர் கற்பனை செய்வதும், அதற்கு குறும்பும், புத்திசாலித்தனமும் கலந்து வசனங்களை எழுதுவதும் அவரை தனித்துக்காட்டும்.

    கலை உலகில் அவர் ஒரு பீஷ்மர்.''

    இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.
    சிவாஜிக்கு பால்கே விருது: தேர்வுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன? - பாலசந்தர் வெளியிடும் தகவல்கள்
    சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

    இந்தியாவின் முதல் சினிமா படமான "ராஜா அரிச்சந்திரா''வை தயாரித்தவர் தாதாசாகிப் பால்கே. வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறவர்களுக்கு, ஆண்டு தோறும் மத்திய அரசு பால்கே பெயரால் விருது வழங்குகிறது. இந்தியாவில், திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது.

    1952-ல் "பராசக்தி'' மூலம் பட உலகில் நுழைந்த சிவாஜிக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்'') கடைசி வரை வழங்கப்படவில்லை. கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக ஆசிய -ஆப்பிரிக்கப் பட விழாவில் விருது பெற்ற சிவாஜிக்கு, அகில இந்திய விருது கிடைக்கவில்லை.

    இதன் காரணமாக, பால்கே விருது சிவாஜிக்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட உலகத்தினர் தீவிரமாகப் போராடினார்கள். கடைசியில் 1997-ம் ஆண்டுக்கான "பால்கே'' விருது சிவாஜிக்கு வழங்கப்பட்டது.

    "பால்கே'' விருதை யாருக்கு வழங்கலாம் என்று தீர்மானிக்க மத்திய அரசு அமைத்த குழுவில் பாலசந்தர் இடம் பெற்றிருந்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டது பற்றியும், சிவாஜியின் பெயர் முடிவாவதற்கு முன் அந்தக் குழு கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பாலசந்தர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

    "எண்ணற்ற படங்களில் நடித்து தன் இமாலய நடிப்பின் மூலம் அகிலமெல்லாம் புகழ் பெற்ற சிவாஜிக்கு மத்திய அரசால் சிறந்த நடிகர் விருது வழங்கப்படவில்லையே என்ற ஆதங்கம், வருத்தம், தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இருந்து வந்தது.

    சிவாஜிக்கு இந்த விருது கிடைக்கவில்லையே என மற்றவர்கள் வருந்த... சிவாஜிக்கோ மனதில் எந்த வருத்தமும் இல்லை. "நம்ம... நல்லா நடிக்கலைன்னு அவங்க நினைக்கிறாங்க போலிருக்கு'' என நகைச்சுவையாகச் சொல்லிவிட்டுப் போய்விடுவார்.

    இந்த நேரத்தில்தான் `தாதா சாகேப் பால்கே' விருது வழங்கிட மத்திய அரசு ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு சிபாரிசு செய்பவருக்குத்தான் இனிமேல் விருது வழங்குவது என்றும் தீர்மானித்தது.

    குழு நியமிக்கப்பட்ட இரண்டாவது ஆண்டில், தென்னிந்தியாவின் சார்பில் உறுப்பினராக என்னை நியமிக்கலாமா என்று மத்திய அரசு ஆலோசித்து, அதுபற்றி என் சம்மதத்தை கேட்டார்கள். அவர்கள் இப்படிக் கேட்டதும் சிவாஜி பெயரை சிபாரிசு பண்ணிட இது ஒரு நல்ல வாய்ப்பு என எண்ணினேன்.

    சிவாஜிக்கு நான் சிபாரிசு செய்துதான் விருது வாங்கித்தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் திறமை உலகறிந்த ஒன்று. இருந்தாலும், ராமருக்கு உதவிய அணில் போல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன்.

    சிவாஜிக்கு அந்த விருது வழங்கப்படாமல் கை நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. இங்கிருந்து பல பேர் சிபாரிசு செய்தாலும், அது நிறைவேறாமலே இருந்தது. இது எல்லாம் எனக்குத் தெரிந்ததுதான்.

    அதற்கு முந்திய ஆண்டே நான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தேன். அப்போதே நாங்கள் சிவாஜிக்கு விருது வழங்க வேண்டும் என சிபாரிசும் செய்து இருந்தோம். குழு போட்ட பிறகு அதன் முடிவே இறுதியானது என அறிவித்து விட்டார்கள்.

    குழுவில் ஆறேழு பேர் இருந்தோம். தமிழ்நாட்டில் இருந்து நான் நியமிக்கப்பட்டதைப் போல, ஆந்திராவில் இருந்து நாகேஸ்வரராவ் இருந்தது மிகப்பெரும் பலமாக அமைந்தது. மற்றவர்கள் எல்லாம் வடநாட்டுக்காரர்கள்.

    இது தொடர்பான கூட்டம் மும்பையில் நடைபெற்றது. பெரும்பாலும் இப்படி விழாக்கள், கூட்டங்களுக்காக நான் பயணிப்பதைத் தவிர்த்து விடுவேன். ஆனால் இந்த முறை மும்பை செல்ல தீர்மானித்து, அதன்படி சென்றேன்.

    நானும் நாகேஸ்வரராவும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தோம்.

    ஓட்டலில் நாகேஸ்வரராவைச் சந்தித்தேன். அவரிடம் பேசும்போது சிவாஜிக்கு இந்த முறை விருது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருப்பது தெரியவந்தது.

    ஏனெனில் நாகேஸ்வரராவுக்கு ஏற்கனவே விருது கிடைத்து விட்டது. "இந்த முறை சிவாஜிக்கு விருது வழங்கியே தீரவேண்டும் என்று வலியுறுத்துவதற்காகவே நானும் வந்தேன்'' என அவரும் சொன்னார். இருவருக்கும் ஒரே எண்ணம்.

    கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் ஒரு வங்காளி எழுந்து, அவர் மாநிலத்தைச் சேர்ந்தவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் எனச் சொன்னார்.

    அதே போல் -இந்திக்காரர்களும் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயரை வலியுறுத்தினார்கள். யாரும் சிவாஜி பெயரைச் சொல்வதாக இல்லை.

    பின்னர் நான் எழுந்தேன். "இந்த ஆண்டு சிவாஜியைத் தவிர வேறு யாரையும் நாம் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளக் கூடாது'' என ஆணித்தரமாகப் பேசினேன். நாகேஸ்வரராவும் என்னுடன் சேர்ந்து கொண்டார்.

    "சிவாஜிக்கு இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் தாமதித்தது பெரும் தவறு. அவர் மிகப்பெரும் நடிகர். விருது, சிவாஜியை பெருமைப்படுத்துவதாக அமையாது. சிவாஜிக்கு வழங்கப்பட்டால் அந்த விருதுக்குத்தான் பெருமை. ஒரு தலைசிறந்த நடிகருக்கு இந்த விருது கிடைத்தது என்பதால் பெருமை'' என்றெல்லாம் நாங்கள் வாதாடினோம்.

    வங்காளத்தில் இருந்து வந்தவர், ஒரு டைரக்டர் பெயரை வலியுறுத்தினார்.

    சிவாஜிக்கு அப்போது சிங்கப்பூர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரம். இதனைச் சுட்டிக்காட்டி, "அவர் வாழும் காலத்தில் நீங்கள் இந்த விருதை வழங்காமல் பிறகு எப்போதோ வழங்கி என்ன பயன்?'' என்று பேசினேன்.

    இதேபோல் நாகேஸ்வரராவும், "சிவாஜி முன் நான் மிகச் சாதாரண நடிகன். எனக்கு அந்த விருதை வழங்கி சிறப்பித்த நீங்கள், இதுவரை சிவாஜிக்கு வழங்காமல் இருப்பது தவறு'' என ஆணித்தரமாக பேசினார். "இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநíதி'' என்றார்.

    நாங்கள் இப்படிப் பேசவும், மற்றவர்கள் அடங்கிப் போனார்கள். ஆனாலும் வங்காளத்துக்காரர் விடுவதாக இல்லை.

    மூன்று பெயர்களை குழு சிபாரிசு செய்யவேண்டும் என்பது விதி. முதலில் சிவாஜியின் பெயர், அதன் பிறகு மற்றவர்கள் பெயர் எனத் தீர்மானித்து விட்டோம்.

    குழு தனது சிபாரிசை மத்திய அரசுக்குத் தெரிவித்தது. தமிழ் மக்களின் விருப்பத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. சிவாஜிக்கு `பால்கே' விருது வழங்கப்பட்டது.

    இதை நான் சொல்வதால், சிவாஜிக்கு நான் சொல்லித்தான் விருது வழங்கப்பட்டது என்று யாரும் தவறாக எண்ணிவிடக்கூடாது. அவருக்கு விருது வழங்கும் நேரத்தில் நானும் ஒரு கருவியாக, துரும்பாக இருந்தேன் என்பதற்காகத்தான் அந்த மகிழ்ச்சிக்காகத்தான் சொல்கிறேன்.

    தமிழ் மக்களின் நெஞ்சில் பல்லாண்டு காலமாக தேங்கிக் கிடந்த கனவு, சிவாஜிக்கு பால்கே விருது வழங்கப்பட்டதால் நிறைவேறியது.

    தமிழ்நாடு பெற்ற தன்னிகரில்லாத அந்தத் தலைமகன் சிவாஜிக்கு விருது என மத்திய அரசு முறைப்படி அறிவித்தது.

    மகிழ்ச்சிப் பெருக்கால் தமிழ்நாடு குதூகலித்தது. அந்த நல்ல நாளில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை, இயக்குனர் சங்கம், நடிகர், நடிகையர் வாழ்த்துச் சொல்ல சிவாஜி வீட்டுக்குச் சென்றோம்.

    ஆளுயர மாலை அணிவித்து அவரை வாழ்த்தினோம். தனக்கு வாழ்த்துச் சொல்ல வந்தவர்களை அன்போடு வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தார் சிவாஜி.

    நான் அவர் அருகே சென்றதும் என்னைக் கட்டிப்பிடித்து `தேங்க்ï பாலு' எனச் சொன்னார். சொன்னதோடு இல்லாமல் என்னை ஆரத் தழுவிக் கொண்டார்.

    அவர் அப்படிச் சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதாக உணர்ந்தேன்.

    நான் அந்த விருது தேர்வுக்குழுவில் இருந்தது அவருக்குத் தெரிந்திருக்கலாம். அல்லது நாங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவாஜிக்காகப் பரிந்து பேசியதை நாகேஸ்வரராவ் கூட சிவாஜியிடம் சொல்லி இருக்கலாம்.

    அன்றைய தினம் நாங்கள் மட்டுமல்ல, சிவாஜியும் மிக மகிழ்ச்சியாக இருந்தார்.

    பட்டங்களும், விருதுகளும் சரியான நேரத்தில் சரியானவருக்கு வழங்கப்பட்டு விடவேண்டும் என்பதில் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு.

    அந்த வகையில் தாமதம் ஆனாலும், சிவாஜிக்கு உரிய மரியாதை கிடைத்து விட்டதில் மகிழ்ச்சி அடைந்தேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.
    கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    பாலசந்தரின் சொந்த பட நிறுவனம் "கவிதாலயா.'' அந்த நிறுவனத்தின் பெரும்பாலான படங்களை பாலசந்தர் டைரக்ட் செய்தார் என்றாலும், நிறுவனத்தின் பொருளாதார நிலையை வலுவாக வைத்துக்கொள்வதற்காக, இடையிடையே சில கமர்ஷியல் படங்களையும் தயாரிக்க வேண்டியிருந்தது.

    புரட்சிகரமான, புதுமையான, பரீட்சார்த்தமான படங்களை டைரக்ட் செய்து வந்த பாலசந்தர், கமர்ஷியல் படங்களை இயக்க விரும்பவில்லை. மக்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய படங்களை - அதாவது மசாலா படங்களை தயாரிப்பதற்கு வேறு திறமை வேண்டும் என்று கருதினார்.

    இந்த முடிவுக்கு வந்தபின் பாலசந்தரின் மனக்கண் முன் தோன்றியவர் எஸ்.பி.முத்துராமன்தான். கருத்துள்ள படங்களையும், கமர்ஷியல் படங்களையும் டைரக்ட் செய்யக்கூடிய திறமையைப் பெற்றவர் அவர். அதே சமயம் சினிமாத்தனங்கள் இல்லாத -எல்லோராலும் மதிக்கப்பட்ட இயக்குனராகவும் திகழ்ந்தார்.

    ரஜினியை தந்தை, மகன் என்று இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, "நெற்றிக்கண்'' என்ற படத்தை தயாரிக்க பாலசந்தர் முடிவு செய்தார். அந்தப் படத்தை டைரக்ட் செய்யும் பொறுப்பை எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

    லட்சுமி, சரத்பாபு, மேனகா, சரிதா ஆகியோரும் இப்படத்தில் நடித்தனர்.

    15-8-1981-ல் வெளிவந்த "நெற்றிக்கண்'' மகத்தான வெற்றி பெற்றது.

    பிறகு, ரஜினியை வைத்து "நான் மகான் அல்ல'', "வேலைக்காரன்'', "புதுக்கவிதை'', "ராகவேந்திரா'' ஆகிய படங்களை பாலசந்தர் தயாரிக்க, எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்.

    "வேலைக்காரன்'' படத்தில், ரஜினிக்கு ஜோடியாக அமலா நடித்தார். படம் "மெகாஹிட்.''

    ரஜினிகாந்தின் நூறாவது படம் "ராகவேந்திரா.''

    ரஜினி, ராகவேந்திரரின் பக்தர். அதனால், தனது 100-வது படமாக ராகவேந்திரர் வரலாற்றை படமாக்க வேண்டும் என்றும், ராகவேந்திரராக தான் நடிக்க வேண்டும் என்றும் விரும்பினார்.

    பாலசந்தரை சந்தித்து, "என்னுடைய நூறாவது படம் ராகவேந்திரர். என்னை திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய நீங்கள்தான் இப்படத்தை தயாரிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    பாலசந்தர் இதற்கு சம்மதம் தெரிவித்தார். ராகவேந்திரர் படத்தை டைரக்ட் செய்யுமாறு, எஸ்.பி.முத்துராமனிடம் கூறினார்.

    முத்துராமன் தயங்கினார். "ராகவேந்திரர் வேடத்தில் ரஜினி நடிப்பதை அவருடைய ரசிகர்கள் ஏற்கவேண்டுமே! படம் வியாபார ரீதியில் வெற்றி பெறாவிட்டால் என்ன செய்வது?'' என்று கேட்டார்.

    "இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இது வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும் கவலை இல்லை. ரஜினியின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக படம் அமைந்தால் போதுமானது'' என்று பாலசந்தர் பதிலளித்தார்.

    இந்தப் படத்தில் ரஜினியுடன் மோகன், லட்சுமி, கே.ஆர்.விஜயா, அம்பிகா ஆகியோர் நடித்தனர். வசனத்தை ஏ.எல்.நாராயணன் எழுதினார்.

    இப்படம் 1985 செப்டம்பர் 1-ந்தேதி வெளிவந்தது.

    கமர்ஷியல் படங்களுக்கான வரவேற்பை இப்படம் பெறாமல் போனாலும், ரஜினியின் மாறுபட்ட நடிப்பை ரசிகர்கள் வியந்து ரசித்தனர்.

    கமலஹாசனை வைத்து "எனக்குள் ஒருவன்'' படத்தை பாலசந்தர் தயாரித்தார். பூர்வஜென்மம் பற்றிய கதை இது.

    கமலஹாசன் புதுமையான வேடத்தில் நடித்தார். சத்யராஜ், ஸ்ரீபிரியா ஆகியோரும் நடித்தனர். இந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன்தான் டைரக்ட் செய்தார்.

    மற்ற பட அதிபர்கள் தயாரித்த படங்களிலும் ரஜினிகாந்த்தை இயக்கியவர் முத்துராமன். "ஆறிலிருந்து அறுபது வரை'', "எங்கேயோ கேட்ட குரல்'' ஆகிய படங்களில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் ரஜினியை நடிக்க வைத்தார்.

    எனவே, "ரஜினிகாந்த் என்ற வைரத்தை நான் கண்டுபிடித்தேன். அந்த வைரத்தை பட்டை தீட்டியவர் எஸ்.பி.முத்துராமன்'' என்று பாலசந்தர் பாராட்டியுள்ளார்.

    "பாலசந்தர் பெரிய டைரக்டர். அவர் படங்களை இயக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றீர்கள். அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் எப்படி? நீங்கள் டைரக்ட் செய்யும்போது, பாலசந்தர் தலையிட்டு ஏதாவது ஆலோசனைகள் கூறுவாரா?'' என்று கேட்டதற்கு பதிலளித்து முத்துராமன் கூறியதாவது:-

    "படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், கதையை கேட்பார். ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அதைச் சொல்வார்.

    அதன் பிறகு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வரவேமாட்டார். படப்பிடிப்பு முடிந்த பிறகு, முதல் பிரதியை அவருக்குப் போட்டுக்காட்டுவோம். அவ்வளவுதான்.

    படப்பிடிப்பு செலவுகளில் சிக்கனம் பார்க்கமாட்டார். "நீங்கள் ஏவி.எம்.ஸ்டூடியோவில் பணியாற்றுகிறீர்கள். அங்கு, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் படத்தை சிறப்பாகத் தயாரிக்கிறார்கள். அதேபோலவே இங்கும் செலவைப்பற்றி சிந்திக்காமல், படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும். சிக்கனம் பார்க்காதீர்கள்'' என்று என்னிடம் கூறுவார்.

    அவருடைய படங்களில் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத -மகிழ்ச்சியான அனுபவம்.''

    இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் கூறினார்.

    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?

    இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

    இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-

    "முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.

    நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

    தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!

    என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.

    "ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.

    "47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

    கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.

    இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-

    "ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.

    நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.

    "லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.

    நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.

    "மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

    நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.

    அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.

    "சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.

    இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.

    "அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.

    "ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''

    இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.
    தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து பாலசந்தர் உருவாக்கிய "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்தது. ஆனால் மாநில அரசின் பரிசு கிடைக்கவில்லை.

    கமலஹாசனையும், ஸ்ரீதேவியையும் வைத்து "வறுமையின் நிறம் சிவப்பு'' என்ற படத்தை 1980-ல் பாலசந்தர் உருவாக்கினார். கருத்தாழம் மிக்க படம்.

    பொதுவாக, பாடல் காட்சிகளை சிறப்பாகவும், புதுமையாகவும் படமாக்க வேண்டும் என்பதில், பாலசந்தர் அதிகம் சிரமம் எடுத்துக்கொள்வார். உதாரணமாக, அவள் ஒரு தொடர் கதையில் "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சி புதுமையானது. பாடலில் சிங்கம் கர்ஜிப்பது, யானை பிளிறுவது போன்ற சத்தங்கள் வரும். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட, கமலஹாசன் பிரமாதமாக நடித்திருப்பார். பாடல், இசை, நடிப்பு, டைரக்ஷன் எல்லாம் சிறப்பாக அமைந்த காட்சி அது.

    "அவர்கள்'' படத்தில் பேசும் பொம்மையுடன் கமலஹாசன் பாடும் பாடலும் இவ்வாறே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.

    "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்தில் மறக்க முடியாத ஒரு பாடல் காட்சி:-

    பாடலுக்கான மெட்டை (எஸ்.ஜானகியின் குரலில்) இசை அமைப்பாளர் போல ஒவ்வொரு வரியாக ஸ்ரீதேவி பாடிக்காட்ட, "சிப்பி இருக்குது, முத்து இருக்குது'' என்ற பாடல் வரிகளை சொல்லிக் கொண்டே வருவார், கமலஹாசன்.

    இசை, நடிப்பு, டைரக்ஷன் மூன்றும், திரிவேணி சங்கமம் போல் அமைந்த அற்புதக்காட்சி அது.

    இதையடுத்து பாலசந்தர் எடுத்த படம் "தண்ணீர் தண்ணீர்''

    அப்போது (1981) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக இருந்தது. அதை மையமாக வைத்து கோமல்சுவாமி நாதன் கதை- வசனம் எழுதி, நாடகமாக நடத்தியதுதான் "தண்ணீர் தண்ணீர்.'' அதற்கு திரைக்கதை எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    படத்தின் கதாநாயகி சரிதா. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்தனர்.

    அப்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்தார்.

    தண்ணீர் பிரச்சினை என்பதால், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் அரசாங்கத்தை தாக்குவது போல் இருப்பதாக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கருதினார்கள்.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "படம் வெற்றிகரமாக ஓடியது. படத்தில் அரசை தாறுமாறாக தாக்கி இருப்பதாக, எம்.ஜி.ஆருக்கு தகவல் போயிற்று.

    "இந்தப் படத்துக்கு சென்சாரில் எப்படி அனுமதி கொடுத்தார்கள்?'' என்று எம்.ஜி.ஆர். கூறியதாக எனக்கு தெரியவந்தது.

    "படத்தின் முடிவில், எல்லோரும் துப்பாக்கி எடுத்துக்கொண்டு வன்முறை பக்கம் திரும்புவதாக காட்டப்பட்டிருக்கிறது'' என்று பலர் குற்றம் சாட்டினார்கள்.

    ஒரு புரட்சிக்காரன் எப்படி உருவாக்கப்படுகிறான் என்பதை காட்டுவதற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. எல்லோரும் தீவிரவாதியாக மாறவேண்டும் என்று சொன்ன காட்சி அல்ல. அரசு பற்றிய விமர்சனங்களும் நாசூக்காக இருக்கும்.

    படத்தைப்பற்றி வாதப்பிரதி வாதங்கள் நடந்தன. "துப்பாக்கி தூக்கச் சொல்கிறார், பாலசந்தர்'' என்று முணுமுணுக்கப்பட்டதாலும், தணிக்கைக் குழுவுக்கு அரசு சென்றதாலும், அந்தக் கடைசி காட்சியில் சில மாறுதல்கள் செய்தேன்.

    அந்த ஆண்டு விருதுக்காக, மத்திய மாநில அரசுகளுக்கு "தண்ணீர் தண்ணீர்'' அனுப்பப்பட்டது.

    மாநில அரசின் விருது கிடைக்கவில்லை. ஆனால், சிறந்த மாநில மொழிப்படம் என்றும், தேசிய அளவிலான சிறந்த திரைக்கதை என்றும் இரண்டு பரிசுகளை மத்திய அரசு வழங்கியது.

    "தண்ணீர் தண்ணீர்'' படத்துக்கு சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருதும் (சரிதாவுக்கு) வழங்க மாநில தேர்வுக்குழு முடிவு செய்திருப்பதாக, ஆரம்பத்தில் எனக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானபோது, எந்த பரிசும் கிடைக்கவில்லை.

    ஆனால், "வறுமையின் நிறம் சிவப்பு'' படத்துக்கு மாநில அரசின் விருது கிடைத்தது.

    பரிசளிப்பு விழா எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது.

    விருது வழங்கும் விழாவில், எம்.ஜி.ஆர். முன்னிலையில் நான் பேசியது, இன்றும் நினைவில் இருக்கிறது. "என் மீது அரசுக்கு கோபம் இருக்கலாம். தண்ணீர் தண்ணீர் படத்தால் ஏற்பட்ட அந்தக் கோபத்தின் காரணமாக, இந்தப் படத்துக்கும் விருது தரப்படமாட்டாது என்று எண்ணினேன். அதற்கு மாறாக, எம்.ஜி.ஆர். கையால் இப்போது விருது வாங்கி இருக்கிறேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று குறிப்பிட்டேன்.

    எம்.ஜி.ஆர். பேசும்போது, என் பேச்சுக்கு பதிலளித்தார். "அந்தந்த நேரத்தில் எது நல்ல படம் என்று எண்ணுகிறோமோ, அதைத்தான் தேர்வு செய்வோமே தவிர, ஏதோ ஒரு காரணத்துக்காக பழி வாங்கும் எண்ணமோ, திறமையானவர்களை ஒதுக்கி வைத்து விடும் எண்ணமோ கிடையாது'' என்று குறிப்பிட்டார்.

    எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்'' படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம்தான் திரை உலகுக்கு வந்தேன். "எம்.ஜி.ஆர். படத்துக்கு பாலசந்தர் வசனம் எழுதுகிறார்'' என்ற மதிப்பும், மரியாதையும் திரை உலகில் எனக்கு ஏற்பட காரணமாக இருந்தவர் அவர். தனது அரசாங்கத்தை விமர்சித்து படம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் என்னை வாழ்த்தியது கண்டு நெகிழ்ந்து போனேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
    பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    ஏவி.எம். நிறுவனம் தயாரித்த "களத்தூர் கண்ணம்மா'' (1960) படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் கமலஹாசன். அதன்பின் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

    அதன் பின்னர் நாலைந்து வருடம் குழந்தையாகவும் நடிக்க முடியவில்லை; வாலிபனாகவும் நடிக்க முடியவில்லை. எனவே நடனம் கற்றுக்கொண்டார். சில படங்களில் உதவி நடன இயக்குனராகவும், உதவி டைரக்டராகவும் பணியாற்றினார்.

    இந்த சமயத்தில்தான் அவர் பாலசந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

    அதுபற்றி கமலஹாசன் கூறியிருப்பதாவது:-

    "ஜெமினிகணேசன்தான் என்னை முதன் முதலாக பாலசந்தரிடம் அழைத்துச் சென்றார்.

    அப்போது, "அன்னை வேளாங்கண்ணி'' படத்தில் உதவி டைரக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பார்த்த ஜெமினி, "என்னடா இது! இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கே! நடிக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.

    "நீங்க வேற! யார் சார் கூப்பிடறாங்க!'' என்றேன்.

    உடனே அவர் என்னை பாலசந்தரிடம் கூட்டிப்போய் அறிமுகம் செய்து வைத்தார். "ரொம்ப சின்னப் பையனா இருக்கானே!'' என்றார், பாலசந்தர்.

    உடனே ஜெமினிகணேசன், பாலசந்தர் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி, எனக்குப் போட்டு விட்டு, "இப்போது பாருங்க! பெரிய பையனா இல்லே?'' என்று கேட்டார்.

    பாலசந்தர், "எனக்கு கண் தெரியவில்லையே!'' என்றார். ஒரே சிரிப்பு.

    இது நடந்து கொஞ்ச நாளில் பாலசந்தருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். எனக்கு ஒரே வருத்தம்.

    சில நாட்கள் கழித்து அவர் குணம் ஆனதும், என்னைப் பற்றி விசாரித்து இருக்கிறார். "அந்தப் பையனைப் பார்த்தது நினைவு இருக்கிறது. அழைத்து வாருங்கள்'' என்று கூறி ஆள் அனுப்பினார்.

    அவரை போய்ப் பார்த்தேன். அரங்கேற்றத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். அதன்பின் நடந்தது, உங்களுக்குத் தெரியும்.

    "கமலஹாசன் ஒரு ஆக்டர்'' என்பதை திருப்பித் திருப்பி ஆணி அடிச்ச மாதிரி சொல்லிக்கொண்டே இருந்தது பாலசந்தர் ஒருவர்தான்.

    நான் அவருக்குத் தோல்விப் படங்களைக் கொடுத்திருக்கிறேன். என்றாலும், விடாமல் என்னை பயன்படுத்தியிருக்கிறார். அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், நான் அவனில்லை, அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், மன்மதலீலை, மூன்று முடிச்சு, நிழல் நிஜமாகிறது, தப்புத் தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோசரித்ரா, வறுமையின் நிறம் சிவப்பு... இப்படி தொடர்ந்து அவர் படங்களில் நடித்தேன். அவர் எடுத்த "ஆய்னா''வில் (இந்தி "அரங்கேற்றம்'') கூட ஒரு சின்ன ரோலில் வருவேன். அவர் என்னை பயன்படுத்தினார்.... உருவாக்கினார். பெருமைக்குரிய திரையுலகத் தந்தையாக அவர் எனக்குக் கிடைத்தார்.

    அவர் என்னிடம் ரொம்பப் பிரியமாக இருப்பார். அதே சமயம், அவரிடம் அதிகமாகத் திட்டு வாங்கியவனும் நான்தான்.

    எனக்கு வந்த கடிதங்களில் "பொக்கிஷம்'' என 2 கடிதங்களைப் பாதுகாத்து வருகிறேன். இரண்டையுமே எழுதியவர், மதிப்பிற்குரிய பாலசந்தர்தான்.

    நூறு படங்களில் நான் நடித்து முடித்ததற்கான விழாவுக்கு, உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அவரால் வர இயலவில்லை. என்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். வணங்கிய என்னை வாழ்த்தி, முன்பே அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து "இங்கேயே படி'' என்றார். அந்தக் கடிதம்:-

    "எனது இனிய கமல்,

    எனது கமலுக்கு ஒரு மாபெரும் விழா எடுக்கும்பொழுது, அதில் நான் பங்கு கொள்ள முடியாமல் போனது துர்பாக்கியம். நூறு உனக்கு பெரிதல்ல. இன்னும் ஆயிரம் நூறுகள் போடப்போகிறாய். இன்னும் எத்தனையோ சாதனைகள் செய்யப் போகிறாய். உனது சாதனைகள் அனைத்தும், எனக்கும் பெருமை தேடித்தரும் என்று எண்ணுகிறவன் நான்.

    கமல் ஒரு தனி நபரல்ல. ஒரு பெரிய நிறுவனம்.

    வாழ்க உனது நாமம்! வாழ்க உனது பெருமை!

    வாழ்த்துக்களுடன்

    அன்பன்,

    கே.பாலசந்தர்.''

    இக்கடிதத்தை, கண்களில் நீர் துளிக்கப் படித்தேன்.

    மற்றொரு கடிதம்: "பதினாறு வயதினிலே'' படத்தைப் பார்த்துவிட்டு பாச மிகுதியால் "மை டியர் ராஸ்கல்'' என்று ஆரம்பித்து, பாலசந்தர் எழுதியது என் நடிப்புத் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இதுதான் எனக் கருதுகிறேன்.

    அவருடைய திரைப்படங்களில், டைட்டில் கார்டில் "திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - கே.பாலசந்தர்'' என்று போட்டிருக்கும். மூன்றிலும் அவர் சிறந்தவர்.

    "என்னுடைய கலை உலகத் தந்தை மூன்றிலுமே சிறந்தவர்'' என்று சொல்லக்கூடிய பெருமிதத்தை எனக்குத் தந்திருக்கிறார்.''

    இவ்வாறு கமலஹாசன் கூறியுள்ளார்.

    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.
    சிவாஜிகணேசன் நடித்த "எதிரொலி'' என்ற ஒரே படத்தைத்தான் கே.பாலசந்தர் இயக்கினார், என்றாலும், அதற்கு முன்பே சிவாஜியுடன் பழக்கம் உண்டு.

    இதுபற்றி பாலசந்தர் கூறியிருப்பதாவது:-

    "சிவாஜியின் அலங்கார நிபுணரான ராமகிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார். என் நாடகங்களைப் பார்த்தவர். என் கதையில் சிவாஜி நடிக்க வேண்டும், அதை மாதவன் இயக்க வேண்டும் என்று விரும்பினார்.

    நானும் சரி என்று சொல்லிவிட்டேன். மாதவனுடன் உட்கார்ந்து ஒரு கதை தயார் செய்தோம்.

    சிவாஜியிடம் கதை சொல்ல ஏற்பாடு நடந்தது.

    "நான் நாலைந்து நாட்கள் சூரக்கோட்டைக்குப் போகிறேன். அங்கு ஓய்வு எடுக்கும் வேளையில், கதையும் கேட்கலாமே. அவர்கள் இரண்டு பேரையும் சூரக்கோட்டைக்கு அழைத்துக்கொண்டு வந்துடுங்க'' என்றார், சிவாஜி.

    இதை, ராமகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அவருக்கு சிவாஜி ஏற்கனவே ஒரு படம் நடித்துக் கொடுத்திருக்கிறார். இது இரண்டாவது படம்.

    கதை சொல்வதற்காக அதுவரை நான் எந்த வெளிïருக்கும் போனதில்லை. முதல் தடவையாக சூரக்கோட்டைக்கு சென்றேன்.

    அங்கு, சிவாஜியின் வீடு பெரிதாக இருந்தது. நிறைய அறைகள் இருந்தன. மாதவன் அப்போது சிவாஜியை வைத்து படங்கள் இயக்கிக் கொண்டிருந்தார். நான் சூரக்கோட்டையில் மாதவனுடன் நான்கைந்து நாள் தங்கினேன்.

    சிவாஜி அவ்வப்போது என்னை பார்ப்பார். "சாப்பிட்டீங்களா?'' என்று கேட்பார்.

    நண்பர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவ்வப்போது வேட்டைக்குப் போவார். ஆனால், கதை கேட்க என்னை அழைக்கவில்லை.

    சும்மா உட்கார்ந்து இருப்பது, எனக்கு போரடித்தது. இதுபற்றி ராமகிருஷ்ணனிடம் கூறினேன். `ஓய்வு எடுப்பதற்காக இங்கே வந்திருக்கிறார். அவரே உங்களைக் கூப்பிடுவார்' என்றார்.

    அதேபோல, மூன்றாவது நாள் சிவாஜி என்னை அழைத்து கதை கேட்டார். நான் சொன்னேன். அவருக்குப் பிடித்து இருந்தது. "கதை நன்றாக இருக்கிறது. பண்ணலாம்'' என்று சொல்லிவிட்டார்.

    ஆனால், பிறகு என்னுடன் பேசவில்லை. ஒருவேளை மாதவனிடம் பேசியிருக்கலாம். சிவாஜி பிசியாக இருந்ததால், படம் தள்ளிக்கொண்டே போயிற்று. இதற்கிடையே, ராமகிருஷ்ணன் இறந்து போனார். அதனால், அப்படம் தயாரிக்கப்படவில்லை.

    இதன் பிறகு, சிவாஜியை வைத்து ஜி.என்.வேலுமணி தயாரித்த "எதிரொலி'' படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

    முதல் நாள் படப்பிடிப்பு. சிவாஜியை முதன் முதலாக நான் இயக்கிடும் நேரம். எனது கை -கால் நடுங்கின. "பராசக்தி'', "மனோகரா'' படங்களைப் பார்த்து பிரமித்துப்போன எனக்கு, அவரை எப்படி இயக்குவது என்ற தடுமாற்றம்.

    அவர் நடிப்பைப் பார்த்து ராத்தூக்கம், பகல் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவன் நான். அவரை இயக்கும் நேரம் வந்ததும், கை-கால் வெடவெடத்தன.

    நிலைமையை சரி செய்து கொண்டு, முதல் காட்சியை அவருக்குச் சொன்னேன். பொதுவாக முதல் நாள் என்றால், ஒரு `சக்சஸ்' அல்லது `வெற்றி' என்று கூறும் வழக்கமான காட்சியாக இல்லாமல், ஒரு நீள வசனத்தை அவரைப் பேசச் சொன்னேன். அப்போது, கே.ஆர்.விஜயாவும் உடன் இருந்தார்.

    "நான் உங்களுக்கு இப்படி ஒரு காட்சி வைத்துள்ளேன். சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மாற்றம் எதுவும் செய்ய வேண்டுமானால் சொல்லுங்கள். மாற்றி அமைத்துக் கொள்ளலாம்'' என்று சிவாஜியிடம் சொன்னேன்.

    அவர் உடனே, "அய்யய்யோ... நீங்கதான் டைரக்டர். நான் எதுவுமே சொல்லமாட்டேன். நினைக்கவும் மாட்டேன். எப்படி நடிக்க வேண்டும் என்று கூறுகிறீர்களோ அப்படியே நடிக்கிறேன்'' என்றவர், வசனத்தைப் படித்துக் காட்டும்படி கூறினர்.

    நான் படித்துக்காட்டினேன். "நான் எப்படி பேசவேண்டும் என்பதையும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுங்க!'' என்றார், சிவாஜி.

    "என்ன சார் இது... நீங்க போய் என்னிடம் கேட்கறீங்க... உங்களுக்கு நான் சொல்லிக் கொடுப்பது சரியா வராது!'' என்றேன்.

    "இல்லை பாலு! நீங்க எத்தனையோ வெற்றி நாடகங்களை டைரக்ட் செய்திருக்கீங்க. எனக்கும் சொல்ல வேண்டியதுதானே... இந்த படம் என்கிற கப்பலுக்கு நீங்கதான் கேப்டன்'' என்று விடாப்பிடியாகச் சொன்னார், சிவாஜி.

    இவ்வாறு சிவாஜி சொன்ன பிறகு எனக்கு தைரியம் வந்தது. படப்பிடிப்பு படுவேகமாக நடந்தது.

    இப்படி நடந்து வந்த படப்பிடிப்பின் நடுவே, ஒரு நாள் சிவாஜி என்னைத் தனியாக அழைத்தார். பட்டென்று ஒரு கேள்வி கேட்டார்.

    தனது மனசை நீண்ட நாள் உறுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியை அவர் கேட்டதும், நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். அவர் கேட்ட கேள்வி:-

    "ஏன் பாலு... எனது நடிப்புக்கு ஏற்றபடி ஒரு காட்சியை எனக்காக வைக்கக்கூடாதா....?''

    - இதுதான் சிவாஜி கேட்ட கேள்வி.

    நான் திடுக்கிட்டேன். "என்ன சார்... என்ன சொல்றீங்க?'' என்று கேட்டேன்.

    "இல்லை. நான் நடிக்கும்படியான ஒரு காட்சி இருந்தால் நன்றாக இருக்குமே'' என்று மíண்டும் சொன்னார்.

    எனக்குப் பெரும் அதிர்ச்சி. "அப்படியானால், நீங்கள் இதுவரை நடித்ததெல்லாம் நடிப்பு இல்லையா?'' என்று நான் கேட்க, "இல்லை... அப்படி சொல்லவில்லை. உங்களுக்கே தெரியும்... நான் நன்றாக நடிப்பதாகச் சொல்கிறார்கள். நவரச நடிப்பும் கலந்து தரும்படி ஒரு காட்சி வைக்கக்கூடாதா?'' என்று சிவாஜி கேட்டார்.

    "இது அப்படி ஒரு கதை அல்ல. ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கை பற்றிய இயல்பான கதை. மிதமிஞ்சிய நடிப்பு இந்தக் கதையில் தேவைப்படாதே'' என்று நான் சொல்ல, "அப்படியென்றால் சரி. கதையும், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்துவிட்டன. எனது ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டால், படம் வெற்றிப்படம் என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சொல்லி முடித்துவிட்டார், சிவாஜி.

    அவர் சந்தேகப்பட்டபடி சிவாஜி ரசிகர்கள் இந்தப்படத்தை ஏற்கவில்லை. அதனால் படம் வெற்றி அடையவில்லை.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.



    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கிய "மரோசரித்ரா'' (தெலுங்குப்படம்) சென்னையில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

    கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்த படம் இது.

    "மூன்று முடிச்சு'' படத்துக்குப்பிறகு, பாலசந்தரின் "அவர்கள்'', "நினைத்தாலே இனிக்கும்'' ஆகிய படங்களில் கமலஹாசனும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்தார்கள்.

    "அவர்கள்'' படத்தில் கமல், ரஜினியுடன் சுஜாதா நடித்தார். "பேசும் பொம்மை'' ஒரு முக்கிய கதாபாத்திரமாக நடித்தது!

    படம் நன்றாக இருந்தும், சரியாக ஓடவிëëலை. தன்னுடைய சிறந்த படம் ஓடவில்லையே என்பதில் பாலசந்தருக்கு வருத்தம் உண்டு.

    ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'', பாரதிராஜாவின் "16 வயதினிலே'' ஆகிய படங்களிலும் கமலும், ரஜினியும் சேர்ந்து நடித்தனர்.

    இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தார்கள். எனினும் இப்படி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பதை விட, தனித்தனியாக நடித்தால்தான் இருவரும் முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். "இனி இருவரும் தனித்தனியாகவே நடிப்போம்'' என்று அறிவித்தார்கள்.

    அவர்கள் எண்ணியதுபோலவே, இருவரும் நடிப்பில் புதிய பரிமானங்களை வெளிப்படுத்தி, புதிய சிகரங்களைத் தொட்டார்கள்.

    பின்னர் பாலசந்தர் தயாரித்த பல படங்களில் தனித்தனியே நடித்தார்கள்.

    பாலசந்தர் டைரக்ட் செய்த படங்களிலேயே, மிக பிரமாண்டமான வெற்றிப்படம் "மரோசரித்ரா.''

    பாலசந்தரின் நெருங்கிய நண்பரான அரங்கண்ணல், 1978-ல் இதை தெலுங்கில் தயாரித்தார். கமலஹாசனும், சரிதாவும் ஜோடியாக நடித்தனர்.

    படத்தில் சரிதா தெலுங்குப்பெண். கமலஹாசன் தமிழ் இளைஞன். அவர்களுக்கிடையே ஏற்படும் காதலை அற்புதமாக சித்தரித்த படம் "மரோசரித்ரா.''

    கறுப்பு -வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம், ஆந்திராவில் திரையிடப்பட்டு மகத்தான வெற்றி பெற்றது. இக்கதையை தமிழில் தயாரிக்க அரங்கண்ணல் யோசித்தபோது "தெலுங்குப்படத்தை அப்படியே தமிழ்நாட்டிலும் திரையிட்டுப் பார்ப்போமே'' என்று பாலசந்தர் கூறினார்.

    அதன்படி, சென்னை `சபையர்' தியேட்டரில் இப்படம் பகல் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக, இளைஞர்களும், இளம் பெண்களும் கூட்டம் கூட்டமாக `சபையர்' தியேட்டரை நோக்கிப் படையெடுத்தனர். தினமும் "ஹவுஸ்புல்'' காட்சியாகப் படம் ஓடியது.

    இப்போது 25 வாரம் ஓடினால், "வெள்ளி விழா'' என்று பெரிதாக விழா எடுக்கப்படுகிறது. "மரோசரித்ரா'' மொத்தம் 596 நாட்கள் ஓடியது. அதாவது ஒரு வருடமும் 231 நாட்களும்!

    பெங்களூரிலும் "மரோசரித்ரா'' 2 1/2 வருடம் ஓடி, சாதனை புரிந்தது.

    "ஏக் துஜே கேலியே''

    "மரோசரித்ரா''வை, "ஏக் து ஜே கேலியே'' என்ற பெயரில் எல்.வி.பிரசாத் இந்தியில் தயாரித்தார். அவரே பெரிய டைரக்டர். அப்படியிருந்தும், டைரக்ஷன் பொறுப்பை பாலசந்தரிடம் ஒப்படைத்தார்.

    இந்திப்பதிப்பில் கமலஹாசனும், ரதியும் ஜோடியாக நடித்தனர். படம் கலரில் தயாராகியது.

    "மரோசரித்ரா'' போலவே, "ஏக்துஜே கேலியே''வும், மாபெரும் வெற்றி பெற்றது. வடநாட்டில் இந்தப்படம் 80 வாரங்கள் ஓடியது.

    "மரோசரித்ரா'' பற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "மரோசரித்ராவின் கிளைமாக்ஸ் காட்சி (உச்சகட்டம்) ஒரு அற்புதமான விஷயம்.

    வில்லனிடம் சிக்கி, கதாநாயகி துடிதுடிப்பதாக வரும் காட்சி. அலையில் சிக்கிய புடவை, அங்கும் இங்கும் நீரில் வருவதை படமாக்கும்போது, குறிப்பிட்ட ஒரே பிரேமில் அந்தப்புடவை கேள்விக்குறி மாதிரி வந்தது. உடனே அதை கேமிராவில் படம் பிடித்தேன்.

    வில்லனிடம் சிக்கி கதாநாயகி புழுவாய்த் துடிக்கிறாள் என்பதை உணர்த்தும் விதத்தில், அக்காட்சி அமைந்ததுதான் அற்புதமான விஷயம்.

    "ஏக் துஜே கேலியே'' படப்பிடிப்பின்போதும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில், கடைசி நாள் படப்பிடிப்பு நடந்தது. கதாநாயகனும், கதாநாயகியும் உல்லாசமாக சுற்றித்திரிந்த அந்தப் பகுதியில், ஒரு பாறையில் இரண்டு பேர் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.

    அந்தப் பாறையின் உச்சியில், எழுத்துக்களுக்கு கொஞ்சம் மேலே கடைசி நாளன்று இரண்டு காக்கைகள் சோகமாக வந்து உட்கார்ந்ததை பார்த்தேன். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதை எப்படியும் படம் பிடித்து காட்டிவிட வேண்டும் என்று துடித்தேன்.

    கேமராமேன் லோகு, அப்போது அங்கு இல்லை. உடனே அவருடைய உதவியாளரை கூப்பிட்டு, நானே அந்தக் காட்சியை படம் பிடித்தேன். படத்திலும் சேர்த்தேன்.

    சில நேரங்களில், நம்மையும் அறியாமல் சில சம்பவங்கள் நமக்காகவே நடக்கிற மாதிரி அமையும்போது, ரொம்ப எச்சரிக்கையாக இருந்து அதை படத்திலே சேர்த்து விடுவேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.


    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.
    டைரக்டர் கே.பாலசந்தர் பல சாதனைகளைப் படைத்தவர். அவற்றில் முக்கிய சாதனை, ரஜினிகாந்தை தமிழ்ப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தியதாகும். அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியதில் பாலசந்தருக்கு பெரும் பங்கு உண்டு.

    "அபூர்வ ராகங்கள்'' கதை புதுமையானது. விக்கிரமாதித்தன் கதையில், விக்கிரமாதித்தனிடம் வேதாளம் பல விடுகதைகளை போடும்.

    அதில் ஒரு விடுகதை:-

    "தந்தையும், மகனுமான இருவர் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, மணலில் இரண்டு பெண்கள் நடந்து சென்ற கால் தடங்களைப் பார்க்கிறார்கள். அந்த கால் தடங்களை பின்பற்றிச் சென்று அந்த இருவரையும் கண்டுபிடிப்பது என்றும், பெரிய கால் தடத்துக்கு உரியவளை தந்தையும், சிறிய கால் தடத்துக்கு உரியவளை மகனும் திருமணம் செய்து கொள்வது என்றும் முடிவு செய்கிறார்கள்.

    அவ்வாறே, கால் தடங்களை பின்பற்றிச் செல்லும் தந்தையும், மகனும் அந்த 2 பெண்களையும் கண்டுபிடிக்கிறார்கள். இதில் விசித்திரம் என்னவென்றால், பெரிய பாதங்களுக்கு உரியவள் மகள். சிறிய பாதங்களுக்கு உரியவள் தாய்!

    ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்த இரு பெண்களையும் தந்தையும், மகனும் மணந்து கொண்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உறவு முறை என்ன?'' - இதுதான் வேதாளத்தின் விடுகதை.

    அதற்கு விடை கூறமுடியாமல் விழிப்பான், விக்கிரமாதித்தன்.

    வேதாளத்தின் விடுகதையை அடிப்படையாக வைத்து, அபூர்வராகங்கள் கதையைப் பின்னினார் பாலசந்தர்.

    இதில் ஸ்ரீவித்யா தாய்; ஜெயசுதா மகள்.

    மேஜர் சுந்தரராஜன் தந்தை; கமலஹாசன் மகன்.

    ஸ்ரீவித்யாவை கமலஹாசன் காதலிப்பார்.

    மேஜர் சுந்தரராஜன், ஜெயசுதாவை மணக்க விரும்புவார்!

    கத்திமேல் நடப்பது போன்ற கதை.

    கடைசியில், ஸ்ரீவித்யாவின் காணாமல் போன கணவன் திரும்பி வருவார். அவர்தான் ரஜினிகாந்த்!

    கொஞ்ச நேரமே வந்தாலும், கதையை முடித்து வைக்கும் கதாபாத்திரம்!

    தாடி -மீசையுடன், ஸ்ரீவித்யாவின் பங்களா கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைவார், ரஜினிகாந்த்.

    "யார் இந்தப் புதுமுகம்?'' என்று படம் பார்க்கிறவர்கள் கேட்கும்படியாக அமைந்தது, அக்காட்சி.

    கர்நாடகத்தை சேர்ந்தவர். கறுப்பு நிறம். தமிழை லாவகமாகப் பேசக்கூடிய ஆற்றல் அவ்வளவாக இல்லை. அப்படியிருந்தும், ரஜினிகாந்த் ஒரு வைரம் என்பதை கண்டுபிடித்து, அபூர்வராகங்களில் அறிமுகப்படுத்தினார், பாலசந்தர்.

    "ரஜினிகாந்த் கண்களில் ஒருவித பிரகாசத்தைக் கண்டேன். எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரமாக வருவார் என்று அப்போதே கணித்தேன்'' என்று கூறுகிறார், பாலசந்தர்.

    ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியதோடு பாலசந்தர் நின்றுவிடவில்லை. அவரை பட்டை தீட்டும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

    "மூன்று முடிச்சு'' படத்தில், முக்கிய வேடம் கொடுத்தார். இதில் கமலஹாசன் நடித்திருந்தாலும், அவர் ஏற்றிருந்தது "கவுரவ வேடம்'' போன்றதுதான்.

    ஸ்டைல் மன்னன் என்று பிற்காலத்தில் புகழ் பெற்ற ரஜினிகாந்த், சிகரெட்டை தூக்கிப்போடும் ஸ்டைலை முதன் முதலாகச் செய்து காட்டியது, இந்தப் படத்தில்தான்.

    இந்தப் படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. குழந்தை நட்சத்திரமாகப் புகழ் பெற்றிருந்த ஸ்ரீதேவி, கதாநாயகியாக நடித்த முதல் படம் இதுதான்.

    மூன்று முடிச்சு பெரிய வெற்றிப்படம் அல்லவென்றாலும், ரஜினிகாந்துக்கு கணிசமான ரசிகர்களைத் தேடிக்கொடுத்தது.

    பாலசந்தர் படத்தில் அறிமுகமானது பற்றி ரஜினிகாந்த் கூறியதாவது:-

    "திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்ற பிறகு, மீண்டும் பெங்களூர் சென்று கண்டக்டர் வேலை பார்த்துக்கொண்டே பொழுது போக்காகக் கன்னடப் படங்களில் நடிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

    தமிழ்ப்படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆனால் நான் எதிர்பாராதவிதமாக பாலசந்தர் சாரை சந்தித்து, அவர் மூலமாக "அபூர்வ ராகங்கள்'' படத்தில் அறிமுகமானேன்.

    அந்த `அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்பின்போதுதான், ஒரு நாள் என்னையே எனக்கு உணர்த்தினார், அவர். என்னிடம் என்னென்ன திறமைகள் இருக்கின்றன, அவற்றை எப்படி எல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்பனவற்றை எடுத்துக் கூறினார்.

    அன்று அவர் வழங்கிய ஆலோசனைகள் அனைத்தும் எனக்குப் பெரிதும் உதவின. இன்றும் உதவி வருகின்றன.''

    இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.


    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.
    "அரங்கேற்றம்'' படத்துக்குப்பிறகு பாலசந்தரின் மகத்தான படமாக அமைந்தது, "அவள் ஒரு தொடர்கதை.'' நல்ல படம் என்ற பெயர் எடுத்ததுடன், வசூலிலும் சாதனை புரிந்தது.

    "அரங்கேற்றம்'' படத்தைத் தொடர்ந்து, பாலசந்தர் திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏற்ற படம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    இது, ஆனந்த விகடனில் "மணியன்'' எழுதிய கதை. இதை மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து படமாக எடுத்தனர்.

    இந்தப் படம் தயாரானது பற்றி மணியன் எழுதியிருப்பதாவது:-

    "ஆனந்த விகடனில் நான் "இலவுகாத்த கிளி'' என்ற குறுநாவலை எழுதியிருந்தேன். அப்புறம் நானே அதை நாடக வடிவில் தயாரித்தேன். சினிமாப்படங்கள் நூறாவது நாள் கொண்டாடுவது உண்டு. நூறாவது நாள் கொண்டாடிய நாடகம் "சொல்லத்தான் நினைக்கிறேன்.''

    அப்படிப்பட்ட ஒரு வெற்றி நாடகத்தை சினிமாவாக எடுக்க வேண்டும் என்று நானும், வித்வான் வே.லட்சுமணனும் ஆசைப்பட்டதில் ஆச்சரியமில்லை.

    நாங்கள் இருவருமாக பாலசந்தரிடம் போனோம். "நாங்கள் இதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில், `சொல்லத்தான் நினைக்கிறேன்' நாடகத்தைப் படமாகத் தயாரிக்க விரும்புகிறோம். நீங்கள்தான் டைரக்ட் செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

    சிறிது நேரம் யோசித்தார் அவர் பிறகு, "மிஸ்டர் மணியன்! நல்ல யோசனைதான். ஆனால் இதில் நான் சம்பந்தப்பட வேண்டுமா என்று யோசித்துப் பாருங்கள். இது ஒரு பாப்புலர் நாடகம். ஏற்கனவே நீங்கள் டைரக்ட் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவருமே எழுத்தாளர்கள். நானும் எழுத்தாளன். கருத்து வேறுபாடுகள் வருமே! என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார்.

    நான் சிறிதும் தயங்கவில்லை. "இது உங்கள் குழந்தை. உங்கள் விருப்பப்படிதான் வளர்த்து உருவாக்கவேண்டும். நாங்கள் தலையிடமாட்டோம். கிரியேடிவ் ஆர்டிஸ்டுகளின் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பவர்கள் நாங்கள்'' என்று பதில் சொன்னேன்.

    `சொல்லத்தான் நினைக்கிறேன்' படம் உருவாகத் தொடங்கியது. படத்தில் வரும் காட்சிகள் மறக்க முடியாதவை. படத்தைப் பார்த்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களிலும் அவை அழியாமல் பதிந்து போயிருப்பது எனக்குத் தெரியும்.''

    இவ்வாறு மணியன் குறிப்பிட்டுள்ளார்.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்'' 1973 டிசம்பர் 7-ந்தேதி வெளிவந்த படமாகும். இந்தப் படத்தில் சிவகுமார் கதாநாயகன். கமலஹாசன் வில்லன். மற்றும் லட்சுமி, ஜெயசித்ரா, ஜெயசுதா ஆகியோர் நடித்தனர்.

    பின்னர் ஜெமினிகணேசன் சொந்தமாகத் தயாரித்த "நான் அவனில்லை'' என்ற படத்தை பாலசந்தர் இயக்கினார்.

    இதில் ஜெமினிகணேசன், ஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு பெயர் வைத்துக்கொண்டு, பல பெண்களைத் திருமணம் செய்து கொள்வார். மாறுபட்ட மேக்கப்களில் அற்புதமாக நடித்தார். ஜெமினிகணேசனின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்திய படம் இது.

    இதன்பின் அரங்கண்ணல் தயாரிக்க பாலசந்தர் இயக்கிய படம் "அவள் ஒரு தொடர்கதை.''

    வானொலியில் பணியாற்றியவரும், எழுத்தாளர் "சுகி'' சுப்பிரமணியத்தின் மகனுமான எம்.எஸ்.பெருமாள் "வாழ்க்கை அழைக்கிறது'' என்ற பெயரில் எழுதிய குறுநாவல்தான் "அவள் ஒரு தொடர்கதை'' என்ற பெயரில் படமாகியது. திரைக்கதை, வசனம் எழுதினார், பாலசந்தர்.

    வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. தன் குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல் வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா பிரமாதமாக நடித்தார். மற்றும் விஜயகுமார், ஜெய்கணேஷ், கமலஹாசன், ஜெய்சித்ரா, `படாபட்' ஜெயலட்சுமி ஆகியோர் நடித்தனர்.

    இளம் வயது கமலஹாசன், உள்ளத்தைத் தொடும் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். "கடவுள் அமைத்து வைத்த மேடை...'' என்ற பாடல் காட்சியை பிரமாதமாக படமாக்கியிருந்தார், பாலசந்தர்.

    13-11-1974-ல் வெளிவந்த "அவள் ஒரு தொடர்கதை'' மகத்தான வெற்றிப்படமாக அமைந்தது. அது மட்டுமல்ல, "மக்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் படம் அமையவேண்டும்'' என்ற லட்சியத்தில், பாலசந்தர் முழு வெற்றி பெற்றார்.

    "அரங்கேற்றம்'' தமிழ்ப்பட உலகில் எப்படி ஒரு மைல்கல்லோ, அது போல மற்றொரு மைல்கல் "அவள் ஒரு தொடர்கதை.''

    இது இந்தி, தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் படமாகியது.

    இந்தக் காலக்கட்டத்தில் பாலசந்தர் ரொம்பவும் "பிசி''யாக இருந்தார். இரவு -பகல் என்று பாராமல் படப்பிடிப்பில் ஈடுபட்டார்.

    இரவில் எவ்வளவு தாமதமாக படுக்கச் சென்றாலும், காலை 6 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவார். சிற்றுண்டிக்குப்பின் காலை 9 மணிக்கு படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவார்.

    பாலசந்தர், ஆரம்ப காலத்தில் அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் வேலை பார்த்துக்கொண்டே, லீவு போட்டுவிட்டு சினிமா படங்களில் பணியாற்றி வந்தார். ஒரு கட்டத்தில், "சினிமாவா? வேலையா?'' என்று முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தது.

    பட அதிபர் ஏவி.மெய்யப்ப செட்டியாரை சந்தித்து இதுபற்றி ஆலோசனை கேட்டார். "வேலையை விட்டு விட்டு, சினிமாவுக்கு வந்துவிடலாமா? அதில் நான் வெற்றி பெறமுடியுமா? உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டார்.

    அப்போது ஏவி.எம்., "உங்கள் திறமையில் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா? உங்கள் திறமையில் உங்களுக்கு சந்தேகம் இருக்குமானால், நான் இப்பொழுதே வருடத்திற்கு 3 படங்கள் நீங்கள் தயாரிப்பதற்கு 3 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்.

    இதனால் பாலசந்தருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. வேலையை ராஜினாமா செய்துவிட்டு படத்தொழிலில் தீவிரமாக இறங்கினார்.


    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.
    பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "இருகோடுகள்'' சிறந்த குடும்பப்படம் என்று பெயர் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது.

    இதற்கிடையே, தமிழில் வெற்றி பெற்ற பாலசந்தரின் படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகளில் எடுக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றை பாலசந்தரே இயக்கினார். இதனால் தென்னாடெங்கும் பாலசந்தரின் புகழ் பரவியது.

    ஜோசப் ஆனந்தன் எழுதிய "இருகோடுகள்'' (1969) ஏற்கனவே நாடகமாக மேடை ஏறி வெற்றி பெற்றிருந்தது. அதை திரைப்படமாக்க "கலாகேந்திரா'' முடிவு செய்தது. திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை பாலசந்தர் ஏற்றார்.

    இதன் கதைக்கரு வித்தியாசமானது. விவாகரத்து செய்து கொள்ளும் கணவனும், மனைவியும் எதிர்பாராமல் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது மனைவி கலெக்டர். கணவன், அவளிடம் வேலை பார்க்கும் குமாஸ்தா!

    கலெக்டராக சவுகார் ஜானகியும், கணவனாக ஜெமினிகணேசனும், அவருடைய இரண்டாவது மனைவியாக ஜெயந்தியும் நடித்தனர். சுவையான முக்கோண காதல் கதையை அருமையாக எடுத்திருந்தார், பாலசந்தர். வி.குமார் இசை அமைப்பில் "புன்னகை மன்னன் பூழிவிக்கண்ணன்'', "நான் ஒரு குமாஸ்தா'' பாடல்கள் ஹிட்டாயின.

    பாலசந்தரின் மிகச்சிறந்த 10 படங்களை தேர்வு செய்தால், அதில் "இருகோடுகள்'' நிச்சயம் இடம் பெறும்.

    "உழைத்து பாஸ் செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் எடுத்த படம்தான் "இருகோடுகள்.'' மக்களின் ஆதரவை மிகப்பெரிய அளவில் பெற்றதுகூட உண்மைதான். மாநில மொழிப்படங்களில் சிறந்த படம் என்று, ஜனாதிபதியின் பரிசை பெற்றதும் என்னவோ உண்மைதான்.

    ஆனாலும் ஒரு இயக்குனருக்கு இதுவெறும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதானே! பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவனுக்கு, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கிடைக்கும் வெற்றி மிகப்பெரிதாகத் தோன்றலாம். ஆனால் ஆற அமர ஆராய்ந்து பார்த்தால், படிப்பே இத்துடன் முடிந்து விடுவதில்லையே. குறுக்கு வழிகளைத் தேடிப்போகாமல் நேர்கோட்டில் நடைபோட்ட எனக்கு, "இருகோடுகள்'' தந்தது இணையற்ற வெற்றிதான். இருப்பினும், இன்னும் எத்தனையோ இருக்கிறது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு ஆயிற்றே! எனவே சினிமாவில் என் படிப்பு தொடர்ந்தது.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    1970-ல் வெளிவந்த "பத்தாம்பசலி'' ஒரு தோல்விப்படமாக அமைந்தது.

    அதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "இருகோடுகளை அடுத்து வெளிவந்த பத்தாம் பசலி பெரிய சறுக்கல்.

    ஆனாலும், இப்படம் கற்றுத்தந்த சிறந்த பாடம் ஒன்றும் இருக்கிறது. இதே பத்தாம் பசலி கதையை, இதே திரைக்கதை அமைப்புகளுடன் நான் ஏற்கனவே தெலுங்கில் இயக்கி வெளிவந்தபோது, அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதே திரைக்கதை தமிழில் மட்டும் தோல்வியைத் தழுவுவானேன். காரணம் இருக்கத்தான் செய்தது.

    தெலுங்குப்படத்தில் கதாநாயகன் சலம். தமிழ்ப்படத்தில் நாகேஷ். சலம் இத்தகைய வேடத்தில் நடிப்பது இதுவே முதல் தடவை. எனவே புதுமையாக இருந்தது. நாகேஷ் ஏற்கனவே பல படங்களில் பிரமிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கதாநாயகனாக நடிப்பதும் இது முதல் தடவை அல்ல.

    கதை அமைப்பின்படி, தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த நாகேசுக்கு இதில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அத்துடன் ஒரு முட்டாள் கதாபாத்திரத்தில் நாகேசை மக்கள் ஏற்கவில்லை.

    பாத்திரத்திற்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, இப்படத்தின் மூலம் நான் கற்றுக்கொண்டேன்.''

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதே ஆண்டு வெளிவந்த "நவக்கிரகம்'' மிகச்சாதாரணமாக அமைந்தது.

    ஒரு இந்திப்படத்தை தழுவி இரு வேடங்களில் சவுகார் ஜானகி நடித்த "காவியத் தலைவி'', சவுகார் ஜானகியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியதே தவிர, பாலசந்தரின் திறமையை எடுத்துக் காட்டும் படமாக அமையவில்லை.

    சிவாஜிகணேசன் பெரும் புகழ் பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருந்த காலக்கட்டம் அது.

    `சிவாஜியும், பாலசந்தரும் இணைந்து பணியாற்றினால், அப்படம் எவ்வளவு பிரமாதமாக இருக்கும்'' என்று ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

    இவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில், "எதிரொலி'' என்ற படத்தை ஜி.என்.வேலுமணி தயாரித்தார். இதில், சிவாஜிகணேசனும், கே.ஆர்.விஜயாவும் நடித்தனர்.

    கதை, வசனம் எழுதி, டைரக்ட் செய்தார், பாலசந்தர்.

    1970 ஜுன் 27-ந்தேதி வெளிவந்த "எதிரொலி'' தோல்வியை சந்தித்தது. அதற்குக் காரணம் அது சிவாஜி படமாகவும் இல்லை; பாலசந்தர் படமாகவும் இல்லை.

    இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

    "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் முழுத்திறமையையும் பயன்படுத்திக் கொள்ள முடியாத ஒரு கதையில், அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை "எதிரொலி'' எனக்கு எடுத்துக் காட்டியது.

    ரசிகர்களிடம் மிகுந்த மதிப்பும், செல்வாக்கும் பெற்ற நடிகர்களை, குற்றம் செய்யும் கதாபாத்திரத்தில் காட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும், எதிரொலி எனக்கு சொல்லிக் கொடுத்தது.

    இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பின், நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு, புன்னகை, வெள்ளி விழா, கண்ணா நலமா முதலான படங்களை பாலசந்தர் எடுத்தார்.

    இவற்றில் "புன்னகை''யை தனது லட்சியப்படமாக பாலசந்தர் கருதினார். அமுதம் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் ஜெமினிகணேசனும், ஜெயந்தியும் நடித்தனர். கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை பாலசந்தர் கவனித்தார்.

    1971 நவம்பரில் வெளிவந்த இப்படம், நன்றாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

    இது பாலசந்தருக்கு பெரும் வருத்தத்தை அளித்தது. "புன்னகை படம், என் முகத்தில் புன்னகையைப் பறித்ததுடன், என்னை மிகப்பெரிய சோதனையில் ஆழ்த்தியது. "முதலில் ரசிகப் பெருமக்களைப் புரிந்து கொள்'' என்பதே, புன்னகை மூலம் நான் கற்றுக்கொண்ட பாடம்'' என்றார், பாலசந்தர்.
    ×