search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    இளையராஜா வாழ்க்கைப்பாதை -  வேலை பார்க்கும்போது இளையராஜா பாட்டு அதிகாரியைக் கவர்ந்தது
    X

    இளையராஜா வாழ்க்கைப்பாதை - வேலை பார்க்கும்போது இளையராஜா பாட்டு அதிகாரியைக் கவர்ந்தது

    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் ï? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ்

    இல்லையே!இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வரவேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    ஊரை விட்டு மக்கள் வெளியேற்றம்

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்ïனிஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நìலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்ïனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்ïனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.

    Next Story
    ×