என் மலர்tooltip icon

    சினிமா

    ஒய்.ஜி.மகேந்திரன் - சுதா காதல் திருமணம்
    X

    ஒய்.ஜி.மகேந்திரன் - சுதா காதல் திருமணம்

    ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்க்கையே, நாடகத்துடன் இரண்டறக் கலந்தது. எனவே, அவருடைய திருமணத்துக்கும் நாடகமே உதவியது.
    ஒய்.ஜி.மகேந்திரனின் வாழ்க்கையே, நாடகத்துடன் இரண்டறக் கலந்தது. எனவே, அவருடைய திருமணத்துக்கும் நாடகமே உதவியது.

    மகேந்திரனின் பிரபலமான நாடகம் "பிளைட் 172.'' அந்த நாடகம் நடைபெறுகிறபோதெல்லாம், ஒரு பெண் தவறாமல் ஆஜராகி விடுவார்.

    அந்தப் பெண்ணின் பெயர் சுதா. ஒரு நாள் அவர் மகேந்திரனை சந்தித்து, "இந்த நாடகத்தை நான் தினமும் பார்ப்பது உங்களுக்காகத்தான்'' என்றார்.

    அன்று பூத்த மகேந்திரன் - சுதா காதல், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர ஆரம்பித்தது.

    சுதாவின் தம்பி ரவிராகவேந்தர், நடிப்புத்திறமை உள்ளவர். "இவர் நன்றாக நடிப்பார் அப்பா'' என்று அவரை தன் தந்தை ஒய்.ஜி.பி.யிடம் அறிமுகப்படுத்தினார், மகேந்திரன். இதன் விளைவாக ராகவேந்தருக்கு நல்ல நல்ல வேடங்கள் கிடைக்கலாயின. ஏற்கனவே மகேந்திரன் மீது சுதா கொண்டிருந்த அன்பு மேலும் அதிகமாகியது.

    மகேந்திரன் - சுதா திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். 1975 செப்டம்பரில் இவர்கள் திருமணம் நடந்தது.

    திருமணத்துக்கு எம்.ஜி.ஆரும், சிவாஜிகணேசனும் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்கள். நடிகர்-நடிகைகள், பட அதிபர்கள், நாடக - திரை உலகப் பிரமுகர்கள் பெருந்திரளாக வந்து வாழ்த்தினார்கள்.

    மகேந்திரனின் குடும்பமே கலைக்குடும்பம். அனைவரும் நடிக்கக்கூடியவர்கள். அதற்கு சுதாவும் விலக்கல்ல.

    ஒருநாள், "ரகசியம் பரம ரகசியம்'' என்ற நாடகத்துக்கு ஒய்.ஜி.மகேந்திரன் நடிக்கச் சென்றபோது, கதாநாயகி வேடத்தில் நடிக்க மனைவி சுதா மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பதைப் பார்த்து திகைத்தார்.

    அவர் தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி சிரித்துக்கொண்டே, "இன்று வரவேண்டிய ஹீரோயின் வரவில்லை. அதனால் இவளை காலேஜிலே இருந்து அழைத்துக்கொண்டு வந்து, ஒத்திகை பார்த்து ரெடி பண்ணிவிட்டேன்'' என்றார்.

    அதுமுதல், நாடகத்துக்கு எந்த நடிகையாவது வராவிட்டால், சுதாவே அந்த வேடத்தில் நடித்து விடுவார்.

    ஒய்.ஜி.பார்த்தசாரதி, கடைசி மூச்சு உள்ளவரை நாடகத்தை நேசித்தவர்.

    அவர் நாடகங்களில் நடிக்காத காலக் கட்டத்தில், மகேந்திரனின் நாடகங்களைப் பார்க்க வருவார். "வேல் வேல் வெற்றி வேல்'' நாடகத்தை பார்க்க வந்தபோது, மேடையில் சிலர் பேசிக்கொண்டு நின்றனர். அதனால் கோபத்துடன் சத்தம் போட்டுவிட்டு, வீட்டுக்குப்

    போய்விட்டார்.மகேந்திரன் நாடகத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார். இடைவேளையின்போது, பார்த்தசாரதிக்கு பக்கவாதம் வந்து, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு "கோமா''வில் இருப்பதாக தகவல் வந்தது. அந்த இக்கட்டான நிலையில், மகேந்திரன் நாடகத்தை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.

    நாடகம் முடிந்து, ஆஸ்பத்திரிக்குச் சென்று அப்பாவைப் பார்த்தார். அவர் உணர்வற்ற நிலையில் இருப்பதைப் பார்த்து கலங்கினார். மறுநாள் மகேந்திரனின் நாடகம் நாகர்கோவிலில் நடப்பதாக இருந்தது. நாடகத்துக்கு போவதா, வேண்டாமா என்று முடிவு செய்ய மகேந்திரனால் இயலவில்லை. அதை தந்தையின் முடிவுக்கே விட எண்ணினார்.

    "உங்களை இப்படியே விட்டு விட்டு, ஒப்புக்கொண்டபடி நாடகத்துக்கு நான் போகலாம் என்றால், என் கையை அழுத்துங்கள். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன்'' என்று தந்தையின் காதருகே குனிந்து சொன்னார்.

    ஐந்து நிமிடம், அசைவற்று இருந்தார், ஒய்.ஜி.பி. பிறகு உடல் லேசாக அசைந்தது. ஒய்.ஜி.பி. தன் கையால், மகேந்திரன் கையை அழுத்தினார். "கோமா'' நிலையிலும், நாடகத்தை குறிப்பிட்டபடி நடத்திவிட வேண்டும் என்பதில் தந்தை உறுதியாக இருப்பதைக் கண்டு, கண்ணீர் விட்டார், மகேந்திரன்.

    திட்டமிட்டபடி நாகர்கோவிலுக்கு சென்று நாடகம் நடத்தினார். திரும்பி வந்தபோது, தந்தையை சடலமாகத்தான் பார்த்தார். அவர் வரும்வரை, ஒய்.ஜி.பி.யின் உடலை பார்த்துக்கொண்டவர்கள் நாகேஷ், ராதாரவி, நடிகர் மதன்பாப் ஆகியோர்.

    மறுநாள் தன் திருமண நாளுக்காக ஹோமம் செய்யப்போன சிவாஜிகணேசன் பத்திரிகையில் வெளியாகியிருந்த ஒய்.ஜி.பி. மறைவு செய்தியைப் பார்த்து பதறிப்போனார். "என் நல்ல நண்பரை இழந்து விட்டேன்'' என்று கண்களில் கண்ணீர் மல்க கூறிவிட்டு, மகேந்திரன் வீட்டுக்கு விரைந்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மகேந்திரனுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

    மகேந்திரனுக்கு மிகவும் பிடித்தமான டைரக்டர்களில் முதன்மையானவர் பீம்சிங். அதன் பிறகு ஸ்ரீதர், கே.பாலசந்தர்.

    மகேந்திரன், டைரக்டர் ஸ்ரீதரின் பெரிய விசிறி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த "காதலிக்க நேரமில்லை'' படத்தை 100 முறை பார்த்திருக்கிறார்.பழைய பாடல்களை வைத்து "மெல்லிசை நிகழ்ச்சி''யை மகேந்திரன் நடத்தி வருகிறார். அதில், "நினைவெல்லாம் ஸ்ரீதர்'' என்ற தலைப்பில் ஸ்ரீதரின் படப்பாடல்களை பாடி, ஸ்ரீதரை மேடைக்கு அழைத்து கவுரவித்தார்.

    "என் டைரக்ஷனில் நீ 3 படங்கள்தானே நடித்திருக்கிறாய்! அதற்காகவா இந்த கவுரவம்?'' என்று நெகிழ்ச்சியுடன் ஸ்ரீதர் கேட்க, "இல்லை சார்! இன்று வரை என்னை மகிழ்ச்சியில் மூழ்க வைத்த படம் உங்களுடைய `காதலிக்க நேரமில்லை.' அதற்காகத்தான் இந்த நன்றி'' என்றார், மகேந்திரன்.

    கண்கலங்கிய ஸ்ரீதர், மகேந்திரனை அப்படியே கட்டித் தழுவிக்கொண்டார்.
    Next Story
    ×