என் மலர்tooltip icon

    சினிமா

    ராஜாஜியின் திக்கற்ற பார்வதி நாவல் திரைப்படம் ஆகியது
    X

    ராஜாஜியின் திக்கற்ற பார்வதி நாவல் திரைப்படம் ஆகியது

    மூதறிஞர் ராஜாஜி எழுதிய "திக்கற்ற பார்வதி'' நாவல் திரைப்படம் ஆகியது. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் பெற்றார், 20 வயது காரைக்குடி நாராயணன்.
    மூதறிஞர் ராஜாஜி எழுதிய "திக்கற்ற பார்வதி'' நாவல் திரைப்படம் ஆகியது. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் பெற்றார், 20 வயது காரைக்குடி நாராயணன்.

    கதை, வசனம், டைரக்ஷன், தயாரிப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்ட இவருடைய சொந்த ஊர் காரைக்குடி. பெற்றோர்: ராமநாதன் - ஜானகி.

    ஏவி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் படித்த காரைக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உயர்நிலைப்பள்ளியில்தான் இவரும் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியதும், அழகப்பா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கவிஞர் கண்ணதாசன் தலைமையில் நடந்த கவியரங்கில் கவிதை பாடினார். கண்ணதாசனின் பாராட்டைப் பெற்றார்.

    சிறு வயதிலேயே, கவிஞனாக வேண்டும், திரை உலகில் நுழைய வேண்டும் என்பது நாராயணனின் கனவாக இருந்தது. எனவே கல்லூரி படிப்பைத் தொடரவில்லை. வங்கி ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக தந்தை கூறினார். "திரை உலகமே நான் தேடும் திசை'' என்று கூறி விட்டு, சென்னைக்கு வந்தார், காரைக்குடி நாராயணன்.

    தீவிர முயற்சிக்குப்பின், நடிகரும், கதை - வசன ஆசிரியருமான ஜாவர் சீதாராமனுக்கு உதவியாளரானார். அவர் பணியாற்றிய "பட்டத்து ராணி'' படத்துக்கு துணை இயக்குனர் ஆனார். ஜெமினிகணேசன், பானுமதி நடித்த இந்தப் படத்தில், டைட்டில் கார்டில் உதவி இயக்குனர் - காரைக்குடி நாராயணன் என்று போடப்பட்டது.

    "மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி'', பி.எஸ்.வீரப்பா தயாரித்த "பொண்ணு மாப்ளே'' உள்பட சில படங்களுக்கு துணை டைரக்டராக பணியாற்றினார்.

    இந்தக் காலக்கட்டத்தில் ஏவி.எம்.ராஜனுக்காக "பாசதீபம்'' என்ற நாடகத்தை எழுதினார். அது வெற்றி நாடகமாயிற்று.

    மேஜர் சுந்தரராஜன், தனது "என்.எஸ்.என். தியேட்டர்ஸ்'' நாடகக் குழுவுக்கு ஒரு நாடகம் எழுதித் தருமாறு கேட்டுக்கொள்ள, காரைக்குடி நாராயணன் எழுதிய நாடகம் "அச்சாணி'' இது மிகப்பெரிய வெற்றி நாடகம். இதில், மேஜரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.

    இந்த நாடகத்தின் நூறாவது நாள் விழாவில் சிவாஜிகணேசன் கலந்து கொண்டு, நாராயணனுக்கு கேடயம் வழங்கினார்.

    "அச்சாணி'' நாடகத்தை பிரபல ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான வின்சென்ட், நடிகர் தோப்பில் பாசியுடன் வந்து பார்த்தார். நாடகம் அவரை வெகுவாக கவர்ந்தது.

    காரைக்குடி நாராயணனிடம் இருந்து கதை உரிமையை வாங்கி, "அச்சாணி'' என்ற பெயரிலேயே மலையாளத்தில் படமாகத் தயாரித்தார். இதில் பிரேம் நசீர், நந்திதா போஸ், சுஜாதா ஆகியோர் நடித்தனர். பின்னணி பாடகர் ஜேசுதாசும் இதில் ஒரு வேடம் ஏற்று நடித்தார்.

    இந்தப்படம் கேரளாவில் வெள்ளி விழா கொண்டாடியது. இதற்காக கேரள அரசின் பரிசும் நாராயணனுக்கு கிடைத்தது.

    பின்னர் இவர் எழுதிய "சொந்தம்'' நாடகத்தில் மேஜர் சுந்தரராஜனும், சிவகுமாரும் நடித்தனர்.

    இந்த நாடகம் ஏ.சி.திருலோகசந்தர் டைரக்ஷனில் படமாகத் தயாரிக்கப்பட்டது. இதில் முத்துராமன், கே.ஆர்.விஜயா, பிரமீளா ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் 4 ஏரியாக்களின் விநியோக உரிமையை ஏவி.எம்.வாங்கினார். படம் நன்றாக ஓடியது.

    கன்னடத்தில் பல விருதுகளை பெற்ற சிறந்த படமான "சமஸ்காரா''வின் இணை இயக்குனராகப் பணியாற்றியவர், சிங்கீதம் சீனிவாசராவ். (பிற்காலத்தில் கமலஹாசனின் `ராஜபார்வை', `பேசும் படம்' முதலிய படங்களை இயக்கியவர்.)

    இவர், ராஜாஜியின் "திக்கற்ற பார்வதி'' கதையை படமாக்க விரும்பினார். "படம், ஆர்ட் பிலிம் போலவும் இருக்க வேண்டும்; அதே சமயம் மக்கள் விரும்பி பார்க்கக்கூடிய விதத்திலும் இருக்க வேண்டும்'' என்று எண்ணினார்.

    அவர் "அச்சாணி'' நாடகத்தை பார்த்தார். அதன் கதை அமைப்பும், வசனமும் அவருக்குப் பிடித்திருந்தன. எனவே, "திக்கற்ற பார்வதி''க்கு திரைக்கதை - வசனம் எழுதும் பொறுப்பை காரைக்குடி நாராயணனிடம் ஒப்படைத்தார். அப்போது நாராயணனுக்கு வயது 20.

    நாராயணனை பார்க்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். எனவே, பார்த்தசாரதி சுவாமி சபாவின் செயலாளராக இருந்த சேஷாத்திரி, அவரை ராஜாஜியிடம் அழைத்துச்சென்றார்.

    நாராயணனை பார்த்த ராஜாஜி, `இவ்வளவு சின்னப்பையன், திரைக்கதை - வசனத்தை ஒழுங்காக எழுதுவானா?' என்று மனதுக்குள் சந்தேகப்பட்டார்.

    "குடியினால் ஒரு குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதை விளக்க, இந்தக் கதையை எழுதினேன். குடிப்பதால் சில நன்மைகளும் உண்டு என்று மாற்றி எழுதிவிட மாட்டீர்களே!'' என்று சிரித்துக்கொண்டே நாராயணனிடம் ராஜாஜி தமாஷாகக் கூறினார்.

    "இல்லை. கதையில் நீங்கள் வலியுறுத்தியுள்ள கருத்து அணுவளவும் மாறாதபடி வசனத்தை எழுதுகிறேன்'' என்று பதிலளித்தார், இளைஞர்

    நாராயணன்."திக்கற்ற பார்வதி''யில் லட்சுமி, ஸ்ரீகாந்த், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடித்தனர். படப்பிடிப்பு ராஜாஜியின் சொந்த ஊரான ஓசூரிலேயே நடந்தது. 18 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி, படத்தை முடித்தார், சிங்கீதம் சீனிவாசராவ்.

    படம் சிறப்பாக அமைந்தது. இதை ஜெமினி ரிலீஸ் செய்தது.

    லட்சுமி அற்புதமாக நடித்திருந்தார். அவருக்கு ஜனாதிபதி பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நூலிழையில் பரிசு வேறொருவருக்குச் சென்றது. (பின்னர், "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்துக்காக ஜனாதிபதி பரிசு பெற்றார், லட்சுமி)

    "திக்கற்ற பார்வதி'' வெளியாகும் முன், ராஜாஜி காலமாகிவிட்டார். "ராஜாஜி கூறியபடி அவர் கருத்துக்களை நன்கு வலியுறுத்தும் வகையில், படம் அமைந்திருந்தது. எனினும் படம் வெளியாவதற்கு முன் அவர் மறைந்து விட்ட சோகத்தை, இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை'' என்று கூறினார், காரைக்குடி நாராயணன்.

    "திக்கற்ற பார்வதி''யில் பங்கு கொண்ட அனைவரும் புகழ் பெற்றனர். காரைக்குடி நாராயணனின் வாழ்க்கையில், அப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×