என் மலர்
சினிமா

சிவகுமார் ஓவியராக வாழ்ந்த 7 ஆண்டுகள்
சிவகுமார் நடிகர் ஆவதற்கு முன், ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஓவியராக மொத்தம் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். அவருடைய தம்பியின் திருமணத்துக்காக, சிவாஜி 1958-ல் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கியிருந்தார். அவரைச் சந்திக்க சிவகுமார் விரும்பினார். சிவாஜியின் படங்கள் சிலவற்றை வரைந்து எடுத்துச் சென்றார். ஆனால், அதற்குள் சிவாஜி சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதை அறிந்த ஓடையகுளம் ஜமீன்தாரின் மகன் சண்முகம், "நான் உன்னை சென்னைக்கு அழைத்துச்சென்று, சிவாஜியிடம் அறிமுகம் செய்து வைக்கிறேன்'' என்றார். அதன்படியே, சிவகுமாரை அழைத்துக்கொண்டு 1958 ஜுன் 8-ந்தேதி சென்னைக்குப் புறப்பட்டார். சிவகுமாரின் மாமா ஆறுமுகக் கவுண்டர், அவர் மகன் ரத்தினம் ஆகியோரும் உடன் சென்றார்கள்.
ராயப்பேட்டையில் உள்ள சிவாஜிகணேசன் வீட்டில், அவரை நேரில் பார்த்த சிவகுமார், மெய்சிலிர்த்துப் போனார். ஏற்கனவே பராசக்தி, மனோகரா, ராஜாராணி, வணங்காமுடி, உத்தமபுத்திரன் முதலிய படங்களைப் பார்த்து சிவாஜியின் நடிப்பில் மனதைப் பறிகொடுத்தவர், சிவகுமார். நிழலில் கண்டவரை நிஜமாகக் கண்டதும், மகிழ்ச்சி தாங்கவில்லை.
தான் வரைந்திருந்த படங்களை சிவாஜியிடம் அவர் காண்பித்தார். சிவகுமாரின் ஓவியத் திறமையைப் பாராட்டிய சிவாஜி, ஓவியப் பயிற்சி பெறுவதற்காக, அவரை "மோகன் ஆர்ட்ஸ்'' என்ற திரைப்பட விளம்பரக்கம்பெனியில் சேர்த்துவிட்டார்.
சினிமா தியேட்டர்கள் முன் பெரிய பெரிய பேனர்களையும், "கட்-அவுட்''களையும் வைக்கும் பழக்கம் அப்போதுதான் தொடங்கியிருந்தது. "வணங்காமுடி'' படத்திற்காக, விலங்கு மாட்டப்பட்ட சிவாஜியின் 60 அடி உயர "கட்-அவுட்''டை, சித்ரா தியேட்டரில் அமைத்து, பரபரப்பை உண்டாக்கியிருந்தது, மோகன் ஆர்ட்ஸ்.
"மோகன் ஆர்ட்ஸ்'' அதிபர் மோகனும், நடிகர் எம்.ஆர்.சந்தானமும் கூட்டாக "பாசமலர்'' தயாரித்தார்கள். அந்தப்படம் வெளிவருவதற்கு முன், சிவகுமார் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.
ஓவிய அனுபவம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-
"ஓவியம் பயில சென்னைக்கு புறப்பட்டபோது, "குடும்பத்தை எதிர்காலத்தில் தூக்கி நிறுத்துவேன். புகை, மது, மாது, சூது பக்கம் நெருங்கமாட்டேன்'' என்று அம்மாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்தேன். இன்றுவரை அதைக் காப்பாற்றுகிறேன்.
சென்னை வந்து யோகாசனம் பயில ஆரம்பித்தபின், காபி, டீ குடிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன். அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவேன். ஒரு மணி நேரம், 38 வகையான ஆசனங்கள் செய்வேன். அம்மா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். பாக்கெட்டில் எப்போதும் 4 அணா இருக்கும். சைக்கிள் "பஞ்சர்'' ஆகிவிட்டால் ஒட்டுவதற்கு! 56 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மகாபலிபுரம் சென்று, 2 நாள் தங்கி ஓவியம் தீட்டுவேன். பிறகு அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் சென்று 2 நாள் தங்கி ஓவியம் வரைவேன்.
அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டுக்கு சென்றுவிட்டு, 45 கிலோ மீட்டர் பயணம் செய்து, சென்னையை அடைவேன். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போதே, ஒருநாளில் 180 கிலோ மீட்டர் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணம் செய்வேன். திரைப்படம் பார்ப்பதற்கு என்னுடைய மாத பட்ஜெட் 3 ரூபாய். 84 பைசா டிக்கெட்டுதான் எடுப்பேன். 84 பைசா டிக்கெட் கவுண்டரை மூடிவிட்டால், அதிக கட்டணத்தில் போகமாட்டேன். பேசாமல் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். மறுநாள் அரை மணி நேரம் முன்னதாகச் சென்று, 84 பைசா டிக்கெட் எடுத்து படம் பார்ப்பேன்.
ஓவியனாக நான் வாழ்ந்த 7 ஆண்டுகளும், வசந்த காலமாகும். கன்னியாகுமரியில் இருந்து சண்டிகார் வரை, பிறகு அஜந்தா, எல்லோரா, எலிபெண்டா, மும்பை, டெல்லி, ஆக்ரா, ஐதராபாத், மைசூர், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் முதலான இடங்களுக்கெல்லாம் சென்று ஓவியம் வரைந்து படிப்பை முடிக்க எனக்கு ஆன மொத்த செலவு 7 ஆயிரத்து 140 ரூபாய்தான். இது, இன்றைக்கு இரண்டு நண்பர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சாப்பிடுவதற்கு ஆகக்கூடிய செலவு. இளம் துறவி போல், கிடைத்ததை உண்டு, அகப்பட்ட திண்ணையில் படுத்து, அற்புதமாக ஓவியங்கள் தீட்டிய அந்தக்காலம் இனி வரவே வராது.
ஓவியக் கல்லூரி ஆண்டு விழாவில், அனார்கலி நாடக வசனமும், சேரன் செங்குட்டுவன் வசனமும் பேசி நடித்தேன். ஓவிய ஆசிரியர் சந்தானராஜ், என்னை அலாக்காக தூக்கி, இரண்டு சுற்று சுற்றி இறக்கிவிட்டார்.
"சிறந்த ஓவியனாக விளங்கும் நீ, அதைவிடப் பெரிய நடிகனாகி புகழ் பெறுவாய்'' என்று பாராட்டினார். என் அறை நண்பராக இருந்த பாலாபழனூர் (பிற்காலத்தில் சரண்சிங் மந்திரிசபையில் அ.தி.மு.க. சார்பில் மந்திரி பதவி வகித்தவர்) என்னை வித்தியாசமாக பாராட்டினார். "நடன மேதை உதயசங்கர், ஆரம்பத்தில் ஓவியராகத்தான் இருந்தார். பிறகு நடனத்தில் உலகப்புகழ் பெற்றார். நீ இப்போது ஓவியனாக இருந்தாலும், எதிர்காலத்தில் நடிப்புத் துறையில் புகழ் பெறுவாய்'' என்றார். இதனால் உற்சாகம் அடைந்தேன்.''
இவ்வாறு சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதர் "காதலிக்க நேரமில்லை'' என்ற படத்தைத் தயாரித்தார். அதற்கு புதுமுகங்கள் தேவை என்று அறிவித்திருந்தார். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன. சிவகுமாரும் புகைப்படங்களுடன் விண்ணப்பித்தார். ஆனால் அதிர்ஷ்டம் அடித்தது, ரவிச்சந்திரனுக்கு! சிவகுமாருக்கு `சான்ஸ்' கிடைக்கவில்லை. ஆனாலும் பட வாய்ப்பு விரைவிலேயே அவரைத் தேடி வந்தது.
Next Story






