என் மலர்
சினிமா

திரைப்படமாக வெளிவந்த அகிலனின் பாவை விளக்கு கதை பற்றி காரசார விவாதம்
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான அகிலன் எழுதிய "பாவை விளக்கு" நாவல் திரைப்படமாக்கப்பட்டு, அதில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார். கதைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பத்திரிகைகள் காரசாரமாக விமர்சனங்கள் எழுதின.
புதுக்கோட்டை அருகில் உள்ள பெருங்களூர், அகிலனின் சொந்த ஊர். அங்கு 1922 ஜுன் 27-ந்தேதி பிறந்தார். தந்தை பெயர் வைத்தியலிங்கம் பிள்ளை. தாயார் அமிர்தம்மாள்.
பள்ளிப்படிப்பை முடித்ததும், ரெயில்வே தபால் இலாகாவில் (ஆர்.எம்.எஸ்.) வேலை பார்த்தார். ஓடும் ரெயில் தபால்களைப் பிரிப்பதுதான் அவர் பணி.
பள்ளியில் படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருடைய எழுத்தில் பக்குவமும், வேகமும், விறுவிறுப்பும் இருந்த காரணத்தினால், அவருடைய கதைகள், யாருடைய சிபாரிசும் இன்றி "கலைமகள்" முதலான பத்திரிகைகளில் பிரசுரமாயின.
"கலைமகள்" முதன் முதலாக நடத்திய நாவல் போட்டியில், அகிலனின் "பெண்" என்ற நாவல் முதல் பரிசு பெற்றது. அதைத் தொடர்ந்து, இலக்கிய உலகில் அகிலன் புகழ் பெற்றார்.
அகிலன் தன் குடும்பத்தாருடன் திருச்சியில் வசித்து வந்தார். அகிலனின் எழுத்துக்களுக்கு வாசகர்கள் இடையே பெரும் வரவேற்பு இருந்ததால், எல்லா பத்திரிகைகளும் அகிலனிடம் கதைகளைப் பெற்று பிரசுரித்தன.
1957 மத்தியில் "கல்கி"யில் "பாவை விளக்கு" தொடர் கதையை அகிலன் எழுதினார். உணர்ச்சிமயமாக அமைந்த அந்தக் கதை வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பட அதிபர் எம்.ஏ.வேணுவும், அப்போது கதை - வசன ஆசிரியராக விளங்கிய ஏ.பி.நாகராஜனும், சேலத்தில் "சம்பூர்ண ராமாயணம்" படத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்த காலகட்டம் அது. "பாவை விளக்கு" கதை முடியாமல் இருந்தபோதே, அந்தக் கதையை சினிமா படமாகத் தயாரிக்க, ஏ.பி.நாகராஜன் விருப்பம் தெரிவித்தார். கணிசமான தொகையை முன் பணமாகக் கொடுத்தார்.
படம் தயாராகும்போது, உடன் இருக்குமாறு அகிலனை ஏ.பி.நாகராஜன் கேட்டுக்கொண்டார்.
ஆர்.எம்.எஸ். வேலையை விட்டு விலகி, முழு நேர எழுத்துப்பணியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் அகிலனுக்கு ஏற்கனவே இருந்தது. சினிமாத் துறையிலும் தனக்கு வரவேற்பு இருந்ததால், வேலையை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்தோடு சென்னையில் குடியேற முடிவு செய்தார்.
அகிலன் அரசு வேலையை விட்டு விட்டு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தது, அவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். ஏ.பி.நாகராஜன்யூனிட்டில் எடிட்டராக இருந்த விஜயரங்கமும், ஒளிப்பதிவாளராக இருந்த கோபண்ணாவும் இணைந்து "விஜயகோபால் பிக்சர்ஸ்" என்ற படக்கம்பெனியை தொடங்கினர். அந்த பேனரில் "பாவை விளக்கு" படமாகியது. கதாநாயகனாக (எழுத்தாளன் தணிகாசலமாக) சிவாஜிகணேசன் நடித்தார். கதாநாயகனை 4 பெண்கள் காதலிப்பது போல் அமைந்ததுதான் கதை.
1) தேவகி இளம் விதவை. இவளுடைய ஒருதலைக் காதல் ஆரம்பத்திலேயே கருகி விடுகிறது. இந்த வேடத்தில் பண்டரிபாய் நடித்தார்.
2) செங்கமலம். தாசி குலத்தில் பிறந்தவள். செங்கமலமும், தணிகாசலமும் நேசித்தும், அவர்கள் காதல் நிறைவேறவில்லை. செங்கமலம் வேடத்தில் குமாரி கமலா.
3) முறைப்பெண் கவுரி, இவள்தான் தணிகாசலத்தை மணக்கிறாள். இந்த வேடத்துக்கு சவுகார்ஜானகி.
4) உமா. படித்தவள்; பண்புள்ளவள். முதலில் தணிகாசலத்தின் எழுத்தில் உள்ளத்தை பறிகொடுப்பவள், பின்னர் அவனிடமே தன் இதயத்தை இழக்கிறாள். ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழும் தணிகாசலத்தை, மனப்போராட்டத்தில் சிக்கித்தவிக்க வைக்கும் உமாவாக எம்.என்.ராஜம் நடித்தார்.
கே.வி.மகாதேவன் இசை அமைக்க, திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுதினார். சோமு டைரக்ட் செய்தார். அகிலனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில், படத்தை ஏ.பி.நாகராஜன் உருவாக்கினார். குற்றாலம், மும்பை, டெல்லி, ஆக்ரா முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
குறிப்பாக, சிவாஜியும், எம்.என்.ராஜமும் ஷாஜஹான், மும்தாஜ் வேடங்களில் தோன்றி, "காவியமா, நெஞ்சில் ஓவியமா?" என்று பாடும் காட்சி, தாஜ்மகாலின் பல்வேறு பகுதிகளிலும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டது. "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்", "சிதறிய சலங்கைகள்போல" முதலான பாட்டுகளும் நன்றாக இருந்தன.
குறிப்பாக, "வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி..." பாடலின் தொடக்கத்தை சிவாஜி பாட, தொடர்ந்து சிதம்பரம் ஜெயராமன் பாடியது புதுமையாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 1960 தீபாவளிக்கு "பாவை விளக்கு" வெளியாகியது.
படம், பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆயினும், "ஒருவனை 4 பெண்கள் காதலிப்பதா?" என்று பத்திரிகைகள் இரண்டு பிரிவாக பிரிந்து விவாதம் செய்தன. படம் நன்றாக இருப்பதாகப் பாராட்டிய பத்திரிகைகள் கூட, மூன்று குறைகளைச் சுட்டிக்காட்டின. சிதம்பரம் ஜெயராமனின் குரல், சிவாஜிக்குப் பொருத்தமாக இல்லை.
பெரும்பாலான படங்களில் வில்லியாகவே நடித்து வந்த எம்.என்.ராஜம், உமா கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இல்லை. சிவாஜிகணேசனை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம். சில இடங்களில் அவரை "படிக்காத மேதை" ரங்கன் பாணியில் நடிக்கச் செய்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.
இவ்வாறு பலரும் கூறினர்.
Next Story






