என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    காசுக்காக எதையும் செய்யத் துணியும் ஒரு இளைஞனைப் பற்றிய படமாக உருவாகி வரும் "கோம்பே" படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தேங்காயில் இருந்து தேங்காயையும் நீரையும் எடுத்த பின் கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித  வாழ்க்கையையும் அப்படித்தான் இருக்கிறது. மனித உடலில் உயிர் இல்லை எனில் அதற்கு எந்த மரியாதையையும் இல்லை இது  தான் இந்தப் படத்தின் அடி நாதம்.

    தேனியில் வாழும் ஒரு இளைஞன், காசுக்காக எதையும் செய்யத் துணிபவன், அவனது வாழ்க்கையை சொல்கிற படம்தான்   "கோம்பே"

    காசுக்காக கொலைகூட செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவன் வாழ்வில் வசந்தம் வீசுகிறது. அவள்  அவன் வாழ்வை மாற்ற முயல்கிறாள் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படம்.

    முழுக்க புதுமுகங்களால் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் ஹீரோவாக "சார்லஸ்" ஹிரோயினாக "தீர்த்தா"  நடித்திருக்கிறாரகள்.

    கதை, ஒளிப்பதிவு, DI, எடிட்டிங், ஆகிய பணிகளுடன் இந்தப்படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாபிஸ்இஸ்மாயில்.   மேலும் இப்படத்தில் வில்லனாகவும்  நடித்துள்ளார்.

    சினிமாவில் அனைத்து வேலைகளை செய்யும் இவர் மலையாளத்தில் ஏற்கனவே மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.

    தேனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் கதை 4 நாட்களில் நடப்பதாக  கதை அமைக்கப்பட்டுள்ளது.

    புதுமுகம் அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ்ஜோசப் ஆகிய மூவரும்  இந்தப்படத்தில் இசையமைத்திருக்கிறார்கள்.  ஹரிஸ் இஸ்மாயில் மற்றும் பினு ஆப்ரகாமுடன் இணைந்து ஹாபிஸ் இஸ்மாயில் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
    தனது அடுத்த படத்திற்காக 45 நாட்கள் பயணமாக விண்வெளிக்கு ஜெயம் ரவி பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான `போகன்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து  ஜெயம் ரவி இயக்குநர் விஜய் இயக்கத்தில் `வனமகன்' படத்திலும், சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் `டிக் டிக் டிக்' படத்திலும்  நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள `வனமகன்' படத்தின் இறுகட்ட படப்பிடிப்பு நேற்றுடன்  முடிந்தது.

    அதன்தொடர்ச்சியாக ஜெயம் ரவி `டிக் டிக் டிக்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இப்படத்தில் ஜெயம்  ரவிக்கு ஜோடியாக `ஒருநாள் கூத்து' பட நாயகி நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ்வும்  இப்படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

    விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று  தொடங்கிய நிலையில், 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஏவிஎம்  ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்டுகளும் போடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்படும் முதல் படமான `டிக் டிக் டிக்' படத்தை நேமிசந்த் ஜபக்  புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது  படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
    இயக்குநர் செல்வா இயக்கத்தில் அரவிந்த் சாமி-ரித்திகா சிங் இணைந்து நடிக்க உள்ள படம் பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்படம் குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம்  `மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3'. கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான `புதையல்' படத்திற்கு பிறகு இயக்குநர் செல்வா  இயக்கத்தில். 20 வருடங்களுக்குப் பிறகு அரவிந்த் சாமி மீண்டும் நடிக்க உள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக  ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி உள்ளிட்ட 3 நாயகிகள் நடிக்க உள்ளனர்.

    முக்கியமான கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, ஹாசினி, ஹரிஷ் உத்தமன், ராஜ் கபூர், நாகி நீடு, ரமேஷ் பண்டிட் OAK, சுந்தர்  உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு  செய்ய டி. இமான் இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளையும், சிவா யாதவ் கலையையும் மேற்கொள்கின்றனர்.
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.
    டைரக்டர் சேரனின் முதல் படமான "பாரதி கண்ணம்மா'' உருவாவதற்கு பெரிதும் உதவினார், விஜயகுமார்.

    டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றியவர் சேரன்.

    சேரன் டைரக்ஷனில் உருவான "பாரதி கண்ணம்மா'' படம் சம்பந்தப்பட்ட தனது அனுபவங்களை விஜயகுமார் பகிர்ந்து கொண்டார்:

    "டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரின் ïனிட்டில் இருந்தபோதே சேரனை எனக்குத் தெரியும். ரவிக்குமார் மாதிரியே இவரும் தயாரிப்புத்துறை நிர்வாகத்தில் அனுபவம் பெற்றிருந்தார். ஒருநாள் என்னை சந்தித்த சேரன், "சார்! நான் ஒரு கதை தயார் செய்திருக்கிறேன். ஹென்றி தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    இப்படிச் சொன்னதோடல்லாமல் புத்தக வடிவிலான கதை வசன பகுதியை கொடுத்து "இதுதான் சார் கதை! படித்துப் பார்த்து சொல்லுங்கள்'' என்றும் கேட்டுக்கொண்டார்.

    என் சினிமா அனுபவத்தில் இப்படி படம் இயக்கும் யாரும் கதையை காட்சியமைப்புகளுடன் புத்தகமாக தந்ததில்லை. ஆலிவுட்டில் வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம். இங்கே இப்படித் தந்து என்னை அசத்தியவர் சேரன்.

    கதை, காட்சியமைப்பு மட்டுமின்றி காட்சிகளை படமாக்க வேண்டிய டிராலி, மிட்ஷாட், குளோசப் ஷாட் என கேமரா நுணுக்கங்கள் பற்றியும் விலாவாரியாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலோட்டமாக புரட்டிப் பார்த்து இதை தெரிந்து கொண்ட நான், முழு ஸ்கிரிப்ட்டையும் படித்து விட்டு சொல்வதாக தெரிவித்தேன். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த அடுத்தடுத்த பணிகளில் அந்தக் கதையை படித்துப் பார்க்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது.

    ஆனால் மஞ்சுளா, அன்றிரவே அக்கதையைப் படித்துப் பார்த்திருக்கிறார். காலையில் படப்பிடிப்புக்கு நான் தயாரானபோது, "நேற்று ஒரு கதை கொடுத்தீங்களே! சூப்பர். அவசியம் நீங்கள் இதில் நடிக்கிறீர்கள்'' என்றார்.

    அன்றைய தினம் சேரன் என்னை சந்தித்தார். நான் அவரிடம், "சேரன்! எனக்கு முழுக்கதையையும் படிக்க நேரமில்லை. ஆனால் மஞ்சுளா படித்துப் பார்த்து `பிரமாதம்'னு சொன்னாங்க. உங்க படத்தில் நான் நடிக்கிறேன். படத்துக்கு ஹீரோ யார்னு முடிவு பண்ணிட்டீங்களா?'' என்று கேட்டேன்.

    பதிலுக்கு சேரன் என்னிடம், "சார்! ஹீரோதான் இன்னும் முடிவாகாமல் இருக்குது! படத்தில் நீங்க அப்பா கேரக்டரிலும் உங்கள் மகன் அருண் ஹீரோவாகவும் பண்ணினால் நன்றாக இருக்கும்'' என்றார்.

    நான் அவரிடம், "ஒண்ணு ஹீரோவா அருண் பண்ணட்டும். இல்லேன்னா அந்த `பவர்புல்' அப்பா கேரக்டரில் நான் பண்றேன். நானும் அருணும் சேர்ந்து பண்ணினா சரி வராது. யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணிடுங்க'' என்றேன்.

    நடிகர் கார்த்திக் என் நண்பர். அவர் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் சேரனிடம் "கார்த்திக்கை கேட்கலாமா?'' என்று கேட்டேன்.

    சேரன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. கார்த்திக் நடித்தால் ரொம்ப நல்லாயிருக்கும் சார்'' என்றார்.

    அப்போதே நான் கார்த்திக்குக்கு போன் போட்டு பேசினேன். "நீங்களே படம் பற்றி இப்படிச் சொல்றதால நான் கதை கூட கேட்கப் போறதில்லை. சேரனை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க'' என்றார், கார்த்திக்.

    உடனே போய் கார்த்திக்கை சந்தித்தார் சேரன். அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் கார்த்திக் அப்போது பிசியாக இருந்ததால் `கால்ஷீட்' தேதிகளை ஒரு வருடம் கழித்து தருகிறேன்'' என்று சொன்னார்.

    ஆனால், அதுவரை முடியாத நிலையில் சேரன் இருந்தார். அடுத்தடுத்து சில ஹீரோக்களை சந்தித்து கதை சொல்வதும் கால்ஷீட் கேட்பதுமாக இருந்தார். எந்த ஹீரோவும் முடிவாகாத நிலையில், மறுபடியும் சேரன் என்னை சந்தித்தபோது, "பார்த்திபன் சார் நடித்தால் எப்படி இருக்கும்?'' என்று கேட்டேன்.

    "பிரமாதமாய் இருக்கும் சார்! ஆனால் அவரோ சொந்தமாகப் படம் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கிறார். என் படத்தில் நடிக்க சம்மதிப்பாரா?'' என்று கேட்டார்.

    நான் பார்த்திபனின் ஆபீசுக்கு போன் செய்தேன். அவர் டெல்லிக்குப் போயிருப்பதாக சொன்னார்கள். குறிப்பிட்ட ஓட்டலின் பெயரை சொல்லி, இரவு 8 மணிக்கு மேல் தொடர்பு கொண்டால் பார்த்திபனிடம் பேசமுடியும் என்றும் சொன்னார்கள்.

    அப்படியே செய்தேன். பார்த்திபன் பேசினார். நான் அவரிடம் "சேரன்னு புது டைரக்டர் அருமையான ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறார். நீங்க ஹீரோவா நடித்தால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    "நீங்களே சொல்றீங்க! அதனால, நான் கதை பற்றி கேட்காமல் நடிக்க சம்மதம்'' என்றார், பார்த்திபன்.

    பார்த்திபன் சம்மதம் சொன்னதும், என் கைகளை பிடித்துக்கொண்ட சேரன், "சார்! நீங்க எனக்கு `லைப்' கொடுத்திருக்கீங்க'' என்று சொல்லி நெகிழ்ந்தார்.

    படப்பிடிப்பு தொடங்கியது. என் கால்ஷீட்50 நாட்களுக்கு தேவை என்றார் சேரன். அப்படியானால் சம்பளம் அதிகமாகுமே என்றேன். மஞ்சுளாவோ "இந்தப் படத்துக்கு நீங்கள் சம்பளமே பேசக்கூடாது'' என்று கண்டிஷனாக சொல்லி விட்டதால், சேரன் கேட்ட தேதிகளை கொடுத்தேன்.

    படம் முடிந்து திரைக்கு வரவேண்டிய நேரத்தில் ஒரு பிரச்சினை. படத்தின் முடிவு சோகப் பின்னணியைக் கொண்டது என்பதால் பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கிளைமாக்சை மாற்றவேண்டும் என்று சேரனிடம் கேட்டுக்கொண்டார்கள். கிளைமாக்சை மாற்ற மனதில்லாவிட்டாலும் தனது முதல் படத்துக்கு முட்டுக்கட்டை விழுந்து விடக்கூடாது என்று சேரனும் சம்மதித்தார்.

    படம் முடிந்த நிலையில் ஒரு நாள் என்னிடம் "சார்! கிளைமாக்சை மாற்ற வேண்டியிருக்கிறது. அதனால் இன்னும் சில நாள் கால்ஷீட் வேண்டும்'' என்றார்.

    நான் அவரிடம், "உங்கள் கதைக்கு இந்த கிளைமாக்ஸ்தான் சரியாக இருக்கும். எனவே, கிளைமாக்சை மாற்றும் பொருட்டு நீங்கள் கேட்கிற தேதிகளை நான் தருவதற்கில்லை. ஒரு நல்ல படத்தை கெடுக்க நான் உதவமாட்டேன்'' என்று பிடிவாதமாக மறுத்துவிட்டேன்.

    பாரதி கண்ணம்மா `கிளைமாக்ஸ்' மாற்றப்படாமல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. சேரனும் பிரபல இயக்குனர் அந்தஸ்தை பெற்றார்.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர், மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்தியா வர இருக்கிறார்.
    புதுடெல்லி:

    கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர், 22 வயதான இவர் சிறு வயது முதலே பாப் இசையில் கலக்கி வருகிறார். இவரது இசை ஆல்பங்கள் எல்லாமே ரசிகர்களின் அமோக ஆதரவால் மில்லியன் ஹிட்கள் அடித்து வருகின்றவை. மிகக் குறைந்த வயதிலேயே கிராமி விருது உள்பட பல விருதுகளை வென்றவர்.

    இந்நிலையில் இந்திய இசை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், ஜஸ்டின் பீபர் இந்தியாவுக்கும் வருகை தர இருக்கிறார். இந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சி மேற்கொள்ள இருக்கும் அவர் இந்தியாவிற்கும் வருகை தர உள்ளார். 

    மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் பீபரின் இசைக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தகவலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

    ஜஸ்டீன் பீபரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
    ஆடுவதை விட நடிப்பதையே அதிகம் விரும்புவதாக நடிகை அக்‌ஷரா கவுடா தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
    பெங்களூரை சேர்ந்த நடிகை அக்‌ஷரா கவுடா. விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் இந்தி படங்களில் நடனம் ஆடி  இருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு துணையாக வரும் போலீஸ் அதிகாரியாக  நடித்திருக்கிறார். தற்போது ‘மாயவன்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தெற’ படங்களில் நடித்து வருகிறார்.

    இப்போது வில்லி, போலீஸ் அதிகாரி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

    இது பற்றி கூறிய அக்‌ஷரா கவுடா....

    “ ‘போகன்’ படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பல படங்களில்  ஆடி இருக்கிறேன். ஆடுவது எனக்கு பிடித்த வி‌ஷயம். என்றாலும், அது அந்த நேரத்தில் மட்டும் ரசிகர்களை சந்தோ‌ஷப்படுத்தும்.  அவ்வளவு தான். ஆனால் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமானால் நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும். இனி  ஆடுவதை குறைத்து நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார்.
    சூர்யா ஹரி இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள ‘சி-3’ படத்தின் வசூல் நாகர்ஜுனா படத்தின் வசூலை முந்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    சூர்யா ஹரி இயக்கத்தில் நடித்து வெளிவந்துள்ள படம் ‘சி-3’.தமிழில் இதற்கு ரசிகர்களிடம நல்ல வரவேற்பு உள்ளது.  தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் இந்த படம் நன்றாக ஓடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.அங்கு சூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து  இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விசாகபட்டினம் தான் கதை களம். எனவே, தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை  நேரடி தெலுங்கு படம் போலவே ரசிக்கிறார்கள்.

    தற்போது ஆந்திரா, தெலுங்கு தேசத்தில் நாகார்ஜுனா நடித்த ‘ஓம் நமோ வெங்கடேசா’ படம் திரைக்கு வந்திருக்கிறது. இதற்கு  போட்டியாக ‘சி-3’ பார்க்கப்பட்டது. என்றாலும், நாகார்ஜுனா படத்துக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போதைய நிலையில் நாகார்ஜுனா படத்தை விட சூர்யாவின் ‘சி-3’ படத்துக்கு அங்குள்ள ரசிகர்களிடம் அதிக  வரவேற்பு கிடைத்து இருக்கிறது. வசூலிலும் நாகார்ஜுனாவை சூர்யா முந்திவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.
    ‘என்னோடு விளையாடு’ தன் வாழ்வில் திருப்புமுனை படமாக இருக்கும் என்று நடிகர் பரத் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள முழு பேட்டியை கீழே பார்க்கலாம்.
    பரத், கதிர் இணைந்து நடித்துள்ள படம் ‘என்னோடு விளையாடு’. டொரண்டோ ரீல்ஸ், ரேயான் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள்  இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அருண் கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடந்தது.

    இதில் பேசிய பரத்...

    “ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நான் நடிக்க ஒப்புக்கொண்டபடம் இது. கதையை இயக்குநர் என்னிடம் விவரித்தபோது  இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. என்னுடைய பதினான்கு ஆண்டு கால திரையுலகில் குதிரை பந்தயம், குதிரை பந்தய சூதாட்டம்  என்ற பின்னணியை வைத்து ஒரு முழுத்திரைக்கதையை நான் தமிழ் சினிமாவில் பார்த்ததில்லை. அந்த வகையில் இந்த  திரில்லர் படம் புதிதாக இருக்கும். இப்படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமையும் என்று  எதிர்பார்க்கிறேன்.

    ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த ரொமாண்டிக் திரில்லர் படம் புதிய  அனுபவத்தைக் கொடுக்கும். இந்த படம் வெற்றி பெறும்.

    என்னுடைய திரையுலக பயணத்தில் நான் விஷால், பசுபதி, சிம்பு, ஆர்யா ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்த  படத்தில் கதிர் உடன் நடித்திருக்கிறேன்.

    அதே போல் படத்தில் நல்ல தமிழ் பேசும் நடிகை சாந்தினி உடன் பணியாற்றியதும் மறக்க இயலாதது.

    இந்த படத்தில் ஒரு மெசேஜும் இருக்கிறது. குதிரைப் பந்தய சூதாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. அது என்ன மாதிரியான  விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த படம் சொல்கிறது.” என்றார்.

    நிகழ்ச்சியில் கதிர், இயக்குனர் அருண் கிருஷ்ணசாமி, தயாரிப்பாளர்கள் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி, நரேன் கந்தசாமி, நாயகிகள்  சாந்தினி, சஞ்சிதா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    தெலுங்கில் அறிமுகம் செய்த தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக இருக்கிறது என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். அது ஏன் என்று கீழே பார்க்கலாம்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் தற்போது அஜித், விஜய் படங்களில் நடித்து  வருகிறார்.

    காஜல் அகர்வால் 2007-ல் வெளியான தெலுங்கு ‘லட்சுமி கல்யாணம்’ படம் மூலம் தெலுங்கு பட உலகில் காலடி வைத்தார். இந்த  படத்தில் இவரை அறிமுகம் செய்து வைத்தவர் தெலுங்கு இயக்குனர் தேஜா.

    காஜல் அடுத்து, ‘நேனே ராஜு நேனே மந்திரி’ படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார். இதை இயக்குபவர் தேஜா. 10  வருடங்களுக்குப் பிறகு இவருடைய இயக்கத்தில் காஜல்அகர்வால் நடிக்கிறார். இது குறித்து கூறிய அவர்....

    “ நான் தெலுங்கு படத்தில் தேஜாவின் இயக்கத்தில் மீண்டும் நடிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. படபடப்பாகவும்  இருக்கிறது” என்றார்.
    `பாகுபலி' இரண்டாம் பாகத்தில் ஷாருக்கான் நடிப்பதாக வெளிவந்த தகவல் உண்மைதானா? இதுகுறித்த `பாகுபலி' படக்குழு அளித்த தகவலை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி’ படம் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள்  மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் போஸ்ட்  புரொடக்சன்ஸ் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

    பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்கள்  இந்த பாகத்திலும் தொடர்ந்து நடித்துள்ளன.

    இந்நிலையில், தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
    பிரபாஸுக்கும், ராணா டகுபதிக்கும் இடையே நடக்கும் போரில் சமாதான தூதுவராக ஷாருக்கான் நடித்துள்ளதாக செய்திகள்  வெளிவந்தது.

    இந்நிலையில், இவ்வாறு வெளியான தகவல் உண்மையல்ல என்று `பாகுபலி' படக்குழு தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளது. எங்கள் படத்தில் ஷாருக்கான் நடிப்பது எங்களுக்கு மகிழச்சியே, எனினும் `பாகுபலியின் 2'-வது பாகத்தில் அவர்  நடிக்கவில்லை என்றும், அவர் நடிப்பதாக வெளியான தகவல் வதந்தி என்றும் `பாகுபலி' படக்குழு தெரிவித்துள்ளது.

    வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ‘பாகுபலி 2’ படம் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளனர்.
    'ஜனா' படத்தில் வில்லனாக நடித்த மலையாள சினிமா நடிகர் பாபுராஜுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மலையாள சினிமா நடிகர் பாபுராஜ். இவர் தமிழில் 'ஜனா' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி என்ற இடத்தில் நடிகர் பாபுராஜுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இதன் அருகே உள்ள குளத்து தண்ணீரை நடிகர் பாபுராஜு தனது பண்ணை வீட்டு பயன்பாட்டுக்கு எடுத்து வருகிறார்.

    மேலும் அந்த பகுதி மக்களும் அந்த குளத்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.



    இந்த நிலையில் இந்த குளத்தை தூர்வார நடிகர் பாபுராஜு ஏற்பாடு செய்தார். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த குளத்தை தூர்வாரக்கூடாது என்று அந்த பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடிகர் பாபுராஜுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த தகராறு முற்றியதில் சன்னி என்பவர் அரிவாளால் நடிகர் பாபுராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நடிகர் பாபுராஜு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சன்னி உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நடிகர் சூர்யா இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர் காரை பரிசளித்துள்ளார். அதற்கான காரணத்தை கீழே பார்ப்போம்.
    சூர்யா நடிப்பில் ‘சி3’ படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. `சிங்கம்', `சிங்கம் 2'  படத்தின் அடுத்த பாகமாக உருவாக்கியுள்ள `சி3' படத்தை ஹரி இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யா - அனுஷ்கா ஷெட்டி,  ஸ்ருதிஹாசன், விவேக், சூரி, ராதாரவி, தாகூர் அனூப் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கடந்த 9-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படம் ரிலீசான 6  நாட்களிலேயே 100 கோடியை வசூலித்து புதிய சாதனையை படைத்துள்ளது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வெளியான  `சி3' படம் நல்ல வசூலை குவித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    பொதுவாக சூர்யாவின் படங்களை விரும்பி பார்க்கும் தந்தை சிவக்குமார் அவ்வப்போது பாராட்டுகளையும் தெரிவிப்பாராம்.  ஆனால் சமீபத்தில் வெளியான `சி3' படத்தை பார்த்த சிவக்குமார் சூர்யாவை கட்டித் தழுவியதாக சூர்யா தெரிவித்துள்ளார்.  தந்தையின் தழுவல் பெற்ற மகிழ்ச்சியில் சூர்யா, வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இயக்குநர் ஹரிக்கு டோயடோ ஃபார்டியூனர்  காரை பரிசளித்துள்ளார்.

    முன்னதாக `பசங்க 2' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் பாண்டிராஜுக்கு சூர்யா கார் பரிசளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    ×