என் மலர்tooltip icon

    மீனம் - தமிழ் மாத ஜோதிடம்

    மீனம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    வரவேற்பதில் வல்லவர்களாக விளங்கும் மீன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கிறார். ஏழரைச் சனியும் தொடர்கிறது. மேலும் விரயச் சனியும் இம்மாதம் வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார்.

    எனவே வருமான பற்றாக்குறை, வளர்ச்சியில் தளர்ச்சி, மனக்கவலை ஏற்படும். நினைத்தது நிறைவேறுவதில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உறவினர் பகை உருவாகி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை அதிகம் தேவைப்படும் மாதம் இது.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் தடுமாற்றம் ஏற்படும்.

    பெற்றோர் வழி பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினைகள் முடிவடையாமல் இழுபறி நிலையில் இருக்கும். மனச்சோர்வு அதிகரிக்கும். விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 4-ம் இடத்திற்கு அதிபதியான புதன், 9-ம் இடத்திற்குச் செல்வது யோகமான நேரம்தான். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.

    தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். 'பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். எனவே ஏழரைச் சனி வலுவடைகிறது. விரயங்கள் கூடும். விழிப்புணர்ச்சி அதிகம் தேவை. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பார்த்தபடியே வந்துசேரும்.

    கடன் சுமை குறைந்தாலும் மீண்டும் புதிய கடன்கள் உருவாகும். தொழில் கூட்டாளிகளை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவசரம் காட்ட வேண்டாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் வேளையில், தொழிலில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

    கொடுக்கல்- வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்கள் ராசிநாதன் குருவிற்கு, சுக்ரன் பகைக்கிரகம் என்பதால் எதிர்பார்த்த காரியங்களில் இடையூறுகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திடீர் மாற்றம் ஏற்பட்டு, மனக்கலக்கம் உருவாகும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வரவை காட்டிலும் செலவு கூடுதலாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

    கலைஞர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. மறதி அதிகரிக்கலாம். பெண்களுக்கு செலவு கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 18, 19, 23, 24, நவம்பர்: 3, 4, 5, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மீனம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    முயற்சியும் பயிற்சியும் நமக்கு மூலதனம் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் அமர்ந்தபடி, தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார்.

    எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழி அமைத்துக்கொள்வீர்கள். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. புனிதப் பயணங்கள் உருவாகும். சர்ப்பக் கிரகங்களை முறையாக வழிபட்டால் சகல யோகங்களும் வந்துசேரும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் இருப்பவர் சனி. அவர் வக்ரம் பெறுவது, ஒரு வகையில் நன்மைதான். என்றாலும் லாபாதிபதியாகவும் சனி இருப்பதால், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை அடிக்கடி பிரச்சினைகளும், குறுக்கீடுகளும் வந்துகொண்டே இருக்கும்.

    இருப்பினும் தைரியமும் தன்னம்பிக்கையும் மிக்க நீங்கள் எதையும் சமாளித்து விடுவீர்கள். வெளிநாட்டு பயணத்தில் கொஞ்சம் தாமதங்கள் ஏற்படலாம். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் முன்னேற்றப் பாதிப்பில் இருந்து விடுபட வைக்கும்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். களத்திர ஸ்தானாதிபதியான அவர், களத்திர ஸ்தானத்திலேயே உச்சம் பெறுவது யோகமான நேரமாகும். 'இல்லத்தில் மங்கல ஓசை கேட்க முடியவில்லையே' என்ற நீண்ட நாட்களாக இருந்த ஏக்கம் தீரும். 'வரன்கள் வாசல்வரை வந்து கைநழுவிப் போகிறதே' என்ற மன வாட்டம் மறையும்.

    தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ, தங்கள் பிள்ளைகளுக்கோ திருமணம் கைகூடிவரும். திடீரென வரன்கள் வந்து திக்குமுக்காட வைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டையே விலைக்கு வாங்கும் யோகம் உண்டு.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். இக்காலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. அஷ்டமாதிபதி வலுவடையும் இந்த நேரத்தில், தடைகள் அதிகரிக்கும். உறவுகள் பகையாகலாம். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்ய இயலாது.

    வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும். வாகனப்பழுது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், உயர் அதிகாரிகளின் முரண்பாடான குணத்தினால் 'வேலையில் இருந்து விலகிக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். இக்காலத்தில் பொருள் வரவு திருப்திகரமாக இருந்தாலும், விரயங்கள் இரு மடங்காகும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம், நாடு மாற்றம் போன்றவை நிகழும் நேரம் இது.

    பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி செலவிடுவீர்கள். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு விரயங்கள் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, விருப்பமான வகையில் பணியிட மாற்றம் அமையாது.

    கலைஞர்களுக்கு, நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். மாணவ - மாணவிகள் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பெண் களுக்கு 'வரவைக் காட்டிலும் செலவு கூடுகிறதே' என்ற கவலை மேலோங்கும். சேமிப்பு கரையும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 21, 22, 25, 26, அக்டோபர்: 5, 6, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    மீனம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    வாழ்க்கையை வளமாக்க வளைந்து கொடுத்து செல்லும் மீன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தைரியகாரகன் செவ்வாயும் இணைந்திருக்கிறார். எனவே தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை பாதையை சீராக்கிக் கொள்வீர்கள். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்த வண்ணமாக இருக்கும். ஜென்ம ராசியில் ராகு இருக்கிறார். 'ராகுவை போல கொடுப்பானுமில்லை' என்பது பழமொழி. எனவே பொருளா தாரம் மிக திருப்தியாக இருக்கும். கேது 7-ல் இருப்பதால் வாழ்க்கை துணை வழியே சில பிரச்சினைகள் மீண்டும் வந்து தலைதூக்கும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரை பார்க்கிறார். இந்த பகைக் கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. என்றாலும், உங்கள் ராசியை பொறுத்தவரை யோகம்தான். ஏன் என்றால் 6-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன் 12-ம் இடத்திற்கு அதிபதியான சனியை பார்ப்பதால் 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல காரியங்களும், எதிர் பாராத திருப்பங்களும் நடைபெறும்.

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். மணி விழா, மணவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும் சூழல் உருவாகும். அருகில் இருப்பவர்களின் ஆதரவோடு நல்ல காரியமொன்றை நடத்தி வைப்பீர்கள்.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியானவர் குரு. அவருக்கு பகைக் கிரகமாக விளங்கும் சுக்ரன் நீச்சம் பெறும் இந்த நேரத்தில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

    விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் உயரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும்போது, தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றிக்குரிய செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கும்.

    உற்றார் - உறவினர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் கைநழுவி சென்ற வாய்ப்புகள் மீண்டும் கைகூடிவரும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரித்து பொருளாதார நிலையை உயர்த்தும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். வீடு, இடம் வாங்கும் முயற்சி கைகூடும். வரன்கள் வாசல் தேடி வரலாம். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும்.

    தொழில் நடத்துபவர்களுக்கு கிளைத் தொழில் தொடங்கும் வாய்ப்பும், திடீர் தனவரவும் உண்டு. பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் யோகம் உண்டு. மாணவ - மாணவிகள் கல்வி யில் தேர்ச்சி பெறுவர். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 25, 29, 30, செப்டம்பர்: 10, 11, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மீனம்

    ஆடி மாத ராசிபலன்

    நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, 3-ம் இடத்தில் தனாதிபதி செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருள்தரும் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஜென்மத்தில் ராகு இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் புதியவர்கள் வந்து இணைவர். சப்தம ஸ்தானத்தில் கேது இருப்பதால் வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து 3-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றனர். வெற்றிகள் ஸ்தானத்தில் ராசிநாதன் குருவோடு தன - பாக்கியாதி பதியான செவ்வாய் இணைந்து சஞ்சரிப்பதால் 'குரு மங்கள யோகம்' ஏற்படுகிறது. பூமி சேர்க்கையும், பொருள் சேர்க்கையும் ஏற்பட புதிய வழியைக் கையாளுவீர்கள். விலகிச்சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். உடன் பிறப்பு களுக்கோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ நடைபெறும் சுப காரியங்களை முன்நின்று நடத்தி வைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம்.

    புதன்-வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4,7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் வலிமை இழக்கும் பொழுது யோகம் செய்யும். எனவே இக்காலத்தில் கல்யாணக் கனவுகள் நனவாகும். பெற்றோரின் மணி விழா, பவள விழா போன்றவை நடைபெற எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவீர்கள். படித்து முடித்த வாழ்க்கை துணைக்கு இப் பொழுது வேலை கிடைக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அஷ்டமாதிபதி 6-ம் இடத்திற்கு வரும் போது, 'கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, திடீர் மாற்றங்கள் நல்லவிதமாக அமையும். வருமானம் உயரும். கடன் பாக்கிகள் வந்துசேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தலைமை பொறுப்புகள் தானாக கிடைக்கும். தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். தன்னிச்சையாக இயங்குவதில் ஆர்வம் ஏற்படும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். மாணவ-மாணவிகளுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 17, 18, 22, 23, 28, 29, ஆகஸ்டு: 13, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மீனம்

    ஆனி மாத ராசிபலன்

    பிறருக்கு சேவை செய்யும் குணம் பெற்ற மீன ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியில் ராகுவும், சப்தம ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிக் கிறார்கள். எனவே சர்ப்ப கிரகங் களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. அதே நேரம் தனாதிபதி செவ்வாய் பலம் பெற்றிருப்பதால், தன வரவு திருப்திகரமாக இருக்கும். கட்டிடப் பணி தொடரும். தொழில் வளர்ச்சியில் புதியவர்களைப் பங்குதாரர் களாக்கி மகிழ்வீர்கள்.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். விரயாதிபதியான சனி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் அவர் லாபாதிபதியாகவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்ய இயலாமல் போகலாம். பணம் கைக்கு வந்த மறுநிமிடமே செலவாகிவிடும். உத்தியோக மாற்றமோ, வீடு மாற்றமோ வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்பும் சூழல் உருவாகலாம்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும்போது பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது பற்றி சிந்திப்பீர்கள். கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்கி மகிழவும் உகந்த நேரம் இது.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசி நாதன் குருவிற்கு பகை கிரகமான அவர், பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்போது கவனமாக செயல்பட வேண்டும். உடன்பிறப்புகள் எதிரியாகலாம். உற்றார், உறவினர்கள் பகையாகலாம். கடன்சுமை கூடும். கவலை அதிகரிக்கும். பிள்ளை களால் விரயம் உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு சகப் பணியாளர் களுக்கு போய்ச் சேரும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதி யானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும்போது குடும்ப ஒற்றுமை பலப்படும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்கும் யோகம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். பணியில் இருக்கும் தொய்வு அகலும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும். தந்தை வழி உறவினர் மூலம் தனவரவு உண்டு. வருங்காலத்தைப் பற்றிய பயம் அகலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளின் அனுசரிப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், இலாகா மாற்றம் வரலாம். கலைஞர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை குறையலாம். எனவே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 19, 20, 21, 27, 28, ஜூலை: 1, 2, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மீனம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே இம்மாதம் யோகமான மாதமாகவே அமைகிறது. ராசியிலேயே தனாதிபதி செவ்வாயும், ராகுவும் இருப்பதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். சென்ற மாதத்தில் தாமதப்பட்டு வந்த காரியங்கள், இப்பொழுது தடையின்றி நடை பெறும். தொழிலில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 3-ம் இடத்தில் பகை கிரகமான குருவோடு இணையும் நேரத்தில், உடன்பிறப்புகள் வழியில் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். முடிவுக்கு வந்த வழக்குகள் மீண்டும் தொடரலாம். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையாது. வீண் விரயங்களில் இருந்து விடுபட சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. உறவினர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்ற காலங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சகாய ஸ்தானத்தில் வரும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். தடைக் கற்கள் அகலும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கை துணைக்கு, இப்பொழுது நல்ல வேலை அமையும். வருமானம் திருப்தி தரும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் அல்லது பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு, அதுவும் கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். தன - பாக்கியாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு அற்புதமான நேரமாகும். பொருளாதாரம் உச்ச நிலையை அடையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்களின் ஆலோசனை, தக்க சமயத்தில் கைகொடுக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கும்போது ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்க, நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். கடன் சுமை படிப் படியாக குறையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டியது அவசியம். விலை உயர்ந்த பொருட்களை விற்கும் சூழ்நிலை உருவாகும். இடம், பூமியால் ஏதேனும் பிரச்சினைகள் வரலாம். வியாபாரத்தில் இருந்து கூட்டாளிகள் விலக நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, உயர் அதிகாரிகளுடன் மோதல் உருவாகலாம். கவனம் தேவை. விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும். எனவே யோசித்து செயல்படுவது நல்லது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் பிரச்சினைகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு திடீர் வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு ஆசிரியர்களின் ஆதரவு உண்டு. பெண்களுக்கு ஏழரைச் சனியால் பிரச்சினைகள் உருவாகலாம். இருப்பினும் தேவைகேற்ப வரவு வந்துசேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 23, 24, 25, 29, 30, ஜூன்: 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    மீனம்

    பங்குனி மாத ராசிபலன்

    பிறருக்கு சேவை செய்யும் குணம் பெற்ற மீன ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்திலும், தனாதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் தனவரவு திருப்தியாக இருந்தாலும் உடனுக்குடன் விரயங்களும் அதிகரிக்கும். இது போன்ற காலங்களில் சுப விரயங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்வது நல்லது. குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் சில பிரச்சினைகள் வந்தாலும், அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. ஏழரைச் சனியும் நடைபெறுவதால், எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. நீண்ட தூரப் பயணங்களும், இடமாற்றமும் எதிர்பார்த்தபடி அமையும்.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்குள்ள சனியோடு இணைந்து மாதம் முழுவதும் சஞ்சரிக்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் நண்பர்களை நம்பி செய்த காரியங்களில் பிரச்சினைகள் ஏற்படும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை விற்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் சூழ்நிலைகூட வரலாம். மூட்டு வலி, முழங்கால் வலி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகும் சூழ்நிலை உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் மிக மிக கவனத்தோடு இருக்க வேண்டிய நேரம் இது. பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண் பழிகள் வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.

    புதன் வக்ரம்

    மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். இதன்விளைவாக நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறும் பொழுது, தாய்வழி ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ கல்யாண வாய்ப்பு கைகூடும். அசையாச் சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டுப் பயணங்கள் அனு கூலம் தரும். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8-க்கு அதிபதியான சுக்ரன் வலிமையடைவது அவ்வளவு நல்லதல்ல. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்து செய்த சில காரியங்கள், கடைசி நேரத்தில் தான் முடிவடையும். 'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று இருப்பதே நல்லது. பெண்வழிப் பிரச்சினைகள் தலை தூக்கலாம். தொழிலில் யாரையேனும் நம்பி செயல்பட்டு எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, அதை விரிவு செய்ய கடன் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாகனம், வீடு வாங்க அலுவலகத்தில் கேட்ட உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு படிப்பிற்கேற்ற வேலை அமையும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

    மார்ச்: 14, 15, 18, 19, 28, 29, 30, ஏப்ரல்: 4, 5, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.

    மீனம்

    மாசிமாத ராசிபலன்

    அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் மீன ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, தன ஸ்தானத்திலும், தனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார்கள். எனவே தனவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் கொஞ்சம் விரயங்களும் வந்துகொண்டே இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நடை பெறாத சுபகாரியங்கள் இப்பொழுது நடைபெறும். ஒருசிலருக்கு இனிமை தரும் விதத்தில் இட மாற்றம் ஏற்படும்.

    கும்பம் - புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களே நடை பெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் மறைவிடத்திற்கு வரும்பொழுது நல்ல பலன்களை அள்ளி வழங்கும் என்பார்கள். எனவே இது போன்ற நேரங்களில் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். கல்விக்காக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    மகரம் - சுக்ரன்

    மாதத் தொடக்க நாளிலேயே, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படலாம். எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் நல்ல விதமாக நடைபெறும். `வாங்கிய இடத்தை கொடுத்து விட்டோமே' என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது மீண்டும் இடம் வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளை அனுசரித்து செல்வதன் மூலமே உள்ளத்தில் மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இயலும். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

    மீனம் - புதன்

    மார்ச் 2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் தாமதம் ஏற்படும். கல்யாண வாய்ப்பு கைகூடுவதில் தடைகள் உருவாகும். வாசல் தேடிவந்த வரன்கள் திரும்பிச் சென்று மனதை வாட வைக்கும். இதுபோன்ற காலங்களில் சுய ஜாதக அடிப்படையில் வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

    கும்பம் - சுக்ரன்

    மார்ச் 8 ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் 12-ம் இடத்திற்கு வருவது யோகம் தான். எதிர்பாராத நல்ல திருப்பங்களும், வருமான உயர்வும் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும். புனித பயணங்கள் அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்து அணிந்து அழகு பார்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியிலும் அனுகூலம் உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ, மாணவியர்களுக்கு கல்வியில் சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் இப்பொழுது நடைபெறும். இடமாற்றம் இனிமை தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 19, 20,

    மார்ச்: 2, 3, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மீனம்

    தை மாத ராசிபலன்

    எண்ணம் நல்லதாகும் எல்லாம் நல்லதாகும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

    தை மாத கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சீராகும். விரய ஸ்தானத்தில் சனி இருப்பதால் விரயங்கள் வரத்தான் செய்யும். என்றாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. மொத்தத்தில் வரவும், செலவும் சமமாகும்.

    மேஷ-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, வாக்கு, தனம், குடும்பம், ஆகியவற்றை குறிக்கும் இரண்டாமிடத்தில் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. ராசிநாதன் பலம் பெறும் இந்த நேரத்தில் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். ஜீவன ஸ்தானம் வலுப்பெறுவதால் நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. தொழில் புரிபவர் களுக்கு பழைய தொழிலை பைசல் செய்து விட்டு புதிய தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 10-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். தொழிலில் பங்குதாரர்கள் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. பணிப்புரியும் இடத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்க்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். இடம் பூமியால் லாபம் கிடைக்கும். வியாபாரம் வெற்றி நடைபோடும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று உங்கள் பணத்தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யப்போகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளம் தருவதாக சொல்லி அழைப்புகள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளுக்கு உங்களை தேர்ந்தெடுப்பர். கிளைத்தொழில் தொடங்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு `கூட்டாளிகளை மாற்றலாமா?' என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும். மாணவ, மாணவியர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு வீடு மாற்றங்களும், பணி இட மாற்றங்களும் வரலாம். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 19, 20, 24, 25, பிப்ரவரி: 3, 4, 5, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    மீனம்

    மார்கழி மாத ராசிபலன்

    எதையும் உற்சாகத்தோடு செய்து வெற்றிபெறும் மீன ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு வக்ர நிவர்த்தியாகி சஞ்சரிக்கப் போவதால் ஆரோக்கியம் சீராகும். வெளிநாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    பணவரவு திருப்தி தரும். இம்மாதம் ஏழரைச் சனியின் ஆதிக்கம் ஆரம்பம் ஆவதால், எதையும் கொஞ்சம் யோசித்து செய்வது நல்லது. இயல்பான வாழ்க்கையில் சில குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள்.

    கும்ப ராசியில் சனி

    இதுவரை மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப்பெயர்ச்சி, உங்களுக்கு ஏழரைச் சனியாக வருகிறது. இதில் முதல் சுற்று, மூன்றாவது சுற்றாக இருந்தால் யோசித்து செயல்பட வேண்டும். நடு சுற்றாக இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை.

    இருப்பினும் முதல் இரண்டரை ஆண்டுகள் விரயச் சனி நடைபெறும் என்பதால், விரயங்கள் அதிகரிக்கத் தான் செய்யும். எனவே சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது. வீடு கட்டுவது, கட்டிய வீட்டை பழுது பார்ப்பது, பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத விதத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.

    விருச்சிக - சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு வரும் சுக்ரனால் பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். நீண்டதூர பயணங் களால் நன்மை கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலைக்கு வந்துவிடும். 'வாகனங்கள் அடிக்கடி பழுதாகி மனக்குழப்பத்தை உருவாக்குகிறதே, இனி புதிய வாகனங்கள் வாங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    தனுசு - செவ்வாய்

    தனுசு ராசிக்கு மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கின்றார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு செவ்வாய் வருவது யோகம் தான். தொழிலை விரிவு செய்ய எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தவர்கள் உதவி செய்வர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். அண்ணன், தம்பிகள் ஆதரவோடு எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். உத்தியோகத்தில், உயர் அதிகாரிகள் உங்கள் குறைகளை தீர்க்க முன்வருவர்.

    தனுசு - புதன்

    மார்கழி 23-ந் தேதி, தனுசு ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சூரியனோடு இணைந்து புத-ஆதித்ய யோகத்தை உருவாக்குகிறார். எனவே பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    வாழ்க்கைத் துணையின் வேலைவாய்ப்பு கருதி ஏற்பாடு செய்திருந்தால், அதுவும் கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். சனி ஆதிக்கம் இருப்பதால் வீண் பழி ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு, புதிய நண்பர்களால் பலன் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும்.

    மாணவ -மாணவி களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனை தக்க பலன் தரும். பெண்களுக்கு குடும்பத்தில் குழப்பங்கள் கூடும். மருத்துவச் செலவு உண்டு. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 17, 18, 22, 23, 26, 27,

    ஜனவரி: 7, 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    மீனம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    எதையும் சிந்தித்து முடிவெடுத்து சிறப்புகளைக் காணும் மீன ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் போது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்று தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அதன் விளைவாக ஆரோக்கியத் தொல்லைகளும், அதிக விரயங்களும் ஏற்படலாம். ஜென்மத்தில் ராகு சஞ்சரிப்பதால் எண்ணங்களில் திடீர் திடீரென மாற்றங்களும், எதையும் அரைகுறையாகச் செய்து அவதிப்படும் சூழ்நிலையும் உண்டு. சர்ப்ப கிரக ஆதிக்கம் மேலோங்கி இருப்பதால் குரு, ராகு, கேதுக்களுக்குரிய ப்ரீதிகளை முறையாக அனுகூல நாட்களில் செய்வது நல்லது.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசி நாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதி பதியாகவும் விளங்கு பவர் குரு பகவான். அவர் வக்ரம் பெறும்பொழுது நன்மை கிடைக்கும். என்றாலும், ராசிநாதனாகவும் விளங்குவதால் சில காரியங்களில் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். தவிர்க்க முடியாத விரயங்களும், தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும்.

    குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல்களில் புதியவர்களை நம்பிச் செயல்பட வேண்டாம். தொழிலில் இணைந்திருந்த பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்வார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் இல்லாத இட மாற்றங்கள் வரலாம். வியாழன் தோறும் குரு வழிபாடு அவசியம் தேவை. உடல் நலத்திலும் கவனம் தேவை.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். அஷ்டமாதிபதி நீச்சம் பெறும்பொழுது நன்மைகளையே எதிர்பார்க்கலாம். எனவே மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாகவே இருக்கும். கார்த்திகை 14-ம் தேதி தன் சொந்த வீடான துலாம் ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அஷ்டமம் வலுப்பதால் விரயங்கள் கூடும். வீடு மாற்றங்கள் உருவாகும்.

    அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் தவிக்கலாம். மேலும் நகைகளை அடகு வைக்கும் சூழல் ஏற்படலாம். கடன் சுமை கூடிக்கொண்டே செல்கிறது என்ற கவலை உண்டு. சுக்ர ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    தனுசு-புதன்

    உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் கார்த்திகை 14-ம் தேதியாகும். எனவே அதன் பிறகு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் கூடுதல் முதலீடு செய்ய கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பெற்றோர்களும் ஒத்துழைப்பு செய்வர். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலமும் வருமானம் கிடைக்கும். உத்தி யோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவு தருவர். ஒருசிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுய தொழில் தொடங்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துவர்.

    மீனம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    உழைப்பின் மூலமே உயர்வு காண இயலும் என்று சொல்லும் மீன ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசிநாதன் குரு வக்ரம் பெற்றிருக்கின்றார். உங்கள் ராசியிலேயே ராகுவும் சப்தம ஸ்தானத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே கால சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ராசி அமைந்துள்ளது. எனவே ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கை உருவாகும். ஒரு தொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கரங்களில் புரளும். தொழில் மாற்றங்களும், இடமாற்றங்களும் கூட உருவாகலாம். யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் தக்க பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி சனி மகர ராசியில் வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு சனி பகவான் லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியாவார். அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறும் பொழுது லாபம் சிறப்பாக வந்தாலும் விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். யாரையும் நம்பி எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்க இயலாது. பயணங்கள் அலைச்சல் தருவதாக இருக்குமே தவிர ஆதாயம் தருவதாக இருக்காது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இடம் வாங்குவது, வீடு வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும். கூடிக்கொண்டே சென்ற கடன் சுமை குறைய வழிபிறக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலகுவதாகச் சொல்லி அச்சுறுத்துவர்.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியிலேயே வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் குரு தன ஸ்தானத்தில் வக்ரம் பெறுவதால் பண நெருக்கடி கொஞ்சம் அதிகரிக்கும். எந்தக் காரியத்தையும் பணத்தை வைத்துக்கொண்டு செய்ய இயலாது. காரியத்தை தொடங்கி விட்டால் பணப்புழக்கம் வந்து சேரும். உறவினர்களால் சில உபத்திரவங்கள் ஏற்படலாம். குடும்ப ஒற்றுமை கொஞ்சம் குறையும். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் பிரச்சினைகள் வரலாம்.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகை கிரகமாவார். அவர் நீச்சம் பெறுவது நன்மை தான். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 9-ம் இடத்திற்கு வரும்பொழுது பெற்றோர்களின் ஆதரவு திருப்தி தரும். பூமி வாங்கும் யோகம் உண்டு. உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல்கள் அகலும். ெவளிநாட்டில் பணிபுரிய ஒருசிலருக்கு அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைஞர்களுக்குப் பெருமை சேரும். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் அக்கரை கூடும். பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 23, 24, 29, 30, நவம்பர் 3, 4, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்

    ×