என் மலர்

  மிதுனம் - சனிப்பெயர்ச்சி பலன்கள்

  மிதுனம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள் - 2023

  அஷ்டமச் சனியிலிருந்து விடுதலை

  இளமையையும் ஆடம்பரத்தையும் விரும்பும் மிதுன ராசி அன்பர்களே இதுநாள் வரை ராசிக்கு 8ம் இடத்தில் அமர்ந்து உங்களுக்கு மன சஞ்சலத்தையும் தொழில் நெருக்கடியையும் நிம்மதியற்ற நிலையையும் தந்த சனி பகவான் ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானம் செல்கிறார். தன் 3ம் பார்வையால் 11ம்மிடமான லாப ஸ்தானத்தையும் 7ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தையும் 10ம் பார்வையால் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.

  பாக்கியச் சனியின் பலன்கள்: மிதுன ராசிக்கு சனி 8, 9ம் அதிபதியான சனி பகவான் பாக்கிய ஸ்தானம் செல்வதால் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு மிகுதியான பாக்கிய பலன்களை அள்ளித்தரும் என்பதில் சிறிது கூட சந்தேகம் இல்லை. இதுவரை இருந்த மனக்கவலை, உடல் நலக் குறைவு, கடன் தொல்லை , தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை இந்த சனிப்பெயர்ச்சி தரும். தொழிலில் நிலைத்து நிற்க முடியுமா? என்ற மன பயத்துடன் இருந்தவர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

  பொருத்தமில்லாத, தகுதி குறைவான வேலையில் இருந்தவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். சிலருக்கு தொழில், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். வேலை பார்த்த இடத்தில் சக ஊழியர்களுடன் உயர் அதிகாரிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். மிக மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது. பாக்கிய ஸ்தான சனி பகவான் உங்களை தர்ம வழியில் நடத்தி செல்ல இருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்படி எல்லாம் வாழ்ந்தால் முன் ஜென்ம கர்மாவை கழித்து ஆன்மாவை சுத்தப்படுத்தி பிறவியற்ற நிலையை அடையலாம் என்பதை புரிய வைப்பவர். இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சனி பகவான் மூலம் வாழ்க்கை தத்துவத்தை படிக்கப் போகிறீர்கள். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள்.

  3ம் பார்வை பலன்: 9ம் இடத்தில் அமரும் சனி பகவான் தனது 3 ம் பார்வையால் 11ம் இடமான லாப ஸ்தானத்தை பார்ப்பதால் அஷ்டமச் சனி காலத்தில் பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது. பணம் என்றால் ஆயிரக்கணக்கில் அல்ல. லட்சங்கள், கோடிகள். வாழ்நாளில் இதுவரை பார்க்காத பெரும்பணம். நடப்பதெல்லாம் கனவா? நனவா என்று உங்களை கிள்ளிப் பார்க்க வேண்டும். கோடீஸ்வர யோகம் மிதுன ராசிக்கு வந்து விட்டது. ஒரு காலகட்டம் பிரச்சனைக்குரியதாக இருந்தால் வெகு விரைவில் பொற்காலத்தை தர இறைவன் உங்களை சோதிக்கிறான் என்று பொருள்.

  உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உங்களுக்கு உதவுவார். இதுவரை இருந்த வந்த சகோதர/சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து, எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பும் உள்ளது. கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கத் துவங்குவார்கள்.அஷ்டமச் சனியால் பள்ளி, கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திய மாணவ/மாணவிகள் மீண்டும் படிப்பை தொடர்வார்கள்.

  7ம் பார்வை பலன்: சனியின் 7ம் பார்வை தைரிய, வீரிய சகாய ஸ்தானமான 3ம் மிடத்தில் பதிகிறது. உங்களை ஆட்டிப்படைத்த இனம் புரியாத மன சஞ்சலம் விலகும். இது நாள் வரை தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். வேலைப் பளு அதிகமாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும்.உடன் பிறந்த சகோதர, சகோதிரிகளுடன் நல்லிணக்கம் உண்டாகும். பாகப்பிரிவினை சுமூகமாகும். ஜாமீன் வழக்குகள் சாதகமாகும்.

  10ம் பார்வை பலன்: சனியின் 10ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு இருப்பதால் இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனை இனி இல்லை. பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். குருவின் பார்வை பட்ட இடம் பெருகும். சனியின் பார்வை பட்ட இடம் பாழ்.

  அந்த வகையில் பார்க்கும் போது 6ம் இடத்தை சனி பார்வை இடுவதால் இரண்டரை வருடத்திற்குள் கடன், நோய், எதிரி தொல்லையில் இருந்து முழுமையாக விடுபடக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். மனோபலம், தேகபலம், பணபலம் ஆகிய மூன்றும் குடிபுகும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். அதற்காக பிறர் பிரச்சனைகளை உங்கள் தலையில் இழுத்துப் போட்டு அசட்டு தைரியத்துடன் செயல்படுவது கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதால் ஒதுங்கி நிற்பது நல்லது.

  சனியின் அவிட்டம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 17.1.2023 முதல் 14.3.2023 வரை

  மிதுன ராசிக்கு 6,11ம் அதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் இது நாள் வரை நோயிற்கான காரணம் மற்றும் நோயின் தன்மை தெரியாமல் செய்த வைத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நோய்க்கான காரணம் கண்டறிந்து சிகிச்சையால் பலன் கிடைக்கும். நீண்ட நாட்களாக அவதிப்படுத்திய நோய்க்கு நிவாரண காலம். ஆயுளுக்கு பங்கம் தரும் நோய் சிகிச்சை செய்பவர்கள் தினமும் மஹா மிருத்யுஞ்ச மந்திர பாராயணம் செய்து துளசி தீர்த்தம் அருந்த நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  சதயம் நட்சத்திர சஞ்சார பலன்கள். 14.3.2023 முதல் 6.4.2024 வரை

  கோட்சாரத்தில் அக்டோபர் 30 வரை லாப ஸ்தானத்திலும் அதன் பிறகு தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் ராகுவின் சதய நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் அரசியல்வாதிகளுக்கு ஆனந்தமான நேரம். கட்சியின் உயர் பதவிக்கு தகுந்த நபர் நீங்கள் தான் என அறிந்து முக்கிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும். தம்பதிகள் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

  தொழில்துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நிறைவேறும். சிலருக்கு முக்கிய தேவைகளுக்காக கடன் வாங்கும் தேவை உண்டாகும். அப்படி வாங்கினால் அதை அடைத்து விட முடியுமா? என்ற கவலையும் உண்டாகும். தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும். முக்கியமான தேவைகள் நிறைவேறும்.

  17.6.2023 முதல் 4.11.2023 வரை ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலங்களில் புதுப் பணத்தை பார்ப்பதால் சிலருக்கு குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அரசியல் நாட்டம் மிகும். அரசியல் கட்சிகள், சங்கங்கள் இயக்கங்களில் முன்னிலை உறுப்பினராகு வீர்கள். அஷ்டமச் சனி காலங்களில் உங்களை உதாசீனம் செய்தவர்கள் உங்களின் தயவு தேடி வருவார்கள். உழைக்காமல் உண்ட சோறு உடம்பில் ஒட்டாது, தண்டச் சோறு என்று திட்டிய பெற்றோர்கள் உங்களை அன்புடன் உபசரிப்பார்கள்.

  பூரட்டாதி நட்சத்திர சஞ்சார பலன்கள் 6.4.2024 முதல் 29.3.2025 வரை

  குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரி யங்களில் நன்மை ஏற்பட லாம்.7, 10ம் அதி பதி குருவை பாக்கியாதிபதி சனி பார்ப்பதால் விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சனைகள் பனி போல் விலகும். உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பா விடம் நிலவிய மனக்சப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் சுமூக மாகும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தி யத்தை நாடுவீர்கள். பொருளாதாரம், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை திருப்தியான காலம் என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.

  30.6.2024 முதல் 15.11.2024 வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் வக்ரம் பெறும் காலத்தில் எந்த செயலிலும் உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுக்க வேண்டிய நேரம். பிள்ளை களால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவிற்கு வரும். குல தெய்வ கோவிலுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

  திருமணம்: சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். உடனே புத்திரப் பிராப்தம் கிடைக்கும்.

  பெண்கள்: மிதுன ராசிப் பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த உங்களின் தாய் வழி சீதனம் உங்களை தேடி வரும். பெண்கள் குழுவாக சேர்ந்து அழகு, ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டும் வாய்ப்பு உள்ளது. புத்தாடை தங்கம் வெள்ளி நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். ஓட்டை வண்டியில் அழைத்து சென்ற உங்கள் கணவர் புதிய வண்டியில், காரில் அழைத்து செல்வார். கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய், தந்தை பக்கபலமாக இருப்பார்கள்.

  பரிகாரம்: பரிபூரணமான பாக்கிய பலன்களை அனுபவிக்க வேண்டிய காலம் என்பதால் செயற்கரிய செயல்களை செய்து புகழ், பாராட்டுகளை அடைவீர்கள் மேலும் நன்மைகளை அதிகரிக்க பால், தயிர், கோமூத்திரம், நெய் சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க, தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் அதிகரிக்கும். பாக்கிய சனியால் முழு பலன் அடைய முன்னோர்கள் வழிபாடு அவசியம். அத்துடன் சாலை ஓரங்களில் ஆதரவின்றி அல்லல்படுபவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி தர வேண்டும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  மிதுனம்

  சனிப்பெயர்ச்சி பலன்கள்

  ஜனவரி 24-ம் தேதி 2020 முதல் 2023 ஆண்டு வரை

  அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி!

  மிதுன ராசி நேயர்களே!

  இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.

  அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்

  டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.

  சனியின் பார்வை பலன்கள்

  உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.

  சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.

  சனியின் பாதசாரப் பலன்கள்

  27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

  28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

  27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.

  குருப்பெயர்ச்சிக் காலம்

  சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

  ராகு-கேது பெயர்ச்சி காலம்

  21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

  வெற்றி பெற வைக்கும் வழிபாடு

  சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

  ×