என் மலர்
மிதுனம்
2025 ஐப்பசி மாத ராசிபலன்
மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.
துலாம்-சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.






