440MP கேமரா உருவாக்கும் சாம்சங்.. நம்பர் விளையாட்டு இப்போதைக்கு முடியாது போலயே..!
- மனித கண்ணுக்கு இணையான திறன் கொண்ட சென்சாரை உருவாக்கி வருவதாக தெரிவித்து இருந்தது.
- புதிய சாம்சங் சென்சார் கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 200MP கேமரா வழங்கியதை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் நான்கு புதிய கேமரா சென்சார்களை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 440MP சென்சாரும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த சென்சார் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
புதிய கேமரா சென்சார் பற்றி டிப்ஸ்டர் ரெவக்னஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் நான்கு வெவ்வேறு கேமரா சென்சார்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதில் 50MP ISOCELL GN6 சென்சார், 1.6 மைக்ரான் பிக்சல்கள், 0.7 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 200MP HP7 சென்சார், 320MP சென்சார் மற்றும் 440MP HU1 சென்சார் உள்ளிட்டவை அடங்கும்.
440MP கேமரா சென்சார் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது ஆட்டோமோடிவ் அல்லது தொழில்துறை பயன்பாடுகளுக்காக உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக 2020 வாக்கில் மனித கண்ணுக்கு இணையான திறன் கொண்ட சென்சாரை உருவாக்கி வருவதாக சாம்சங் தெரிவித்து இருந்தது.
அதிக விவரங்கள் வெளியாகாத நிலையில், 320MP சென்சார் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் வழங்கப்படும் என்று தெரிகிறது. மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9200 பிராசஸர் அதிகபட்சம் 320MP கேமரா சென்சாரை சப்போர்ட் செய்யும் என்பதால், இது கிட்டத்தட்ட பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S25 அல்ட்ரா மாடலில் 0.7 மைக்ரான் பிக்சல்கள் கொண்ட 200MP HP7 சென்சாரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சென்சார் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் உள்ள 200MP சென்சாரை போன்றதாகும். ஆனால், இதில் அளவில் பெரிய பிக்சல்கள் வழங்கப்படுகின்றன. புதிய 50MP ISOCELL GN6 சென்சார் சாம்சங் நிறுவனத்தின் முதல் 1-இன்ச் கேமராவாக இருக்கும் என்று தெரிகிறது.