புதிய கேஜெட்டுகள்

ஐபோன் 14 ப்ரோ அம்சத்தை தட்டித்தூக்க பக்கா பிளான் போடும் ரியல்மி

Published On 2022-09-21 06:08 GMT   |   Update On 2022-09-21 06:08 GMT
  • ரியல்மி நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களில் டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
  • இதனை உறுதிப்படுத்தும் வகையில் வலைதள பதிவை வெளியிட்டு இருக்கிறது.

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ரியல்மி ஆப்பிள் சமீபத்திய ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்த டைனமிக் ஐலேண்ட் போன்ற அம்சத்தை தனது சாதனங்களில் கொண்டு வர இருக்கிறது. இதற்காக பயனர்கள் தங்களின் யோசனைகளை தெரிவிக்கலாம் என ரியல்மி தனது பயனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் வித்தியாசமான அம்சமாக டைனமிக் ஐலேண்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

"கேமரா ஹோல் அருகில் உள்ள யுஐ பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் மாறி அழைப்புகள், அலெர்ட்கள், நோட்டிபிகேஷன் மற்றும் பல்வேறு விவரங்களை காண்பிக்கும்," என ரியல்மி தெரிவித்து இருக்கிறது. இந்த அம்சத்தை கச்சிதமான ஒன்றாக குறிப்பிடும் ரியல்மி தனது பயனர்களிடம் இந்த அம்சத்தை தனது சாதனங்களில் எப்படி கொண்டு வரலாம் என யோசனை வழங்க கோரிக்கை விடுத்து உள்ளது.

"விருப்பமுள்ள பயனர்கள் இந்த அம்சத்தை எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும் என்பதை வரைபடம், ஜிப், எழுத்துக்கள் வாயிலாக தெரிவிக்கலாம். இது எப்படி வேலை செய்யும், காட்சியளிக்கும் எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்கள். உங்களின் யோசனைகளை எங்களின் ரியல்மி யுஐ டெவலப்பர்கள் பரிசீலனை செய்வர்," என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

"உங்களின் கனவு ஐலேண்ட் எப்படி இருக்க வேண்டும்?" என்ற கேள்வியுடன் ஹோல்-பன்ச் கட்-அவுட்-ஐ சுற்றி மஞ்சள் நிற வெளிச்சம் இருப்பது போன்ற படத்தை ரியல்மி வெளியிட்டு உள்ளது. இது எதிர்காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்ற வாசகமும் இடம்பெற்று இருக்கிறது.

இம்மாத துவக்கத்தில் ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது முதல் டைனமிக் ஐலேண்ட் அம்சம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டைனமிக் ஐலேண்ட் டிஸ்ப்ளேவின் மேல்புறம் மாத்திரை வடிவிலான பகுதியில் ஸ்மார்ட்போன் நோட்டிபிகேஷன்களை அழகாக காண்பிக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இந்த அம்சம் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Tags:    

Similar News