திருப்பதி கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் எப்போது நடைபெறும்? - வெளியான தகவல்
- திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் ஆகியோர் கூறியதாவது:-
வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்.
ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் வழங்குதல் மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குதல், சலுகை தரிசன டிக்கெட் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகுண்ட தரிசன பாதையில் உள்ள கேமராக்கள் கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பக்தர்களை கட்டுப்படுத்தி சிரமமின்றி தரிசனத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பதியில் நேற்று 68,075 பேர் தரிசனம் செய்தனர். 26,535 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.