வழிபாடு

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம்- அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்தனர்

Published On 2025-10-28 10:05 IST   |   Update On 2025-10-28 10:05:00 IST
  • விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர்.
  • காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் மேற்கொண்டு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டன.

விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும் மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சண்முகா அர்ச்சனை நடைபெற்றது. இதனை காண உள்ளூர், வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை சொக்கநாதர் கோவில் முன்பு சன்னதி தெருவில் சூரசம்கார லீலை நடைபெற்றது. கந்த சஷ்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 8 மணி அளவில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்ட தேரில் எழுந்தருளினார்.

இதில் காப்பு கட்டி சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் தேரை ரத வீதிகள் மற்றும் கிரிவல பாதையில் வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து தேர் நிலைக்கு வந்தவுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள மயிலுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.

அப்போது விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்களது காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக்கொண்டனர். மாலை 3 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 108 படி அரிசியினால் தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன் மேல் காய்கறிகள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து, பாவாடை தரிசனம் நடைபெறுகிறது.

இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச் செல்வம், பொம்மதேவன், ராமையா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News