புதுச்சேரி

மோசடியில் ஈடுபட்ட பெண்ணையும் அவரை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

ரூ.45½ லட்சம் மோசடி செய்த பெண் கைது

Published On 2022-09-24 09:20 GMT   |   Update On 2022-09-24 09:20 GMT
  • புதுவையை சேர்ந்தவர் 28 வயது பெண்.இவர் கடந்த 20-ந்தேதி ஆன்லைனில் வேலை தேடினார்.
  • அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார்.

புதுச்சேரி:

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.45½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது மகனை தேடி வருகிறார்கள்.

புதுவையை சேர்ந்தவர் 28 வயது பெண்.இவர் கடந்த 20-ந்தேதி ஆன்லைனில் வேலை தேடினார். அப்போது ஒரு வெப்சைட்டில் வெளிநாட்டில் வேலை இருப்பது தெரியவந்தது. உடனே அதில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் அயர்லாந்து நாட்டில் பிரபலமான கம்பெனியில் நிர்வாக அதிகாரி பணி வாங்கி தருவதாக உறுதியளித்தார். அதன்படி ரூ.3½ லட்சம் செலவாகும் என தெரிவித்தார். அதன்படி அந்த பெண்ணும் அந்த தொகையை அந்த நபரிடம் கொடுத்தார். இதே போல் புதுவையை சேர்ந்த 10 பேர் அந்த நபரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்தனர்.

பின்னர் அந்த பெண்ணை நேர்காணலுக்கு டெல்லிக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அந்த பெண்ணும் சென்று சென்றார்.ஆனால் அங்கு விசாரித்தபோது அப்படி யாரும் அழைக்கவில்லை என தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் அந்த நபரை தொடர்பு கொண்ட போது அந்த நபர் சரியாக பதில் அளிக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து அந்த பெண் புதுவை டி.ஜி.பி மனோஜ்குமார் லாலிடம் புகார் அளித்தார். டி.ஜி.பி உத்தரவின் பேரில் குற்ற புலனாய்வு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு,ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலாஜி,ஷியாமளா மற்றும் ஏட்டு முகமத் லியாகத் அலி,சிவசித்தான்,உஷா மற்றும் போலீசார் அருண்குமார், மகினோ,திலீப் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கோயம்புத்தூரில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அதன்படி அங்கு விரைந்த தனிப்படை போலீசார் கடந்த 3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த நாகம்மை என்ற பெண்ணை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் போலி வேலைவாய்ப்பு வெப்சைட் மூலம் புதுவையை சேர்ந்த 10 பேரிடம் சுமார் ரூ.45½ லட்சம் வரை அவரும் அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக மோசடி யில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.

நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட்டுகள்,போலி முத்திரைகள்,அரசாங்க ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நாகம்மையை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அவரது மகன் பிரபாகரனை தேடி வருகிறார்கள். இதற்கிடையே இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஏற்கனவே சென்னை,திருச்சியை சேர்ந்த 25 பேரை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News