புதுச்சேரி

பனித்திட்டு பகுதியில் லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்ட காட்சி.

மாண்டஸ் புயலால் பனித்திட்டு, நரம்பை, பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம்

Published On 2022-12-09 12:48 IST   |   Update On 2022-12-09 12:48:00 IST
  • பாகூர் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக முதல் பலத்த காற்று மற்றும் மழை பல இடங்களில் இருந்துவந்தது.
  • இதன் கரையோர பகுதியில் உள்ள சுமார் 100வீடுகள் பாதிப்பு அடையும் என தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி:

பாகூர் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக முதல் பலத்த காற்று மற்றும் மழை பல இடங்களில் இருந்துவந்தது.

இந்த நிலையில் மேலும் காற்றின் வேகம் அதிகமாக வீசியது. மழை, சாரல் காற்று வீசுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. குறிப்பாக விவசாயம், கட்டுமானம், மீன் பிடி தொழில் பாதிப்படைந்தது.

பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. மீனவ கிராமங்களான மூ. புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு பகுதியில் சுமார் 15அடி அளவுக்கு அலை சீற்றம் எழுந்தது. இதனால் கரை அரிப்பு ஏற்பட்டு கரையே இல்லாதபடி தண்ணீர் புகுந்தது. இந்த அலை சீற்றம் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் கரையோர பகுதியில் உள்ள சுமார் 100வீடுகள் பாதிப்பு அடையும் என தெரிவிக்கின்றனர்.

கரைஅரிப்பு ஏற்பட்டதால் கடற்கரையில் இருந்த 300-க்கும் மேற்பட்ட படகுகளை கரையில் இருந்து தென்னந் தோப்புகளிலும், ஆற்றங் கரைகளிலும் நிறுத்தி உள்ளனர். மேலும் வலைகளை ரோட்டில் வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட பனித்திட்டு, நரம்பை மீனவ கிராம மக்கள் தவித்து வருவதை அறிந்த லட்சுமி காந்தன் எம் எல் ஏ. சம்பஇடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அப்போது நரம்பை மீனவ கிராம மக்கள், கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் புதுவை அரசு மீன் வளத் துறை மற்றும் வருவாய் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக உணவு மற்றும் மீனவர் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் குழு, கமெண்டர் ரவீந்தர் தலைமையில் வந்துள்ளனர். மீட்பு குழூவுடன் பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன், பாகூர், கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

Tags:    

Similar News