புத்தாண்டையொட்டி புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியுள்ளதை படத்தில் காணலாம்.
புதுவையில் களை கட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ள நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
- தெருக்களில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
புதுச்சேரி:
ஆண்டுதோறும் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தது.
இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போதே ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. நகரில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமாகவே உள்ளது.
குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு அவர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, சின்னவீராம்பட்டினம் கடற்கரை, பாரடைஸ் பீச், சுண்ணாம் பாறுபடகு குழாம் என அனைத்து பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
சுற்றுலா பயணிகளின் வருகையால் தற்போதே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. அவர்களை மகிழ்விக்கும் விதமாக கடற்கரை, ஓட்டல்களில் மது விருந்து, இசை நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜோடியாக வருபவர்கள், குடும்பத்துடன் வருவோர் என தரம் பிரித்து விறுவிறுப்பாக டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வாகன நடமாட்டம் அதிகமாக இருப்பதால் நகரப் பகுதியில் மாலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
தெருக்களில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்தை சரிசெய்ய முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர்.