ஓடும் பஸ்சில் நூதன முறையில் புதுவை தம்பதியிடம் ரூ.6 லட்சம் நகை திருட்டு
- பஸ்சில் கைக் குழந்தையுடன் பெண்கள் ஏறி மாணிக்கம் மற்றும் அவரது மனைவி அமர்ந்திருந்த இருக்கை அருகே நின்று பயணம்.
- வீட்டுக்கு சென்றதும் நகை வைத்திருந்த கைப் பையை பார்த்தனர்.
புதுச்சேரி:
புதுவை தர்மாபுரி கலைமகள் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது62). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சம்பவத்தன்று இவரும் இவரது மனைவியும் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தங்களது மகள் வீட்டுக்கு செல்ல புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினர்.
கிழக்கு கடற்கரை சாலை லதா ஸ்டீல் அருகே அதே பஸ்சில் கைக் குழந்தையுடன் 2 டிப்-டாப் பெண்கள் ஏறி மாணிக்கம் மற்றும் அவரது மனைவி அமர்ந்திருந்த இருக்கை அருகே நின்று பயணம் செய்தனர். பஸ் கிண்டியை அடைந்ததும் மாணிக்கமும் அவரது மனைவியும் பஸ்சை விட்டு இறங்கி ஆதம்பாக்கம் செல்லும் டவுன் பஸ்சில் ஏறி மகள் வீட்டுக்கு சென்றனர்.
அங்கு வீட்டுக்கு சென்றதும் நகை வைத்திருந்த கைப் பையை பார்த்தனர். அப்போது கை பையில் வைத்திருந்த 15 பவுன் நகையை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இந்த நகையின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்.
புதுவையில் இருந்து பஸ் சென்னைக்கு செல்லும் இடையில் கைக் குழந்தையுடன் ஏறிய 2 டிப்-டாப் பெண்கள் சில்லறை காசுகளை கீழே வீசி மாணிக்கத்தின் கவனத்தை திசை திருப்பி சில்லறை காசுகளை மாணிக்கம் எடுக்க முயன்ற போது பையில் வைத்திருந்த நகையை அந்த பெண்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நகையை பறி கொடுத்த மாணிக்கம் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் லதா ஸ்டீல் அருகே பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து மாணிக்கம் சென்ற பஸ்சில் ஏறிய டிப்-டாப் பெண்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.