புதுச்சேரி

புதுவையில் அடுத்தடுத்து 2 போலீசார் தற்கொலை

Published On 2023-02-21 06:10 GMT   |   Update On 2023-02-21 06:10 GMT
  • சொந்த காரணங்களுக்காக சில போலீசார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
  • அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனநல டாக்டர்களை கொண்டு காவலர்களுக்கான நலவழி கூட்டத்தை நடத்த வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மடுகரை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையராஜ் (48). கோரிமேட்டில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வந்தார்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவரது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மலையராஜ் நேற்று முன்தினம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்னதாக 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் பணி முடித்து வீடு சென்ற கோரிமேடு போலீஸ் நிலையத்தில் பணி புரிந்த போலீஸ்காரர் நாகராஜ் மனைவியுடன் ஏற்பட்ட தகராரில் மனமுடைந்து வீட்டு பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3 நாட்களில் 2 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவை காவல் துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவலர் நல கூட்டத்தை நடத்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவில், சொந்த காரணங்களுக்காக சில போலீசார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனநல டாக்டர்களை கொண்டு காவலர்களுக்கான நலவழி கூட்டத்தை நடத்த வேண்டும்.

இதற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அதிகாரிகளுக்கு காவல் துறை சார்பில் கேட்டு கொள்ளப்படும். டாக்டரும், போலீசாரும் பேசுவதற்கென போலீஸ் நிலையத்தில் தனி அறை ஒதுக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 23-ந் தேதிக்குள் காவலர் நலவழி கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

26-ந் தேதிக்குள் மனநல மருத்துவருடன் கலந்துரையாடலை முடிக்க வேண்டும். 27-ந் தேதி அனைத்து போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு விரிவான அறிக்கையை தவறாமல் சமர்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த உத்தரவு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News