null
புதுவையில் 2 குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் பரபரப்பு
- மீனவ பஞ்சாயத்தாருக்கு தட்சணாமூர்த்தி குடும்பத்தினர் மரியாதை கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- ஒரு வாரத்துக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவரின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் பரவுகிறது.
புதுச்சேரி:
புதுவை, முத்தியால்பேட்டை, சோலை நகர், செங்கேணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி (37). மீனவரான இவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சமீபகாலமாக தட்சணாமூர்த்தி மீன்பிடிக்க செல்லாமல் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருதரப்புக்கு இடையே மோதல் நடந்தது. இந்த மோதல் விவகாரத்தில் மீனவ பஞ்சாயத்தாருக்கு தட்சணாமூர்த்தி குடும்பத்தினர் மரியாதை கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் சில மாதங்களாக தட்சணாமூர்த்தி குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பஞ்சாயத்தினர் தண்டோரா போட்டு அறிவிப்பு வெளியிட்டதாக. கூறப்படுகிறது.
இதனால் ஊரில் இருப்பவர்கள் யாரும் தட்சணாமூர்த்தி குடும்பத்தினரிடம் பேசாமல் புறக்கணித்தனர் . இதன் காரணமாக தட்சணாமூர்த்தி அப்பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய முடியாமலும், மீன்பிடி தொழிலுக்கு செல்ல செய்ய முடியாமலும் தட்சிணாமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளனர்.
இதற்கிடையே தட்சணாமூர்த்தி வீட்டின் மீது இரவில் கல்வீசுதல், மின்சாரம் துண்டிப்பு, ஜே.சி.பி. மூலம் பள்ளம் தோண்டுதல் என அடுத்தடுத்து இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடந்த வாரம் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் தட்சிணாமூர்த்தி முறையிட்டார். இதையடுத்து அப்பகுதி பஞ்சாயத்தாரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தட்சிணாமூர்த்தி கூறிய குற்றச்சாட்டினை பஞ்சாயத்தார் மறுக்கவே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தெரிகிறது. அதன்பிறகும் தட்சிணாமூர்த்தி குடும்பத்தினருடன் அப்பகுதியினர் சுமூக நிலையை தொடரவில்லை.
மேலும் மன்னிப்பு கேட்குமாறு சிலரால் மிரட்டப்படவே தட்சணா மூர்த்தி குடும்பத்தினர் மனவேதனை அடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு வாரத்துக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த மற்றொரு மீனவரின் குடும்பமும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் பரவுகிறது.
அந்த மீனவரும் தனது மனைவி, குழந்தைகளுடன் அங்கு வசிக்கும் நிலையில் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.