புதுச்சேரி

ஆரோவில் தங்கும் விடுதியில் சென்னை சாப்ட்வேர் என்ஜினீயர் மர்ம மரணம்

Published On 2022-08-12 13:17 IST   |   Update On 2022-08-12 13:17:00 IST
  • கடந்த 2 நாட்களாக ராஜ்குமார் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது.
  • சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவை உள்பக்கமாக பூட்டி இருந்தது.

சேதராப்பட்டு:

சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் ராசய்யா. இவரது மகன் ராஜ்குமார் (வயது 38‌). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் ஆன்லைன் வர்த்தகம் தொழில் செய்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுவை வந்த ராஜ்குமார் பின்னர் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இரவு அறை எடுத்து தங்கினார். மறுநாள் (திங்கட்கிழமை) காலை உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விடுதி அறைக்கு சென்றார். பின்னர் அறையில் லேப்டாப் மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்ததை விடுதி ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் கடந்த 2 நாட்களாக ராஜ்குமார் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவை உள்பக்கமாக பூட்டி இருந்தது.

உடனடியாக இதுகுறித்து விடுதி ஊழியர்கள் ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் சென்று கதவை உடைத்து விட்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மர்மமான முறையில் ராஜ்குமார் இறந்து கிடந்தார். உடல் முழுவதும் எறும்பு மொய்த்த நிலையில் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து ராஜ்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆரோவில் போலீஸ் நிலையத்துக்கு வந்த, ராஜ்குமாரின் உறவினர்களிடம் போலீசார் விசாரித்த போது, ராஜ்குமாருக்கு நீரழிவு நோய், ரத்த அழுத்தம் இருந்ததும் அவர் இன்சுலின் ஊசி செலுத்தி வந்ததாக தெரிவித்தனர். ஆன்லைன் வர்த்தகத்திற்காக புதுவை செல்வதாக புறப்பட்ட ராஜ்குமாரை அவரது மனைவி தடுத்து ஆலோசனை வழங்கினார். ஆனாலும் அதனை மீறி ராஜ்குமார் புதுவைக்கு வந்துள்ளார். ராஜ்குமார் திடீர் மாரடைப்பு அல்லது உடல் நலக்குறைவால் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News