புதுச்சேரி
குருவிநத்தம் தூக்கு பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர்.

தொடர் மின்வெட்டு: கடலூர்-புதுவை சாலையில் 2 இடங்களில் மறியல்

Published On 2022-10-01 05:38 GMT   |   Update On 2022-10-01 05:38 GMT
  • கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  • வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பாகூர்:

புதுவை மின்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனை கண்டித்து பல இடங்களில் பொதுமக்கள் அவ்வப்போது போராட்டங்களில் குதித்துள்ளனர். அதிகபட்சமாக சாலை மறியலில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பாகூர், கன்னியகோவில், கிருமாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் மழை பெய்தது. மழையின் காரணமாக மின்சாரம் நிறுத்தப்பட்டிருந்தது. பிறகு அந்த மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கன்னியகோவில் புதுநகர், வாக்கால்ஓடை ஆகிய கிராமத்தில் இரவு நேரத்தில் மின்சார தடையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் குடிநீர் விநியோகமும் அவ்வப்போது நிறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த புதுநகர் மக்கள் கடலூர்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 7.45 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலின் போது வீட்டில் இருந்த பெஞ்ச், மரப்பொருட்களை ரோட்டில் கொட்டி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தால் வாகனங்கள் மூலம் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

நீண்ட நேரம் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தது. அருகிலுள்ள கல்லூரிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நடந்தே சென்றனர். அதுபோல் தொழிலாளர்களும் நடந்து சென்றனர்.

தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசாரின் உதவியுடன் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நீடித்தது.

இதே போல பாகூர் அடுத்த குருவிநத்தம் தூக்குப்பாலம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் மார்க்சிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 24 பேரை பாகூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல பாகூர் நகரப் பகுதியில் நேற்று இரவு முதல் காலை வரை மின்சாரம் தடைபட்டு இருந்ததால் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதற்குள் மின்விநியோகம் செய்யப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News