புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்- விரைவில் உத்தரவு வெளியாகிறது

Published On 2022-09-24 07:04 GMT   |   Update On 2022-09-24 07:04 GMT
  • இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும்.
  • 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலில் உள்ளது.

இருப்பினும் சிறிய பரப்பிளவிலான புதுவையில் ஹெல்மெட் அணிய நிர்பந்தம் செய்வதில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என கவர்னராக இருந்த கிரண்பேடி அறிவுறுத்தினார்.

அப்போது முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என தெரிவித்தார். இதனால் மோதல் நிலவியது.

இதற்கிடையே இந்தியா முழுவதும் கார்களில் பின் சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என சட்டம் கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் புதுவை காவல் துறையில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணிப்போர் சீட் பெலட் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் தலைமையக கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர் அனைவரும் இருசக்கர வாகனத்தை பயன்படுத்தும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

மேலும் இருசக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். 4 சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பயணிப்பவர்களும் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதுவையில் குறைந்த வயதுடையவர்கள் அதிகளவில் வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குகின்றனர். இந்த ஆண்டு கடந்த ஆகஸ்ட் வரை 82 பேர் இருசக்கர வாகன விபத்தில் இறந்துள்ளனர். இதில் 63 பேர் தலையில் ஏற்பட்ட காயத்தால் இறந்துள்ளனர்.

இதனால் இருசக்கர வாகனங்களை ஓட்டும் சிறுவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்லும்போது பெற்றோர் ஹெல்மெட் அணியும்படியும் புதுவை போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதலில் காவல்துறையில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அரசு ஊழியர்கள் புதுவை மாநில மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதற்காக அனைத்து துறை அரசு ஊழியர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவுகள் விரைவில் துறைவாரியாக வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து புதுவை மக்களிடையே ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

Tags:    

Similar News