அ.தி.மு.க.வில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை- ஓம்சக்தி சேகர் ஆவேசம்
- அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை.
- நாளை இந்த கட்சி மீண்டும் ஒருங்கிணையப் போகிறது.
புதுச்சேரி:
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகரை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என ஓம்சக்தி சேகர் கூறினார். அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து என்னை நீக்க இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லை. அதற்கு ஏற்ற தகுதியும் அவருக்கு இல்லை. ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தான். அவர்தான் என்னை நீக்க வேண்டும்.
பழனிசாமி திறமையான முதல்-அமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளரோடு இணைந்து நல்ல முறையில் அ.தி.மு.க.வை வழிநடத்தி வந்தார். திடீரென சகுனிகளின் கூட்டத்தில் சிக்கியுள்ளார். சதி திட்டம் தீட்டி, உச்சிக்கு கொண்டு செல்வதாக கூறி எடப்பாடி பழனிசாமியை பாதாளத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகின்றனர்.
நாளை இந்த கட்சி மீண்டும் ஒருங்கிணையப் போகிறது. 3 பேர் ஒருங்கிணைந்த பிறகு, 4-வது ஆளாக அவரும் வந்து சேர்வார். எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொண்டுள்ளார். தானாக தற்காலிக பொதுச்செயலாளராக பதவி ஏற்றுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்களும், உங்களிடம் கையூட்டு பெற்றவர்களும்தான் தற்காலிக பொதுச்செயலாளர் என்று அழைப்பர். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை வரப்போகிறது. அதன்பிறகு புதுவை மாநிலத்துக்கு நான் தலைமையேற்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.