புதுச்சேரி

மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள்

அங்காளன் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மறியல்

Published On 2022-09-26 09:11 GMT   |   Update On 2022-09-26 09:11 GMT
  • திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அங்காளன். இவர் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
  • தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

புதுச்சேரி:

திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் அங்காளன். இவர் தற்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார். கடந்த  அங்காளன் புதுவை சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டார். தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார். அவர் நிருபர்களிடம் கூறும் போது என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.

புதுவையில் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என கூறினார். இதற்கு திருபுவனை தொகுதியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

அங்காளனுக்கு எதிர்ப்பு தெரிவித்து என்.ஆர்.காங்கிரசார் திருபுவனை தொகுதியில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். இதனை மர்ம நபர்கள் கிழித்துவிட்டனர். இதனால் என்.ஆர்.காங்கிரசார் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஒன்று திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

அங்காளனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர் இந்த மறியலால் விழுப்புரம்-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்களிடம் திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி போஸ்டர் ஒட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News