புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவை மாணவர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாளர்கள்- அ.தி.மு.க. கடும் கண்டனம்

Published On 2022-11-17 10:24 IST   |   Update On 2022-11-17 10:24:00 IST
  • மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் புதுவை மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது.
  • மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் புதுவை மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதர வாகவே ஆட்சியா ளர்கள் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றி கொண்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூட புதுவை அரசின் ஒதுக்கீடாக பெறாதது பெரும் வெட்கக்கேடான விஷயம்.

இந்த நிலையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூ ரிகளும் ஆண்டுதோறும் பிச்சையிடுவது போல எம்.பி.பி.எஸ். இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட குறைவான இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்கியுள்ளனர்.

மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர். மாணவர்களின் நலனுக்காக காமராஜர் போன்ற பல தலைவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரும் போராட்டத்தை சந்தித்து நற்பெயர் பெற்றுள்ளனர்.

அவர்களின் பெயரை பயன்படுத்தி புதுவையில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாணவ சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவது அநீதி, அக்கிரமத்தின் உச்சம்.புதுவையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் ஒன்றையும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற உச்சகட்ட அதிகாரம் படைத்தவர் அனுமதியளித்து தனியார் மருத்துவ கல்லூரி மீதான தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.

இதேநிலை நீடித்தால் வரும்காலத்தில் புதுவையில் அரசு மருத்துவ கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரியிலும் புதுவை மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடு இடங்கள் கிடைக்காது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவக்கல்வி என்ற கனவு கானல் நீராகவே மாறிவிடும்.

ஆட்சியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து, மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்.

இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News