கோப்பு படம்
வசதி படைத்தவர்களுக்கு சிவப்பு ரேசன் அட்டை -நுகர்வோர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
- புதுவையில் முந்துரிமைப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டிய சிவப்பு அட்டை முந்துரிமைப் பிரிவைச் சேராத அட்டைக்கு தகுதியாக உள்ள குடும்பத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சட்டத்திற்கு புறம்பாக சிவப்பு வண்ண குடும்ப அட்டைகளை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் அமைப்பு பொதுச்செயலாளர் முருகானந்தம் புதுவை கவர்னர் தமிழிசைக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் முந்துரிமைப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டிய சிவப்பு அட்டை முந்துரிமைப் பிரிவைச் சேராத அட்டைக்கு தகுதியாக உள்ள குடும்பத்தினருக்கு அதிக எண்ணிக்கையில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இலக்குபிரிவு மக்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருள்கள் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக அரசு ஊழியர்கள், பெரும் செல்வந்தர்கள், வருமான வரி செலுத்துவோர், நிலசுவாந்தார்கள். மற்றும் முதலாளிகளும் சிவப்பு நிற குடும்ப அட்டை பெற்றுள்ளார்கள்.
இதனால் சட்டத்தின்படி பயனடைய பயனாளிகளுடன் தகுதியற்ற நபர்கள் நிறைய பேர் தொடர்ந்து பயன்பெற்று வருகிறார்கள். எனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான தகுதியை நிர்ணயிப்பதற்கு மத்தியஅரசின் வழிகாட்டுதலையும் சட்டத்தின் அடிப்படையிலும் வரைமுறைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்திட வேண்டும்.
மேலும் சட்டத்திற்கு புறம்பாக சிவப்பு வண்ண குடும்ப அட்டைகளை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.