புதுச்சேரி

புதுவை ரெயில் நிலையத்தில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு மேற்கொண்ட காட்சி.

புதுவையில் இருந்து ஏனாமிற்கு ரெயில்-வைத்திலிங்கம் எம்.பி. முடிவு

Published On 2023-02-15 05:00 GMT   |   Update On 2023-02-15 05:00 GMT
  • புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.
  • ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.

புதுச்சேரி:

புதுவை ரெயில் நிலையத்தில் வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இருந்தபோது புதுவை ரெயில் நிலையத்திற்கு உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், வளர்ச்சிப்பணிகள், புதுவை ரெயில் நிலையத்திற்கு பிற மாநில முக்கிய தலைநகரங்களுடன் இணைப்பு வசதி ஏற்படுத்துவது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் காரணமாக தற்போது புதுவையில் இருந்து மங்களூர், தாதர், டெல்லி, ஹவுரா, புவனேஸ்வர், யஷ்வந்த்பூர், கன்னியாகுமாரி ஆகிய ஊர்களுக்கு ரெயில் சேவை உள்ளது.

இதனால் புதுவைக்கு பயணிகள் வருகை ஆண்டுதோறும் 4.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் தரம் உயர்த்தவும், மேலும் பல முக்கிய ஊர்களுக்கு புதுவையில் இருந்து ரெயில் வசதி ஏற் படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

ஏனாமிற்கு ரெயில் வசதியை ஏற்படுத்தும் நோக்கில் செங்கல்பட்டில் வந்து நிற்கும் காக்கிநாடா ரெயிலை புதுவைக்கு நீட்டிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். புதுவை ரெயில் நிலையத்தில் ெரயில்களை பராமரிக்க கூடுதல் லைன் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதுவையில் ரூ.72 கோடியில் ரெயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த பணியை திட்டமிட்ட காலத்தில் முடிக்கவேண்டும். சென்னையிலிருந்து புதுவை-கடலூர் ரெயில் பாதை குறித்தும் முடிவெடுக்கப்பட வேண்டியுள்ளது. வருகிற மார்ச் 6-ந் தேதி திருச்சியில் தெற்கு ரெயில்வே கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதுவைக்கு தேவையான திட்டங்களை வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News