தமிழ் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் சிவா பேசிய போது எடுத்த படம்.
தமிழை புதுவை அரசு புறக்கணிக்கிறது - எதிர்கட்சித்தலைவர் சிவா குற்றச்சாட்டு
- சமூக ஜனநாயக அமைப்புகள் இணைந்து இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
- தமிழகம் போல புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ. செல்வம் தலைமையில் பல்வேறு தமிழ் மற்றும் சமூக ஜனநாயக அமைப்புகள் இணைந்து இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.
தமிழகம் போல புதுவையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைக்க வேண்டும். தமிழ் மொழி தொடர்பான அனைத்து விருதுகளையும் உடனே வழங்க வேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த பேரணி சட்டசபை அருகே முடிவடைந்தது.
பேரணியை முடித்து வைத்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-
புதுவையில் இன ஒற்றுமையில்லாத ஆட்சி, நம்மை நாமே காட்டிக் கொடுக்கும் ஒரு ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியை மக்கள் கவனித்து வருகின்றனர். தமிழ் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தி மொழி வளர்ச்சிக்கு ரூ.1½ கோடி அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள், மொழி மற்றும் இனத்தை வளர்க்கத்தான் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த விருதுகளும் வழங்கவில்லை. கலை பண்பாட்டுத்துறை நாடகம், கலை நிகழ்ச்சிகளை நடத்தினால் புதுவை, காரைக்காலில் ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர். அதுவே மாகி, ஏனாமில் ரூ.15 லட்சம் தரப்படுகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை வேகமாக புதுவை அரசு அமல்படுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கையை பற்றி என்ன கேட்டாலும் அரசு வாய் திறப்பதில்லை. மாநில பொருளாதாரம் சீரழிந்து வருவதுடன், தாய்மொழி புறக்கணிப்பு செய்வது, நமது அடையாளங்களை மறக்கடிக்கப்படும் சூழலும் உள்ளது.
இது தொடர்பாக கல்வியாளர்கள், பெரியோர், இனம் சார்ந்த உணர்வாளர்களிடம் தெரியப்படுத்தி மக்களை ஒன்றுபடுத்தி எழுச்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.