புதுச்சேரி

புதுவை சட்டசபையில் 2023 ஆண்டுக்கான காலண்டரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார். 

புதுவையில் அரசு காலண்டர் வெளியீடு

Published On 2022-12-31 13:48 IST   |   Update On 2022-12-31 13:48:00 IST
  • புதுவையில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு காலண்டரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டு வந்தது.
  • இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் பெயரில் காலண்டர் அச்சடிக்கும் பணி நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவையில் 3 ஆண்டுக்குப்பிறகு அரசு காலண்டரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டு வந்தது. காகிதம் இல்லாத நிர்வாகத்தின் அடிப்படையில் முன்னாள் கவர்னர் கிரண்பேடி டைரி வெளியிட தடை விதித்தார். இதன் அடிப்படையில் புதுவையில் டைரி மற்றும் காலண்டர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் நடவடிக்கையின் பெயரில் காலண்டர் அச்சடிக்கும் பணி நடைபெற்றது. 3 ஆண்டுக்கு பிறகு காலண்டர் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது.

முதல்-அமைச்சர் ரங்கசாமி காலண்டரை வெளியிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.க்கள், ஏ.கே.டி. ஆறுமுகம், பி.ஆர்.சிவா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

காலண்டர் முகப்பில் புதிய மேரி கட்டிடம், ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை காமராஜர் மணி மண்டபம், சின்ன வீராம்பட்டினம் ஈடன் கார்டன், திருக்காஞ்சி சங்கராபரணி கங்கா ஆரத்ணி , காரைக்கால் பெரிய பள்ளிவாசல், பாரதி பூங்கா வர்த்தக சபை, புதுவை கடலில் படகு சவாரி, மஸ்கராத் நடனம், திருநள்ளாறு ஆன்மீகப் பூங்கா, மாகி கடற்கரை பகுதி, ஏனாம் அம்பேத்கர் விஞ்ஞான் பவன், சித்தேரி படுகை அணை, கப்ஸ் கோயில் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இதில் பெரும்பாலான படங்களை புதுவை புகைப்பட கலைஞர் அருண் எடுத்துள்ளார். இந்த காலண்டர் அனைத்தும் ஒரே நாளில் புதுவை அரசின் அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News