புதுச்சேரி

மியான்மர் நாட்டுக்கு காரைக்கால் என்ஜினீயர் கடத்தி சித்ரவதை- மீட்டு தர கோரி பெற்றோர் மனு

Published On 2022-09-20 09:37 IST   |   Update On 2022-09-20 09:37:00 IST
  • தீபமணி துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
  • சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

காரைக்கால்:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாசுப்பிரமணியன். அவரது மனைவி காத்தம்மாள். இந்த தம்பதியினர் காரைக்கல் கலெக்டர் முகம்மது மன்சூரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

எங்களது மகன் தீபமணி (வயது 30). ஏரோநாட்டிக்கல் என்ஜினியர் படிப்பை முடித்து, கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக துபாய்க்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றார்.

அதன்பின்னர், துபாய் நிறுவனத்தின் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். தாய்லாந்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவருடன் சேர்த்து 30-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை மர்ம கும்பல் மியான்மர் நாட்டிற்கு கடத்திச் சென்று உள்ளனர். அங்கு படிப்புக்குரிய வேலை கொடுக்காமல் சட்டத்துக்கு புறம்பான வேலையை கொடுத்து உள்ளனர். அங்கிருந்து சொந்த ஊருக்கு வரவேண்டும் என்றால் ரூ. 49 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

மேலும் துப்பாக்கி முனையில், அடித்து, உதைத்து அதிக நேரம் கடுமையான வேலை வாங்கி சித்ரவதை செய்து உள்ளனர். சட்டத்திற்கு புறம்பான வேலைகளை செய்யச் சொல்லி வருவதாகவும் எனது மகன் தீபமணி வீடியோ கால்மூலம் தெரிவித்து உள்ளார்.

எனவே மியான்மர் நாட்டில் தவிக்கும் எங்களது மகனை மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News